
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கொரட்டூரில் வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அம்பத்தூர் மண்டலக் குழுத் தலைவர் பி.கே. மூர்த்தி தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, பேராசிரியர் ஞானசம்பந்தம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
நடிகர் விஜய் ஆண்டனி "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளது. இதுவரை நான் அவரை நேரில் பார்த்ததில்லை; ஆனால், அவர் எந்த இடத்திலும் கடும் கோபத்துடனோ அல்லது முகம் சுளிக்கும் விதமாகவோ பேசி நான் பார்த்ததில்லை.
அவர் மிகவும் பண்பாகவும், அன்பாகவும் நடந்துகொள்பவர்; சிறந்த மனிதநேயமிக்கவர். முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவான இந்த மனிதநேய விழாவிற்கு என்னை அழைத்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.
பேராசிரியர் ஞானசம்பந்தம் "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி, மக்களின் ஆட்சியாக உள்ளது. அனைவரிடத்திலும் எளிமையாகவும் அன்பாகவும் பழகக்கூடியவராக முதலமைச்சர் இருக்கிறார்" எனத் தெரிவித்தார்.






