
பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் நாடு முழுவதும் எத்தனை செயல்பட்டு வருகின்றன, அவற்றில் இந்திய மொழிகளுக்காக எத்தனை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பாக சிபிஐ(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி பதிலளித்துள்ளார்.
அமைச்சரின் பதிலில், இந்தியா முழுமையும் 14,500 பள்ளிகளைப் பி.எம்.ஶ்ரீ திட்டத்தின் கீழ் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் இதுவரை 13,092 பள்ளிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியல்லாத மொழிகளில் ஆசிரியர்கள் எவ்வளவு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கேட்டதற்கு, சமஸ்கிருத ஆசிரியர்கள் 6,102 பேரும், உருது ஆசிரியர்கள் 1,994 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில மொழிகளுக்கு 9,152 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி., "பி.எம்.ஶ்ரீ திட்டம் என்பதில் நாங்கள் மும்மொழியை வலியுறுத்துவது இந்திய மொழிகளை, மாநில மொழிகளை வளர்ப்பதற்கே என்று ஒன்றிய ஆட்சியாளர்கள் வாய் பந்தல் போட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த பதிலில் சமஸ்கிருத ஆசிரியர்களே அதிக அளவில் 6,102 பேர் நியமிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளிலேயே மிகக் குறைவான பேர் அதாவது 24,821 பேர் மட்டுமே அதாவது 0.002 சதவீதம் பேர் பேசுகிற சமஸ்கிருதத்திற்கு 6,102 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது சாக்குக்குள் ஒளிந்திருக்கும் பூனை சமஸ்கிருதம் என்பதைத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது.

இரண்டாவது மொழியாக, மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தைப் பேசுபவர்களைச் சேர்த்தால் கூட ஒரு சதவீதம் கூட வரவில்லை. கால் சதவீதமே ஆகும். ஒளியாத பூனையாக இந்தி ஏற்கனவே சுற்றி வந்து கொண்டிருக்கிறது.
அவிழ்த்துவிட்ட கதைகள்;
அமைச்சரின் பதிலில் மாநில மொழி என தரப்பட்டுள்ள எண்ணிக்கை அந்தந்த மாநிலத்தின் மொழிகள் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. காரணம் மொழி வாரியாக பட்டியல் என்றே பதிலில் தரப்பட்டுள்ளது. வேறு மாநில மொழிகள் எனில் அந்த விவரம் தரப்பட்டிருக்கும்.
மத்தியப் பிரதேசத்தில், ராஜஸ்தானில், உத்தரப் பிரதேசத்தில் தமிழ் மூன்றாம் மொழியாக வரலாம் என்றெல்லாம் இங்கு கதைகளை அவிழ்த்து விட்டார்கள். ஆனால் சமஸ்கிருத ஆசிரியர்கள் மத்தியப் பிரதேசத்தில் 1,211 பேர். இது அங்குள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை விட அதிகம் (944 பள்ளிகள்). ஒரு பள்ளிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பீகார், ஒடிசா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களின் பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் அனைத்திலும் சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர்.
தாய்மொழியைப் பாதுகாத்து வளர்ப்பதுதான் புதிய கல்விக் கொள்கையும், பி.எம்.ஶ்ரீ பள்ளிகளும் என்று பெருமை பேசும் பிரதமர் மோடியின் மும்மொழிக் கொள்கையை இந்தப் புள்ளிவிபரம் முழுமுற்றாக அம்பலப்படுத்திவிட்டது.” எனத் தெரிவித்துள்ளார்.






