தமிழ்நாடு

விவசாயிகளின் உரிமைக்கான ”அரிசி” படம் நிச்சயம் வெல்லும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

முத்தரசன் மட்டுமல்ல, சமுத்திரகனி அவர்களும் கம்யூனிசக் கொள்கைகளை உணர்ந்தவர், அதைத் தொடர்ந்து பேசக்கூடியவர் தான்.

விவசாயிகளின் உரிமைக்கான ”அரிசி” படம் நிச்சயம் வெல்லும்  : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற்ற தோழர் இரா.முத்தரசன், நடிகர் சமுத்திரகனி ஆகியோர் நடித்த ”அரிசி” உயிரின் மறுபெயர் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை:-

இன்று நம்முடைய முத்தரசன் அவர்கள் நடித்துள்ள திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் இந்தத் திரைக்குழுவினருக்கு நம் அனைவருடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், பொதுவாகவே இந்த மாதிரி டிரெய்லர் வெளியீடு, இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளையெல்லாம் மிக பிரம்மாண்டமாக ஏதாவது ஒரு நட்சத்திர விடுதியில் நடத்துவார்கள், அப்படி இல்லையென்றால் ஒரு மிகப்பெரிய திரையரங்கத்தில் நடத்துவார்கள். ஆனால் அரிசி படக்குழுவினர் இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கட்டிய இந்த வள்ளுவர் கோட்டத்தில் நடத்தியிருக்கிறார்கள். அதற்கு முதலில் என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சராக நான் பொறுப்பேற்று, கடந்த நான்கு ஆண்டுகளாகத் திரைத்துறை சம்பந்தமாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதே கிடையாது. யார் எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும், "இல்லைங்க, நான் கலந்துகொள்வது கிடையாது" என்று சொல்லிவிடுவேன். ஆனால் முத்தரசன் அவர்கள் அழைக்கும் போது என்னால் அதைத் தட்டிக்கழிக்க முடியவில்லை. "நீங்கள் தேதியைச் சொல்லுங்கள், நான் வந்துவிடுகிறேன்" என்றேன். பிறகு நேரம் கேட்டார், நான் சொன்னேன் "நேரத்தையும் நீங்களே சொல்லுங்கள் அண்ணே, நான் நிச்சயம் வந்துவிடுகிறேன்" என்று அவரால் அழைக்கப்பட்டு, இழுத்து வரப்பட்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.

நேற்று அரசு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு அரசு சார்பாகத் திரைப்பட விருதுகள் பல ஆண்டுகளாகக் கொடுக்கப்படாமல் இருந்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 10 ஆண்டுகளாக கொடுக்கப்படாமல் இருந்து, நம்முடைய முதலமைச்சர் அதற்காக ஒரு குழு அமைத்து 2015-லிருந்து 2022-ஆம் ஆண்டு வரைக்கும் திரைப்பட விருதுகளைக் கொடுப்பதற்கான அந்த வாய்ப்பு கிடைத்தது. நான் திரைத்துறையிலிருந்து வெளியே வந்து இன்றைக்கு மக்கள் பணி ஆற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நம்முடைய, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் அவர்கள் இன்றைக்கு மக்கள் பணியிலிருந்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகியிருக்கிறார்.

அவர் சினிமா துறைக்கு வந்திருந்தாலும், இந்தப் படம் எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றாலும் நிச்சயம் மக்கள் பணிக்குத்தான் அவர் முதலில் முக்கியத்துவம் கொடுப்பார். அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம். அவர் சினிமாவின் உச்சத்திற்குப் போனாலும், தனது பணியின் உச்சத்திற்குப் போனாலும் அவர் எப்போதுமே விரும்புவது மக்களோடு மக்களாக இருப்பதுதான் என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அரசியலில் இருந்து சினிமாவிற்கு வந்திருக்கக்கூடிய முத்தரசன் அவர்களுக்கு நானும் சில காலம் திரைத்துறையில் இருந்தவன், முன்னர் திரைத்துறையில் இருந்தவன் என்கிற வகையில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களுக்காகப் பல ஆண்டுகள் களப்போராளியாக உழைத்தவர்தான் முத்தரசன் அவர்கள். இப்பொழுது திரையிலும் மக்களின் உரிமைகளை பேச வந்திருக்கின்றார். அதுவும் இந்தப் படத்தில் குறிப்பாகச் சிறப்பாக விவசாயியாக அவர் நடித்திருக்கிறார். அந்தப் போஸ்டர், டிரெய்லர், பாடல்களையெல்லாம் பார்க்கும் பொழுது இயல்பிலேயே அவர் ஒரு விவசாயி என்பதால், விவசாயியாக நடித்திருக்கிறார் என்பதைச் சொல்வதை விட ஒரு விவசாயியாக அவர் வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் அதை நிச்சயம் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியும்.

