
வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 29 கழக மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் இளைஞர் அணி நிர்வாகிகள் கூடும் பிரமாண்ட சந்திப்பு நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நடைபெற்றது.
இதில் கழக இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது வருமாறு:-
சேலத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு, இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தினோம். அந்த மாநாட்டின் வெற்றி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலித்தது. அதேபோல், இன்றைய கூட்டத்தின் வெற்றி, 2026 தேர்தலிலும் வெளிப்படும் என்ற நம்பிக்கை எழுந்திருக்கிறது.
திருவண்ணாமலையில் மலை மட்டும் அல்ல; கடலும் இருக்கிறது என்பதற்கு இணங்க கடல்போல் கூடியிருக்கிறார்கள் கழக இளைஞர் அணியினர். பொதுவாக மாநாட்டிற்கு இளைஞர்களைத் திரட்டுவது எளிதான செயல் இல்லை. ஆனால், நம் கழகத்தில் மட்டும்தான் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பையே, மாநாடுபோல கூட்டியுள்ளோம். இது வெறும் கணக்கு காட்டுகிற கூட்டம் இல்லை. எதிரிகளின் தப்புக்கணக்கை சுக்குநூறாக்கும் கூட்டம்.
இங்கு கூடியிருக்கும் கழக இளைஞரணியின் கூட்டம் கொள்கைக் கூட்டம், கட்டுப்பாடு மிக்கக் கூட்டம். கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தை வைத்து யாராலும், எதையும் சாதிக்க முடியாது.தி.மு.கழகம் 76ஆவது ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இந்த 75 ஆண்டுகளில் உடன்பிறப்புகள் களத்தில் இருந்து பின்வாங்கியது இல்லை. ஆதிக்கத்திற்கு அடிபணிந்தது இல்லை. எந்த நிலையிலும் சுயமரியாதையை விட்டுக்கொடுத்தது கிடையாது.
தமிழ்நாட்டு மக்களையும், தமிழினத்தையும் காக்க தோன்றிய இயக்கம் தி.மு.க. கடைசி உடன்பிறப்பு இருக்கிறவரை, சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் இன்ஜின் இல்லாத காராக இன்றைய அ.தி.மு.க இருக்கிறது. பா.ஜ.க என்கிற லாரி, இன்ஜின் இல்லாத காரை கட்டி இழுக்கப் பார்க்கிறது. நீதித்துறையை காப்பாற்ற வேண்டும் என பேசும் எடப்பாடி பழனிசாமி முதலில் பா.ஜ.க.விடமிருந்து காப்பாற்ற வேண்டியது அ.தி.மு.க.வைதான்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.






