Tamilnadu

அந்தமானில் சூறைக்காற்று... தமிழகத்தில் கொளுத்தப்போகும் வெயில்... எச்சரிக்கும் வானிலை நிலவரம்!

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை காலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடனும், பிற்பகலில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.

தர்மபுரி, சேலம், கரூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் காணப்படும்.

எனவே இதன் காரணமாக அடுத்த இரண்டு தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படும் இதன் காரணமாக, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்துவரும் இரு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, கன்னியாகுமரி மாவட்டம் சூரளக்கோடில் 4 சென்டிமீட்டர் மீட்டர் மழையும், தொண்டி, பெரியநாயக்கன்பாளையம், நீலகிரி மாவட்டம் கிளன்மார்கனில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Also Read: “சென்னையின் 4 மண்டலங்களில் வரும் வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ராதாகிருஷ்ணன் IAS எச்சரிக்கை!