முத்தரசன் மட்டுமல்ல, இங்கு சமுத்திரகனி அவர்களும் கம்யூனிசக் கொள்கைகளை உணர்ந்தவர், அதைத் தொடர்ந்து பேசக்கூடியவர். விவசாயிகளின் உரிமைக்காகக் கம்யூனிஸ்டுகள் களத்தில் இறங்கினால் நிச்சயம் அதில் எப்போதுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள், இந்த முறையும் வெற்றி பெறுவார்கள். இந்தப் படமும் அதேபோல நிச்சயமாக ஒரு வெற்றிப் படமாக அமையும்.

விவசாயிகளின் உரிமைக்கான ”அரிசி” படம் நிச்சயம் வெல்லும்  : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

இந்தப் படத்தின் தலைப்பு "அரிசி: உயிரின் மறுபெயர்" என்று வைத்துள்ளார்கள். இந்த அரிசிக்காக ஒரு காலத்தில் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள். பண்ணையார்களிடம் வாழ்க்கை முழுவதும் அடிமையாக இருந்தார்கள். காலமெல்லாம் வயலிலேயே வேலை பார்த்தாலும் அவர்களுக்கு ஒரு நேரச் சாப்பாட்டிற்குக்கூட வழியில்லாமல் இருந்தது. அப்படிப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் உரிமைக்காகக் களத்தில் இறங்கிக் கம்யூனிஸ்டுகள் இதுவரைக்கும் எத்தனையோ போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள், அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

அதனால்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார், "நான் மட்டும் தந்தை பெரியார் அவர்களையும் பேரறிஞர் அண்ணா அவர்களையும் என்னுடைய வாழ்க்கையில் சந்திக்காமல் இருந்திருந்தால், நானும் ஒரு கம்யூனிசத் தோழராக மாறி இருப்பேன்" என்று கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்.

அப்படிப்பட்ட கலைஞர் அவர்கள்தான் 1969-இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு ஏழை எளிய மக்களுக்கு அரிசி கிடைப்பதற்கான எல்லா வழிகளையும் செய்து கொடுத்தார். ஒரு படி அரிசிக்காக யாரும் இன்னொருவர் வீட்டு வாசலுக்கு சென்று காத்து நிற்கக் கூடாது என்று அந்த நிலைமையைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர் டாக்டர் கலைஞர் அவர்கள். இன்னும் சொல்லப்போனால், 2006 சட்டமன்றத் தேர்தலின்போது கலைஞர் அவர்கள் ஒரு தேர்தல் வாக்குறுதியை கொடுத்தார், "இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி" என்று முதல் முதலில் அறிவித்தவர் அவர்தான். அது அந்த காலத்தில் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஏனென்றால் அந்த காலத்தில் பல குடும்பங்களுக்கு அரிசிச் சோறு என்பது மிகப்பெரிய ஒரு கனவாக இருந்தது. அந்த கனவை நனவாக்கியவர் டாக்டர் கலைஞர் அவர்கள். பின்னர் அந்த இரண்டு ரூபாயை ஒரு ரூபாயாகவும் அவர் குறைத்தார். அதன் அடுத்த கட்டமாகத்தான் இன்றைக்கு விலையில்லா அரிசியும் வழங்கப்படுகின்றது.

மக்களுடைய அடிப்படைத் தேவையான இந்த அரிசிப் பிரச்சினையைப் போக்கியவர் டாக்டர் கலைஞர் அவர்கள், எனவே அந்த வகையில் விவசாயிகளின் உரிமைக்கான இந்தப் படம் நிச்சயம் வெல்லும் என்கிற அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. முத்தரசன் அவர்களின் அரசியல் களப்பணியும் அதேபோல கலைப் பணியும் மேன்மேலும் சிறக்கட்டும் என்று உங்கள் அனைவரின் சார்பாக வாழ்த்துகிறேன்.

இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், இயக்குனர், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நம் அனைவரின் சார்பாக என்னுடைய வாழ்த்துக்களைக் கூறி, இந்தச் சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த முத்தரசன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்! என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories