ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது, “சென்னையில் அதிகபட்சமாக 290 பேருடன் கொரோனா தொற்று உள்ள மண்டலமாக திரு.வி.க.நகர் முதல் இடத்தில் உள்ளது. அடுத்தபடியாக ராயபுரத்தில் 252 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
புளியந்தோப்பில் மட்டும் 170 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூச்சுத்திணறல், காய்ச்சல், இருமல், சளி இருப்பவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.
தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், கோடம்பாக்கம் ஆகிய பகுதிகள் பெரும் சவாலான பகுதியாக உள்ளது. வரும் வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
முதியவர்கள், சிறுவர்கள், நோயுள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். பேசும் போது எக்காரணம் கொண்டு முகக்கவசங்களை எடுக்கக் கூடாது. மருத்துவமனைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
கிருமிநாசினி தெளிப்பு போன்ற நோய் தடுக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய மருத்துவம், வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் வீடுகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் 25% பேர் முகக்கவசம் அணிவதில்லை. சென்ட்ரல் பகுதிகளில் மாஸ்க் அணியாமல் சாதாரணமாக மக்கள் வெளியே வருவது வருத்தமளிக்கிறது.
கடைகளில் வேலை செய்பவர்கள், உணவு உள்ளிட்ட பொருட்களை டெலிவரி செய்பவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த அழைப்பு விடுத்துள்ளோம்.” என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். சென்னையில் 750 திருமண மண்டபங்களை கையகப்படுத்தி மேலும் தற்காலிக மருத்துவமனை ஏற்படுத்தப்படும்.
4 ஆயிரம் படுக்கைகள் தற்போது உள்ளது. அடுத்த வாரம் மேலும் 6 ஆயிரம் படுக்கை வசதிகள் செய்யப்படும். ஒரு மாதத்திற்குள் 50 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். தனிக் கடைகளுக்கான அனுமதி குறித்து மாநகராட்சியால் விரிவான அறிக்கை வெளியிடப்படும்.
வெளிமாநிலத் தொழிலாளர்கள் 5 ஆயிரம் பேர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்கள் உட்பட பலரும் தமிழக அரசின் ஒப்புதலோடு விரைவில் அனுப்பிவைக்கப்படுவர்” எனக் கூறினார்.