
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ”முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – இது நம்ம ஆட்டம் 2026” மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளின் வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் அணிவித்து பரிசுத் தொகை காசோலைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், மாவட்ட அளவில், மாநில அளவிலான முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் நடத்த மொத்தம் 42.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
இப்போட்டிகளுக்காக ஊராட்சி ஒன்றிய அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக மொத்தம் 16.53 கோடி ரூபாயும், மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசு தொகையாக மொத்தம் 3.73 கோடி ரூபாயும், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு பரிசு தொகையாக மொத்தம் 49.00 லட்சம் ரூபாயும் என மொத்தம் 20.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.
அதனடிப்படையில், ஊராட்சி ஒன்றிய அளவிலான, மாவட்ட அளவிலான ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் கடந்த 22.1.2026 முதல் 31.1.2026 வரை சிறப்பாக நடைபெற்றன.
இப்போட்டிகளில் ஊராட்சி ஒன்றிய அளவில் தனி நபர் மற்றும் குழுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையாக முதல் இடம் பெற்றவர்களுக்கு தலா 3,000 ரூபாயும், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு தலா 2,000 ரூபாயும், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு தலா 1,000 ரூபாயும் என தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் மொத்தம் 16.53 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன.
ஊராட்சி அளவிலான போட்டிகளில் 2,36,064 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று 82,664 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பதக்கம் மற்றும் பரிசுத் தொகை வென்றுள்ளனர்.
மாவட்ட அளவில் தனி நபர் மற்றும் குழுப் போட்டிகளில் பரிசுத் தொகையாக முதல் இடம் பெற்றவர்களுக்கு தலா 6,000 ரூபாயும், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு தலா 4,000 ரூபாயும், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு தலா 2,000 ரூபாயும் என தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் மொத்தம் 3.73 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான போட்டிகளில் 32,276 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று, 9,324 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பதக்கம் மற்றும் பரிசுத் தொகை வென்றுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்ற பெண்கள் கபடி அணிகள், ஆண்கள் ஸ்ட்ரீட் கிரிக்கெட் அணிகள், இருபாலர்களுக்குமான கயிறு இழுத்தல் அணிகள் கடந்த 21.1.2026 முதல் இன்று 23.1.2026 வரை சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் மற்றும் நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றார்கள். பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
மாநில அளவிலான போட்டிகளில் 1,221 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று 99 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பதங்கம் வென்றுள்ளனர்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பெண்களுக்கான கபடி போட்டியில் முதலிடம் பெற்ற செங்கல்பட்டு மாவட்ட அணியினருக்கு தங்கப்பதக்கம் அணிவித்து மொத்தம் 6.00 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களையும், இரண்டாமிடம் பெற்ற திருச்சிராப்பள்ளி மாவட்ட அணியினருக்கு வெள்ளிப் பதக்கம் அணிவித்து மொத்தம் 4.00 லட்சம் பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களையும், மூன்றாம் பெற்ற கரூர் மாவட்ட அணிக்கு வெண்கலப் பதக்கம் அணிவித்து மொத்தம் 2.00 லட்சம் ரூபாய் பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
மேலும் ஆண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் முதலிடம் பிடித்த திருவண்ணாமலை மாவட்ட அணிக்கு தங்கப்பதக்கம் அணிவித்து மொத்தம் 6.75 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களையும், இரண்டாமிடம் பிடித்த ஈரோடு மாவட்ட அணியினருக்கு வெள்ளிப் பதக்கம் அணிவித்து மொத்தம் 4.50 லட்சம் ரூபாய் பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களையும், மூன்றாமிடம் பிடித்த சேலம் மாவட்ட அணிக்கு வெண்கலப் பதக்கம் அணிவித்து மொத்தம் 2.25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் முதலிடம் பிடித்த பிடித்த தஞ்சாவூர் மாவட்ட அணிக்கு தங்கப்பதக்கம் அணிவித்து மொத்தம் 6.75 லட்சம் ரூபாய் தொகை மற்றும் சான்றிதழ்களையும், இரண்டாமிடம் பிடித்த கிருஷ்ணகிரி மாவட்ட அணிக்கு வெள்ளிப் பதக்கம் அணிவித்து மொத்தம் 4.50 லட்சம் ரூபாய் பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களையும், மூன்றாமிடம் பிடித்த தென்காசி மாவட்ட அணியினருக்கு வெண்கலப் பதக்கம் அணிவித்து மொத்தம் 2.25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
மேலும் ஆண்களுக்கான ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடித்த கன்னியாகுமரி மாவட்ட அணியினருக்கு தங்கப்பதக்கம் அணிவித்து மொத்தம் 5.25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களையும், இரண்டாமிடம் பெற்ற விழுப்புரம் மாவட்ட அணியினருக்கு வெள்ளிப் பதக்கம் அணிவித்து மொத்தம் 3.50 ரூபாய் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களையும், மூன்றாம் பெற்ற இராமநாதபுரம் மாவட்ட அணியினருக்கு வெண்கலப் பதக்கம் அணிவித்து மொத்தம் 1.75 லட்சம் பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.






