
ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT), 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற புதிய பகுதியைச் சேர்த்துள்ளது.
அதில், உச்ச நீதிமன்றத்தில் 81,000 வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 62.40 லட்சம் வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் சுமார் 4.7 கோடி வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நீதிமன்றங்களின் பல்வேறு நிலைகளில் ஊழல் நிலவுவதாகவும், நீதிபதிகளின் நடத்தை குறித்து 2017 முதல் 2021 வரை 1,600 புகார்கள் வந்துள்ளதாகவும் அந்தப் பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திர நடைமுறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், இது குறித்து கேள்வி எழுப்பும் விதமாக தேர்தல் பத்திரங்கள் ரத்து: 'சுதந்திரமான நீதித்துறை ஏன் தேவை?' என்ற தலைப்பின் கீழ், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் 'தேர்தல் பத்திர நடைமுறையை' உச்ச நீதிமன்றம் ஏன் ரத்து செய்தது என்பது குறித்த கேள்வி மாணவர்களிடம் எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், "நீதித்துறையில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டும் இந்தப் பாடப்புத்தகம், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மற்றும் மத்திய விசாரணை அமைப்புகளில் நிலவும் ஊழல்கள் குறித்து ஏன் மௌனம் காக்கிறது? அந்தத் தகவல்கள் ஏன் மறைக்கப்பட்டுள்ளன?" என மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.






