முரசொலி தலையங்கம்

”வானிலை ஆய்வு மையம் துல்லியமாக சொன்னதாக பொய்ச் சொல்லிக் கொண்டு இருக்கும் எதிர்க்கட்சியினர்” : முரசொலி!

வானிலை ஆய்வு மையம், இந்தளவுக்கு மழை பெய்யும் என்று எச்சரிக்கவில்லை என்பதே உண்மை.

”வானிலை ஆய்வு மையம் துல்லியமாக சொன்னதாக பொய்ச் சொல்லிக் கொண்டு இருக்கும் எதிர்க்கட்சியினர்” : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி (27-12-2023)

துல்லியமாகச் சொன்னார்களா?

“மழை பற்றி 12 ஆம் தேதியே எச்சரித்தபிறகும் தமிழ்நாடு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?” என்று எதுவும் தெரியாத சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மழை பெய்யும் என்று சொன்ன வானிலை ஆய்வு மையம், இந்தளவுக்கு மழை பெய்யும் என்று எச்சரிக்கவில்லை என்பதே உண்மை.

“தென் மண்டல வானிலை ஆய்வு மையம் சென்னையில்தான் உள்ளது. இந்த அலுவலகம் சார்பில் தென் மாநிலங்களுக்கான மழை அபாயம் குறித்து 12 ஆம் தேதியே தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் 14 முதல் 16 வரையிலான மழை அறிவிப்பு இருந்தது. இது அதிநவீன மையம் என்பதால் அடுத்த 5 நாட்களுக்கான மழை குறித்து அறிந்து எச்சரிக்கை தருகின்றனர். இது தவிர ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கும் மழை எச்சரிக்கையும் அளிக்கப்பட்டு வருகிறது. தங்களுக்கு முன்னெச்சரிக்கை கிடைக்கவில்லை என்று கூறுபவர்கள் இதை மனதில் வைப்பது அவசியம். அங்கு டோப்ளர் எனும் 3 அதிநவீன கருவிகள் உள்ளன. மழை பற்றி 12 ஆம் தேதியே அளித்த எச்சரிக்கைக்குத் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? கனமழை பெய்யும் என்று முன்கூட்டியே எச்சரித்தும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கவில்லை” என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டி இருக்கிறார்.

டிசம்­பர் 12 ஆம் தேதி வானிலை ஆய்வு மையம் என்ன சொன்னது?

நாள்: 12-.12.-2023 நேரம்: 12:30 மணி வானிலை தகவல்:

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

* 12.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

* 13.12.2023 மற்றும் 14.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

* 15.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

”வானிலை ஆய்வு மையம் துல்லியமாக சொன்னதாக பொய்ச் சொல்லிக் கொண்டு இருக்கும் எதிர்க்கட்சியினர்” : முரசொலி!

* 16.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

* 17.12.2023 மற்றும் 18.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

– இயக்குனர் தென் மண்டல தலைவருக்காக மண்டல வானிலை ஆய்வு மையம், சென்னை - வெளியிட்ட அறிக்கை இது. மதியம் 12.30க்கும் வெளியான அறிக்கை இது. இரவு 7 மணிக்கும், 10 மணிக்கும் வெளியிட்ட அறிக்கையில் ‘கனமழை’ இருக்கும் என்றார்கள்.

* கனமழை என்றால் மஞ்சள்

* மிக கனமழை என்றால் ஆரஞ்ச்

* அதி கனமழை என்றால் சிவப்பு வண்ணத்தில் வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிடும். ஆனால் 12 ஆம் தேதி வெளியான அறிக்கையில் சிவப்பு நிறம் இல்லை, மஞ்சளில்தான் வெளியிட்டார்கள்.

நெல்லை, தூத்துக்குடியில் பெய்த மழை அளவு எவ்வளவு?

17 ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 48 செ.மீட்டரும், திருச்செந்தூரில் 36 செ.மீட்டரும், கோவில்பட்டியில் 36 செ.மீட்டரும் பெய்தது. இதே போல் நெல்லை மாவட்டத்தில் 25 முதல் 35 செ.மீட்டர் மழை பெய்தது.

18 ஆம் தேதி காயல்பட்டினத்தில் 95 செ.மீட்டருக்கு மழை பெய்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையைச் சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களிலும் 39 இடங்களில் அதிகனமழை பெய்தது. 33 இடங்களில் மிக கனமழை பெய்தது. 12 இடங்களில் கனமழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக 62 செ.மீட்டர் மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக 38 செ.மீட்டர் மழை பெய்தது. இவை வானிலை ஆய்வு மையமே எதிர்பாராதது ஆகும்.

”வானிலை ஆய்வு மையம் துல்லியமாக சொன்னதாக பொய்ச் சொல்லிக் கொண்டு இருக்கும் எதிர்க்கட்சியினர்” : முரசொலி!

18 ஆம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானிலை மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், “பொதுவாக புயல், தாழ்வு மண்டலம், தாழ்வுப் பகுதி போன்ற நிகழ்வுகள் வரும் போதுதான் அதிகனமழை இருக்கும். ஆனால் வளிமண்டல சுழற்சி உருவாகி, அதில் அதிகனமழை வரை இப்போது பெய்திருக்கிறது. இது போல் பெய்தது இல்லை” என்று சொன்னார். ( தினத்தந்தி 19.12.2023)

வானிலை ஆய்வு மையம் சொன்னது ‘கனமழை’ மட்டும் தான். ஆனால், பெய்தது – ‘மிக கனமழை’யையும் தாண்டிய ‘அதிகனமழை’ ஆகும். ‘இது போல் பெய்தது இல்லை’ என்று பாலச்சந்திரனே சொல்லிவிட்டார்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் அளித்துள்ள பேட்டியில், “வானிலை ஆய்வைப் பொறுத்தவரையில் துல்லியம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வானிலை என்பது நொடிக்கு நொடி மாறக்கூடியது. சில தரவுகள், முன் அனுபவங்கள் மூலமாகக் கணிக்க முடியும். மழையைக் கணிக்கும் அளவுகோலின் உச்சபட்ச அளவே 20 செண்டி மீட்டர் தான். அதற்கு மேல் மழை என்றால் 20க்கும் மேல் என்று சொல்வதுதான் நடைமுறையில் இருக்கிறது. அதைத் தான் ரெட் அலர்ட் என்கிறோம். அது 30 செ.மீ., 40 செ.மீ. ராக இருக்கலாம். துல்லியமாகச் சொல்ல முடியாது. இவை எல்லாம் முன்னறிவிப்புகள், கணிப்புகள் மட்டும்தான்” என்று சொல்லி இருக்கிறார். ( ஜூனியர் விகடன் 27.12.2023)

ஆனால் துல்லியமாகக் கணித்ததாகவும், துல்லியமாகச் சொன்னதாகவும் துல்லியமாக துணிச்சலாகப் பொய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

banner

Related Stories

Related Stories