Tamilnadu

“இனியும் ஒரு பாத்திமா உருவாகக்கூடாது” - உயிரிழந்த ஐ.ஐ.டி மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் உருக்கம்!

கடந்த வாரம் ஐ.ஐ.டி.யில் முதுகலை படிப்பு பயின்று வந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ஃபாத்திமா லத்தீப் தற்கொலைக்கு முக்கிய காரணமாக மூன்று பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் அவரது தந்தை அப்துல் லத்தீப் நேற்று தமிழ்நாடு காவல் இயக்குனரிடம் தனது மகள் தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மனு அளித்தார். பின்னர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

Also Read: பாத்திமாவின் மரணத்தில் அவரது தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்!

இந்த நிலையில், பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் மற்றும் அவரது உறவினர்களிடம் தற்கொலை வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி, மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி தலைமையிலான போலிஸார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பின்னர் பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''எனது மகள் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம், அனைத்து ஆவணங்களையும் காவல்துறை வசம் அளித்துள்ளோம்.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உறுதி அளித்துள்ளது. விசாரணையில் எனது மகள் பாத்திமாவின் மரணத்தில் உள்ள உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு பாதுகாப்பானதாக இருக்கும் என்று நம்பித்தான் எனது மக்களை சென்னைக்கு அனுப்பினேன். கல்லூரியில் நடைபெற்ற அனைத்து தேர்விலும் முதல் இடம் எடுத்தார் பாத்திமா.

எனது மகள் மரணத்தைப் போன்று இன்னொரு சம்பவம் நடக்கக்கூடாது. குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றால் தொடர்ந்து பாத்திமாக்கள் உருவாகிக் கொண்டிருப்பார்கள்.'' எனத் தெரிவித்தார்.

Also Read: “சென்னை ஐஐடி வளாகம் ஒரு உயரடுக்கு சாதியவாத, இனவாதம் பேசும் வன்முறைக்கூடம்”- IIT மாணவியின் பேஸ்புக் பதிவு!