
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தியை திணிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. மேலும் சமஸ்கிருதத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. குறிப்பாக ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கும்போது கூட, வழக்கில் இருக்கும் பிராந்திய மொழிகளை விட பல மடங்கு கூடுதலாக சமஸ்கிருதத்துக்கு நிதி ஒதுக்கி வருகிறது ஒன்றிய பாஜக அரசு.
இதற்கு ஒவ்வொரு ஆண்டும் கண்டனங்கள் எழும்போதிலும் அதனை ஒன்றிய அரசு நிறுத்தவில்லை. மேலும் தேசிய அளவில் நடைபெறும் போட்டித்தேர்வுகளில் முன்பு இந்தியை மையப்படுத்தி கேள்விகளும், இந்தியில் கேள்விகளும் இருக்கும். தற்போது அதற்கு ஒரு படி மேலே போய், ஆங்கில இலக்கியத்திற்கான தேசிய நுழைவுத் தேர்வில் (UGC Net) சம்பந்தமே இல்லாத சமஸ்கிருதம் குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெருவதற்கு யுஜிசி நெட் (UG NET) தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு, தேசிய தேர்வு முகமை (என்டிஏ - National Eligibility Test) சார்பில், ஆண்டிற்கு இருமுறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடப்பாண்டுக்கான (2025) ஜூன் மாத தேர்வு, பல்வேறு பாடங்களுக்கு ஜூன் 25 முதல் 29 வரை நடைபெறும் நிலையில், ஜூன் 27 ஆம் தேதி ஆங்கில இலக்கியத்திற்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் சமஸ்கிருதம் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவு வருமாறு :
ஒன்றிய அரசு நடத்திய (27/6/25) ஆங்கில இலக்கியத்திற்கான தேசிய நுழைவுத் தேர்வில் (UGC Net) பல கேள்விகள் சமஸ்கிருதம் பற்றி கேட்கப்பட்டுள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்த கேள்விகளை உருவாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த கேள்விகள் அனைத்திற்கும் மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். தேசிய தேர்வு முகமை நடத்தும் தேசிய தகுதித் தேர்வில் ஆங்கில இலக்கிய தேர்வு கேள்வித்தாளில் சமஸ்கிருதம் பற்றிய பல கேள்விகள் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
ரிக் வேதத்திற்கும் ஆங்கில இலக்கியத் துறைக்கும் என்ன தொடர்பு?
நெருப்பை ஊகிப்பதற்கும் வில்லியம் சேக்ஸ்பியருக்கும் என்ன சம்பந்தம்?
சமஸ்கிருத வியாப்திக்கும், ஜார்ஜ் ஆர்வெல்லுக்கும் என்ன சம்பந்தம்?
தவறான பதில்களால் மதிப்பெண்கள் குறைவது புதிதல்ல, அரசின் திணிப்புகளால் மாணவர்களின் மதிப்பெண்கள் குறைவது ஏற்க முடியாதது.
சமஸ்கிருதம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் முழு மதிப்பெண்களை NTA வழங்க வேண்டும். இந்தி திணிப்பின் வழியாக சமஸ்கிருதச் செழிப்புக்கு வாய்ப்பளிக்கும் செயல்களை ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.








