மு.க.ஸ்டாலின்

தனது கட்சிக்கு அழைத்த MGR.. துரைமுருகன் சொன்ன அந்த பதில்.. -நினைவுகளை பகிர்ந்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார்.

தனது கட்சிக்கு அழைத்த MGR.. துரைமுருகன் சொன்ன அந்த பதில்.. -நினைவுகளை பகிர்ந்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கழக பொதுச்செயலாளர், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் – சாந்தகுமாரி இணையரின் பெயர்த்தியும், கதிர் ஆனந்த் எம்.பி. – சங்கீதா இணையரின் மகளுமான செந்தாமரை – தீபக் ரவி ஆகியோரின் திருமண விழாவில் பங்கேற்று, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார்.

தொடர்ந்து இந்த நிகழ்வில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு :-

இன்று தமிழ்நாட்டில் ஒரு மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருப்பவர் அண்ணன் துரைமுருகன் அவர்கள். நம்முடைய கழகத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருக்கும் நம்முடைய அருமை அண்ணன் துரைமுருகன் அவர்களின் பேத்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி கதிர் ஆனந்த் - சங்கீதா இணையரின் அருமை மகள் செந்தாமரைக்கும், திட்டக்குடி ரவி கண்ணன் - தீபா ரவி தம்பதியின் அருமை மகன் தீபக் ரவி அவர்களுக்கும் மணவிழா நிகழ்ச்சி நடந்தேறியிருக்கிறது.

இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து வாழ்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். காரணம், கழகத் தலைவராக மட்டும் நான் வந்து வாழ்த்தவில்லை; அண்ணன் துரைமுருகன் அவர்களின் குடும்பத்தில் நானும் ஒருவன் என்ற உரிமையின், உறவின் அடிப்படையில் நான் வாழ்த்துவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

தனது கட்சிக்கு அழைத்த MGR.. துரைமுருகன் சொன்ன அந்த பதில்.. -நினைவுகளை பகிர்ந்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

எத்தனையோ அரசியல் தலைவர்களை பார்த்தவர்; எத்தனையோ அரசியல் தலைவர்களிடத்தில் பழகியவர்; எத்தனையோ தேர்தல் களத்திலும் ஈடுபட்டவர்; அவ்வாறு ஈடுபடுகிற நேரத்தில் எத்தனையோ தோல்விகளை, வெற்றிகளை சந்தித்தவர் அண்ணன் துரைமுருகன் அவர்கள்.

இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், எத்தனையோ சட்டமன்ற விவாதங்களில் பங்கேற்று அழுத்தமாக ஆணித்தரமாக உரையாற்றியிருப்பவர் அண்ணன் துரைமுருகன் அவர்கள். எதிராளிகளை கூட வியக்க வைக்கும் வகையில் பேச்சாற்றல் அண்ணன் துரைமுருகன் அவர்களுக்கு உண்டு. சிறந்த நிர்வாகியாகவும் உணர்ச்சியோடு பேசக் கூடியவராக மட்டுமல்ல, நகைச்சுவை கலந்த அந்த உரையை கண்டவர்கள் நாம். அறிவுப்பூர்வமான புள்ளி விவரங்களை எல்லாம் எடுத்துச் சொல்லி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் அண்ணன் துரைமுருகன் அவர்கள்.

அண்ணன் துரைமுருகன் அவர்களின் செயலைப் பற்றி நான் சொல்ல வேண்டும் என்றால், ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி நாம் அவரிடத்தில் கேட்டால், அந்த விஷயத்தோடு நிற்காமல், அதன் வரலாறு; அந்த விஷயம் எங்கு நடந்தது; எந்த ஊரில் நடந்தது; எந்த தெருவில் நடந்தது; எந்த வீட்டில் நடந்தது; யார் யார் அதில் பங்கேற்றார்கள்? என்பதை மடைதிறந்த வெள்ளம் போல அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பதைப் போல எல்லாவற்றையும் பேசும் ஆற்றலைப் பெற்றவர் அண்ணன் துரைமுருகன் அவர்கள்.

சட்டமன்றத்தை பொறுத்தவரைக்கும், இவரை எதிர்த்து பேசுவது என்பது பெரிய விஷயமாக இருந்தது. அந்த அளவுக்கு சட்டமன்றத்தில் தன்னுடைய அழுத்தத்தைச் எடுத்துச் சொல்லக்கூடியவர்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் ஆட்சி நடைபெற்றபோது, அந்த ஆட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணன் துரைமுருகன், க.சுப்பு, ரகுமான் கான் ஆகிய இந்த மூன்று பேரும் தான் அன்றைக்கு சிம்ம சொப்பனமாக சட்டமன்றத்தில் விளங்கினார்கள். அந்தக் காரணத்தால், அன்றைக்கு இருந்த எம்.ஜி.ஆர். அவர்களின் அ.தி.மு.க. ஆட்சி அவர் மீது நடவடிக்கை எடுத்து, சட்டமன்றத்தில் வரக்கூடாது என்று சொல்லி ஒரு தண்டனை கொடுத்தார்கள்.

