தமிழ்நாடு

வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!

உதகையில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்த தந்தை மகனை போலிஸார் கைது செய்துள்ளனர்.

வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நேபாள நாட்டைச் சேர்ந்தவர் முனி சவுத். இவர் திருமணமாகி, தன் குடும்பத்துடன் நீலகிரி மாவட்டம் உதகைக்குக் குடிபெயர்ந்து கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறார். முனி சவுத்தும், இவருடைய மகன் கோகுல் சவுத்தும் கட்டிட வேலை மற்றும் விவசாயக் கூலி வேலை செய்து வந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, முனி சவுத் கஞ்சா விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் முனி சவுத் மற்றும் கோகுல் சவுத் ஆகிய இருவரையும் காவல்துறையினர் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகுல் சவுத் தன் வீட்டின் அருகில் புதர் போல் இருந்த பகுதியைச் சுத்தம் செய்துள்ளார். அப்பகுதியில் இருந்த சில செடிகள் வித்தியாசமாக இருந்ததாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அத்தகவலின் அடிப்படையில், டி.எஸ்.பி கோபாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ஆய்வாளர் அன்பரசு, உதவி ஆய்வாளர் நித்தியானந்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, அங்கு 6 கஞ்சா செடிகளை அவர்கள் வளர்த்து வந்தது தெரியவந்தது. அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த அந்தக் கஞ்சா செடிகள், சுமார் 19 கிலோ எடை கொண்டதாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, முனி சவுத், கோகுல் சவுத் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நேபாள நாட்டிலிருந்து கஞ்சா விதைகளை வாங்கி வந்து உதகையில் பயிரிட்டது தெரியவந்தது.

மேலும், வயிற்று வலி தொடர்பான பிரச்சினைகளுக்குக் கஞ்சா மருந்தாகப் பயன்படுவதாகக் கூறி, அவர்கள் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்ததும் கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

banner

Related Stories

Related Stories