அரசியல்

“10% CBSE மாணவர்களுக்கு 56% மருத்துவ இடங்களா?” - ஆசிரியர் கி.வீரமணி சரமாரி கேள்வி!

நீட் தேர்வு என்னும் சூழ்ச்சியை ஒழித்துக்கட்டும் வரை நமக்கு ஓய்வில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“10% CBSE மாணவர்களுக்கு 56% மருத்துவ இடங்களா?” - ஆசிரியர் கி.வீரமணி சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நீட் தேர்வு என்னும் சூழ்ச்சியை ஒழித்துக்கட்டும் வரை நமக்கு ஓய்வில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை வருமாறு :-

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒன்றிய அரசால் திணிக்கப்பட்டது முதலே, அது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்களுக்கான வாய்ப்பையும்; தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களின் வாய்ப்பையும் பறிக்கும் என்பதை எச்சரித்துக் கொண்டே வந்திருக்கிறோம். மாநிலப் பாடத்திட்டங்களை ஒழித்து, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கல்வியைக் கொண்டு வருவதற்கான உள்நோக்கத்துடன் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே கேள்விகள் அமைத்து, தேர்வுகள் நடத்தப்படுவதையும், அதிலும் தனியார் பயிற்சி மய்யங்களுக்கான அவசியத்தை உருவாக்கியிருப்பதையும் நாமும், நீட்டை எதிர்க்கும் சமூகநீதியாளர்களும், கல்வியாளர்களும் எச்சரித்துக் கொண்டே இருந்தோம்.

=> ‘நீட்’டை ஒழிக்க வேண்டுமென்று பரப்புரை செய்கிறோம்; போராடுகிறோம்!

அதன் விளைவு முதல் இரண்டு ஆண்டுகளில் வெளிப்படையாகத் தெரிந்தபோது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டை வழங்கியதன் மூலம் அதைச் சரி செய்துவிட்டதாகவும், மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராகிவிடுவார்கள் என்றும் சமாதானம் சொன்னார்கள். ஆனால், தொடர்ந்து மாணவர்கள் பாதிக்கப்பட்டுவருவதையும், மோசமான பாகுபாட்டுக்கு அவர்கள் ஆளாகியிருப்பதையும் கடந்த 10 ஆண்டுகளாக நாம் பார்த்து வருவதால்தான், அதை எதிர்த்துத் தொடர்ந்து இயக்கம் நடத்திவருகிறோம்.

‘நீட்’டை ஒழிக்க வேண்டுமென்று பரப்புரை செய்கிறோம்; போராடுகிறோம். நாம் எதற்காக அஞ்சினோமோ, எத்தகைய சமூக அநீதி நிகழ்ந்துவிடக் கூடாது என்று எச்சரித்தோமோ, அதுதான் நடந்திருக்கிறது என்பதை, நீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவச் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றத்தைத் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகத்திடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

“10% CBSE மாணவர்களுக்கு 56% மருத்துவ இடங்களா?” - ஆசிரியர் கி.வீரமணி சரமாரி கேள்வி!

=> நீட் என்னும் சூழ்ச்சியை அம்பலப்படுத்தியது!

2010 முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த சிபிஎஸ்இ மாணவர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்ததும், (2014-2015 இல் வெறும் 2 மாணவர்கள்; 0.06%), நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்குப் பிறகு அது, திடீரென 2017-2018 ஆம் கல்வி ஆண்டில் 25.58% ஆக உயர்ந்ததும் நீட் என்னும் சூழ்ச்சியை அம்பலப்படுத்தியது.

ஆனால், சிபிஎஸ்இ மாணவர்களின் ஆதிக்கம் பெருமளவில் அதிகரித்து, 2024-2025 ஆம் ஆண்டில் 55.51% ஆகவும் (4,677 மாணவர்கள்), 2025-2026 ஆம் ஆண்டில் 56.33% ஆகவும் (5,134 மாணவர்கள்) மாறியிருகிறது என்றால், நீட்டுக்கு முன்பு வரை 95% இடங்களுக்கும் மேல் இடம்பெற்றுவந்த மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் அனைத்துமே ஒட்டுமொத்தமாக, எவ்வளவு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

ஆதாரப் பூர்வமாக, இந்த அநீதி அம்பலப்பட்டிருக்கிறது. எதற்காக ‘நீட்’டைத் திணித்தார்களோ, அதை இப்போது அநீதியாக ஒன்றிய அரசு சாதித்திருக்கிறது. சி.பி.எஸ்.இ-க்கான முக்கியத்துவம் என்பது பல நோக்குகளில் ஆபத்தானது.

இந்தியாவில் கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்து, ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதன் மூலம் தொடங்கிய பிரச்சினை, சி.பி.எஸ்.இ. (CBSE - Central Board of School Education)க்குச் சிறப்பிடம் தருவதன் மூலமும், அதில் படித்தவர்கள் மேல்படிப்புகளுக்குச் செல்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதன் மூலமும், தற்போது மாநிலப் பாடத் திட்டங்களை ஒழித்து, பெற்றோரையும், பள்ளிகளையும் சி.பி.எஸ்.இ-யின் பால் ஈர்த்துவிடலாம் என்பதற்கான சூழ்ச்சி இது.

=> குறுக்குவழிகளில் கல்வித் துறையின் மீது ஆதிக்கம் செலுத்த ஒன்றிய அரசு முயல்கிறது!

நேரடியாக, பள்ளிக் கல்வியை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்கு, ஒன்றியப் பட்டியலுக்குக் கொண்டு செல்வது என்பது இந்திய அளவில் பெரும் பிரச்சினையாக அமையும் என்பதால், இத்தகைய குறுக்குவழிகளில் கல்வித் துறையின் மீது ஆதிக்கம் செலுத்த ஒன்றிய அரசு முயல்கிறது.

சி.பி.எஸ்.இ. என்பது தற்போதைய சூழலில் ஆர்.எஸ்.எஸ்.சின் கல்வித் திட்டத்தை, காவிக் கொள்கையை உள்செலுத்துவதற்கான ‘பைப்லைன்’ (குழாய்த் தடம்). மிக எளிதில், கல்வித் துறையின் வழியாகவே தங்களின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்று கருதுகிறது பா.ஜ.க.! வெகு எளிதாக ஹிந்தியை, சமஸ்கிருதத்தைத் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது திணித்து, நமது இருமொழிக் கொள்கையை ஒழித்துவிட முடியும் என்று கனவு காண்கிறது பா.ஜ.க.!

“10% CBSE மாணவர்களுக்கு 56% மருத்துவ இடங்களா?” - ஆசிரியர் கி.வீரமணி சரமாரி கேள்வி!

=> எப்படி பொறுத்துக் கொண்டிருக்க முடியும்?

ஆதிக்கத்துக்கு ஆதிக்கம், அதன் வழியாக பிஞ்சு நெஞ்சில் நஞ்சு விதைப்பு, மொழி-பண்பாட்டுப் படையெடுப்பு, மருத்துவக் கல்லூரி, அடுத்தடுத்து பிற கல்லூரிகளில் இடங்கள் பறிப்பு என்று பல வகை ஆபத்துகளை உள்ளடக்கியதே இந்தச் சூழ்ச்சி! இதை எப்படி பொறுத்துக் கொண்டிருக்க முடியும்?

நீட் ஒழிப்புக்காக ஏன் நாம் தொடர்ந்து போராடுகிறோம் என்றால், தேசியக் கல்விக் கொள்கை கூடாது என்று ஏன் நாம் தொடர்ந்து போராடுகிறோம் என்றால் இவற்றுக்காகத் தான்! ஒரு ‘தர்மேந்திர பிரதான்’ பதவி விலகியதைக் காட்டி, ‘நீட்’டுக்கு எதிரான போராட்டங்களை மடைமாற்றி ஏமாற்றிவிட்டதாக ஆர்.எஸ்.எஸ்.சும் - பா.ஜ.க.வும் கனவு காண முடியாது.

தமிழ்நாடு - பெரியார் மண்! அது ஒரு போதும் இத்தகைய ஏமாற்று வித்தைகளுக்குப் பலியாகாது. மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் 90 சதவிகித தமிழ்நாட்டு மாணவர்களுக்கான வாய்ப்பைச் சூழ்ச்சியின் மூலம், அதிகாரத்தின் மூலம், சட்டவிரோதமாகப் பறிக்கும் இந்த அநீதியை மக்கள் மத்தியில் ஆதாரப்பூர்வமாக எடுத்துச் செல்வோம்.

=> தமிழ்நாட்டு மக்களை, அறவழியிலான உரிமைப் போராட்டத்துக்கு ஆயத்தப்படுத்துவோம்!

ஒன்றிய அரசின் சட்டத் திருத்தங்கள், ஆசை காட்டுதல்கள், கல்வி நிறுவன அதிபர்களுக்கான மறைமுக மிரட்டல்கள் மூலம் தான் பல பள்ளிகள் கடந்த 10 ஆண்டுகளில் பல தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. கல்வி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளன. அதன் மூலம் தான் 10 சதவிகிதம் என்னும் அளவுக்கு சி.பி.எஸ்.இ. பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

அந்த 10 சதவிகித மாணவர்களுக்கு 56% வரை நீட் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வி இடங்கள் போய்ச் சேர்ந்துள்ளன என்றால், இதில் எங்கே இருக்கிறது சமூக நீதி? அதனை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டு மக்களை, அறவழியிலான உரிமைப் போராட்டத்துக்கு ஆயத்தப்படுத்துவோம்.

=> நீட் தேர்வை ஒழிக்கும் வரை எமக்கு ஓய்வில்லை! ஓய்வில்லை!

நாடு தழுவிய அளவில் இப்பிரச்சினையைப் பிரச்சாரம், ஆர்ப்பாட்டங்களின் வழியாக திராவிட மாணவர் கழகத் தோழர்கள் எடுத்துச் செல்வார்கள். சமூகநீதியைக் காக்க, நீட் தேர்வை ஒழிக்கும் வரை எமக்கு ஓய்வில்லை! ஓய்வில்லை!

banner

Related Stories

Related Stories