
”ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! தயவுசெய்து வீரவசனம் வேண்டாம்” என ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில், த.வெ.க அரசுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் “ஆசிரியர் தகுதித் தேர்வு”(TET) கட்டாயம் என 01.09.2025 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
“ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கும், பணியில் தொடர்வதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம்” எனவும், “இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுதல் அவசியம்” என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மூத்த ஆசிரியர்களைப் பாதுகாக்கும் வகையில், திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் நம் கழகத் தலைவர்
மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தீர்ப்பு வந்த மறுநாளே, எனது தலைமையில் உடனடியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களை அழைத்து இரண்டு முறை விரிவான கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினோம். ஒரு ஆசிரியர் கூட உச்சநீதிமன்ற தீர்ப்பினால் பாதிக்கப்படாத வகையில் தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்குத் துணை நிற்கும் என்ற உத்தரவாதத்தை வழங்கியதால், ஆசிரியர்கள் மனச்சுமையின்றி பணியாற்றும் சூழலைத் திராவிட மாடல் அரசு உருவாக்கியது.
மேலும், அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களோடு நானும் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகளும் உடனடியாக ஆலோசனை நடத்தினோம். தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்வது என்றும், மூத்த ஆசிரியர்கள் ஒருவர் கூட பாதிக்கப்படாமல் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாதுகாக்கும் என்றும், ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கத் திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரிவான அறிக்கையின் மூலம் தெரிவித்தார்கள்.
உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு சீராய்வு மனுவினைத் தாக்கல் செய்வதற்கு, ‘வில்சன் அல்ல வின்சன்’ என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. வில்சன் உள்ளிட்ட வழக்கறிஞர்களோடு தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
திராவிட மாடல் அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் இதுகுறித்து ஆலோசனை வழங்கினார். “இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களைப் பாதுகாக்கப் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர வலியுறுத்த வேண்டும்” என்கிற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் சட்டத்திருத்தம் குறித்து வலியுறுத்தினார்கள். இத்தகைய தொடர் நடவடிக்கைகள் மூலமாக ஆசிரியர் சமூகத்தைக் காத்து வந்தது தி.மு.க அரசுதான் என்பது ஆசிரியர்கள் அனைவரும் நன்கு அறிவர்.
இத்தகைய நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையில், ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, மேலும் ஓராண்டு காலநீட்டிப்பும் வழங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பதவி உயர்வுக்குத் தகுதித் தேர்வு கட்டாயம் என்பதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளால், ஆரம்பப் பள்ளித் தலைமை ஆசிரியர் முதல் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பதவி உயர்வுகள் வழங்கப்படாததால் நிர்வாகப் பணியிடங்களில் சுணக்கம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது பல ஆண்டுகால அனுபவமுள்ள மூத்த ஆசிரியர்களுக்குப் பெரும் சுமையாகவே அமையும்.
திராவிட மாடல் அரசின் சிறப்பு முயற்சியால் “ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்காக சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும்” என்று அரசாணை: 231, நாள் 25.10.2025 அன்று வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆசிரியர்களின் நலன் கருதி, தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணில் 5 சதவீதத் தளர்வும் வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான ஆசிரியர்கள் பயன்பெற்றுள்ளார்கள்.
மேலும், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து ஆசிரியர்களுக்கும் உதவிடும் வகையில், அதற்கான பயிற்சிக் கட்டகங்கள் (Training Modules) தயாரிக்கும் பணி மற்றும் இணையவழிப் பயிற்சி வழங்கும் பணியானது, ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம் (SCERT) ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், ஜூலை மாதம் முதல் வாரம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில், இதுவரை ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கட்டகங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இணையவழிப் பயிற்சி குறித்தும் எவ்வித அறிவிப்பும் இல்லை.
ஆகவே, ‘ரீல்ஸ்’ அரசாகத் திகழும் இன்றைய தமிழ்நாடு அரசு வீரவசனம் பேசி அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுபோல, இவ்விரண்டையும் எளிதாகக் கடந்து சென்றுவிடாமல் உடனடியாக நம்முடைய ஆசிரியர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஒன்றிய அரசை வலியுறுத்தி, பாராளுமன்றத்தில் சிறப்புச் சட்டத்திருத்தம் கொண்டு வரச்செய்து, தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுமைக்குமாகப் பணியில் உள்ள மூத்த ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிற்சிக் கட்டகங்கள் மற்றும் இணையவழிப் பயிற்சி குறித்தும் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
எங்கள் குடும்ப உறுப்பினர்களான ஆசிரியர்களுக்கு எப்போதும் நாங்கள் துணை நிற்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.