தனது கட்சிக்கு அழைத்த MGR.. துரைமுருகன் சொன்ன அந்த பதில்.. -நினைவுகளை பகிர்ந்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் அந்தத் தண்டனையை கழகத்தின் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி, ‘இடி – மின்னல் – மழை’ என்ற தலைப்பைப் போட்டு, தமிழ்நாடு முழுவதும் சுற்றிவர சொன்னார்கள். ‘மின்னல்’ என்ற தலைப்பில் அண்ணன் துரைமுருகன் அவர்கள் பேசிய பேச்சுக்கள் எல்லாம் இன்றைக்கும் தமிழ்நாட்டின் தெருக்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

அவர் பிறந்த சொந்த ஊரான காங்குப்பத்தில் கருப்பு சட்டையை அன்றைக்கு இருந்த காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எரித்தார்கள். அதை எதிர்த்து போரிட்டவர் அண்ணன் துரைமுருகன் அவர்கள். அப்போது அன்னை சத்தியவாணி முத்து அவர்களை அழைத்து வந்து, அந்த காங்குப்பத்தில் ஒரு கிளைக் கழகத்தை தொடங்கி வைத்தார்கள். 16 வயதில் கிளைக்கழகத்தின் செயலாளராக இருந்து, படிப்படியாக உயர்ந்து வளர்ந்து, இன்றைக்கு ஒரு மாபெரும் இயக்கத்தின் கழகப் பொதுச்செயலாளராக மிகப்பெரிய பொறுப்பில், அவர் இருந்து கொண்டிருக்கிறார்.

பெருமையோடு சொல்ல வேண்டும் என்றால், பொதுவாழ்வில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் அண்ணன் துரைமுருகன் என்று சொன்னால், அது மிகையாகாது.

1965-இல் இந்தி ஆதிக்கத்தின் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றபோது, தளபதியாக உருவெடுத்தவர்தான் அண்ணன் துரைமுருகன் அவர்கள்.

அவருடைய ஆரம்ப அரசியல் வாழ்க்கையைப் பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், அவரே பல நேரங்களில் சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். என்ன என்று கேட்டால், எம்.ஜி.ஆர். அவர்கள் கண்டெடுத்து, தலைவர் தலைவர் கலைஞர் அவர்கள் வளர்த்தெடுத்த ஒரு மாவீரன்தான் அண்ணன் துரைமுருகன் அவர்கள்.

தனது கட்சிக்கு அழைத்த MGR.. துரைமுருகன் சொன்ன அந்த பதில்.. -நினைவுகளை பகிர்ந்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

1963-இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒரு விழா நடைபெற்றபோது, அண்ணன் துரைமுருகன் அவர்கள் அங்கு சிறப்புரை ஆற்றியிருக்கிறார். அந்த விழாவிற்கு வந்த எம்.ஜி.ஆர். அவர்கள் துரைமுருகன் அவர்கள் பேச்சைப் பார்த்து அசந்து ஆச்சரியப்பட்டு வாழ்த்தி, அவருடைய கல்விக்கே உதவியவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

அதுமட்டுமல்ல, பின்னர் திருவண்ணாமலையின் இடைத்தேர்தல் வந்தபோது, கே.வி.குப்பம் கூட்டத்தில் எம்.ஜி.ஆர்.தான் அண்ணன் துரைமுருகன் அவர்களை கலைஞரிடத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.

எனவே, இவ்வாறு பல்வேறு நிகழ்ச்சிகளை நான் இங்கு எடுத்துச் சொல்ல முடியும். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து தனி கட்சி தொடங்கியபோது, அண்ணன் துரைமுருகன் அவர்களை எம்.ஜி.ஆர். அவர்கள், “நீயும் என் கட்சியில் வந்து சேர்’ என்று அழைத்திருக்கிறார். ஆனால், எம்.ஜி.ஆர். இடத்தில், அண்ணன் துரைமுருகன் அவர்கள் சொன்னது என்னவென்று கேட்டால், “நீங்கள் என்னுடைய கல்விக்கு உதவியிருக்கலாம்; என்னிடத்தில் நீங்கள் அன்பைப் பொழிந்திருக்கலாம், பாராட்டியிருக்கலாம். ஆனால், கொள்கை என்று வருகிறபோது எனக்கு தலைவன் கலைஞர்தான். நான் அவரோடுதான் இருப்பேன்” என்று சொல்லி, இன்று வரையில் கலைஞர் வளர்த்தெடுத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தில்தான் இன்றைக்கும் அவர் பொதுச் செயலாளராக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

அவர் வழியில் வாரிசாக நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று இருக்கும், மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருக்கும் கதிர் ஆனந்த் அவர்களும் இன்றைக்கு தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

எனவே, அப்படிப்பட்ட குடும்பத்தில் நடைபெறும் இந்தத் திருமண விழாவில் உங்களோடு கலந்து கொண்டு நானும் கலந்துகொண்டு வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன், பூரிப்படைகிறேன். அந்தப் பூரிப்போடு மகிழ்ச்சியோடு, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லி இருக்கும், “வீட்டுக்கு விளக்காய் நாட்டிற்கு தொண்டர்களாய்” மணமக்கள் வாழ்க, வாழ்க என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

banner

Related Stories

Related Stories