Politics

மக்களின் வரிப்பணத்தை முற்றிலும் வீணடிக்கும் ஒன்றிய அரசு: மோடி Selfie Pointக்கு ரூ.1.62 கோடி செலவு!

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் பிரதமரின் செல்பி பாய்ண்டுகள் குறித்து ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரியான அஜய் போஸ் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே வாரியம் பதிலளித்துள்ளது.

அதில், GFX ரயில் நிலையங்களில் பிரதமர் மோடி படத்துடன் அமைக்கப்படும் நிரந்தர செல்ஃபி பாய்ண்டுகளுக்கு 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், தற்காலிக செல்ஃபி பாய்ண்டுகளுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேராடூன், அம்பாலா, டெல்லி, அமிர்தசரஸ், அயோத்தி, சண்டிகர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்ஃபி பாய்ண்டுகள் அமைக்கப்படும் என்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட மற்றோரு கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், திருச்சி, தஞ்சை, திருவாரூர், வேலூர் உள்ளிட்ட 11 ரயில் நிலையங்களில் பிரதமரின் 3டி செல்பி புகைப்படக் கூடங்கள் அமைக்கப்பட உள்ளதும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

மத்திய மண்டலத்தில் மட்டும் இவ்வளவு பெரிய தொகை என்றால், நாடு முழுவதும் உள்ள 18 ரயில்வே மண்டலங்களிலும் இத்தைகய செல்பி பாய்ண்ட் வசதி ஏற்படுத்தப்பட்ட எத்தனை கோடிகள் தேவைப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது.

ரயில்வே துறையில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணச்சலுகை நிறுத்தப்பட்டுவிட்டது. 2022-23 நிதியாண்டில் மட்டும் மூத்த குடிமக்களுக்கான கட்டணச்சலுகை இல்லாததால், ரயில்வே துறைக்கு 2 ஆயிரத்து 242 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது. ஆனால்,

மக்களுக்கான சலுகைகளை பறித்துவிட்டு, மக்களின் வரிப்பணத்தை மோடி அரசு சுய விளம்பரங்களுக்கு பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் செல்ஃபி பாய்ண்டுகள் அமைக்கப்படுவது, மக்களின் வரிப்பணத்தை முற்றிலும் வீணடிக்கும் செயல் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

மாநிலங்களுக்கான வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் வழங்கவில்லை, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கான MGNREGA நிதியும் நிலுவையில் உள்ளது, ஆனால் மலிவான தேர்தல் விளம்பரங்களுக்கான மக்களின் வரிப்பணத்தை மோடி அரசு தாராளமாக செலவு செய்வதாக கார்கே விமர்சித்துள்ளார்.

மக்கள் வரிப்பணத்தில், பிரதமரும், பாஜகவும் சுய விளம்பரம் தேடிக் கொள்வதாக நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் விமர்சித்துள்ளார். அரசு வளங்களை ஒன்றிய பா.ஜ.க அரசு தவறாக பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமரின் செல்பி பாய்ண்டுகளுக்கு ரயில்வே அதிக நிதி ஒதுக்கியதற்கு சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் ரயில் சேவைகளுக்கு அதிக கட்டணம் செலுத்தி வருகின்றனர், ஆனால் ரயிலில் பயணம் செய்யும் போது ஏற்பட்ட மோசமான அனுபவத்தை யாரோ ஒருவர் பகிர்ந்து கொள்ளாமல் ஒரு நாள் கூட இருப்பதில்லை என்றும் சதுர்வேதி கூறியுள்ளார்.

Also Read: ”வானிலை ஆய்வு மையம் துல்லியமாக சொன்னதாக பொய்ச் சொல்லிக் கொண்டு இருக்கும் எதிர்க்கட்சியினர்” : முரசொலி!