murasoli thalayangam

உதயநிதி ஏற்படுத்திய எழுச்சி : தனக்குத் தானே ‘சூனியம்' வைத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்!

முரசொலி தலையங்கம் (06-08-2026)

உதயநிதி ஏற்படுத்திய எழுச்சி!

"எப்போதும் எனக்கு அதிக விளம்பரம் தேடித் தருகிறவர்கள் எனது எதிரிகள் தான்” என்பார் தந்தை பெரியார். அப்படித் தான் நடந்து கொள்கிறார் முதலமைச்சர் விஜய். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்து முடக்க நினைத்ததன் மூலமாக ஒட்டுமொத்த திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் எழுச்சியும் மலர்ச்சியும் கொண்ட வீரர்களாக எழுந்து நிற்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் கட்சி சார்பற்றவர்களும் உதயநிதி மீதான நடவடிக்கையைக் கண்டித்து கொந்தளித்துப் பேசிவருகிறார்கள். முதலமைச்சர் விஜய், தனக்குத் தானே ‘சூனியம்' வைத்துக் கொண்டார் என்பதே நேற்றைய நிகழ்வுகள்!

முதலமைச்சராக விஜய் வந்தது முதல் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் அதலபாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது. பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாள் இல்லை. எங்கும் போதைப் பொருள் நடமாட்டம். கொலை, கொள்ளை, திருட்டு, அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீச்சுகள் என சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பல்வேறு குற்றச் சம்பவங்களில் த.வெ.க. நிர்வாகிகளே கைதாகி வருகிறார்கள். அமைச்சர்களே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். இது எதையும் முதலமைச்சர் விஜய்யால் தடுக்க முடியவில்லை.

தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சினைகளில் வாய்மூடிக் கிடக்கிறார். காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமையை மொத்தமாக தாரை வார்த்து விட்டார். மாதம் தோறும் வழங்க வேண்டிய நீரைக் கூட கர்நாடகம் தர மறுக்கி றது. அதைத் தட்டிக் கேட்க யோக்கியதை அற்ற முதலமைச்சராக அவர் இருக்கிறார். மேகதாது அணையைக் கட்டித் தீருவோம் என்பதில் கர்நாடகம் உறுதியாக இருக்கிறது. அதைத் தடுக்க முடியவில்லை. இத்தகைய கையறு நிலையில் இருக்கும் முதலமைச்சர் விஜய், தனது முகத்திரை கிழிந்து விட்டதை மறைக்க எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியைக் கைது செய்து பிரச்சினையைத் திசை திருப்பப் பார்த்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் வீறுகொண்ட போராட்டத்தின் விளைவாக, ‘நாங்க அவரை கைது செய்யப் போவது இல்லை, பேசிட்டு விட்டுவிடுவோம்' என்று மழுப்பல் பதிலை நீதிமன்றத்தில் சொன்னது விஜய் அரசு. அப்படிச் சொல்லும் சூழ்நிலையை உருவாக்கி வைத்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்கள்.

‘உங்களைக் கைது செய்திருக்கிறோம்' என்று சொல்லிவிட்டு, ‘கைது செய்யப் போவதில்லை' என்று நீதிமன்றத்தில் சொன்னதைப் போல ஏமாற்றுக் காரியம் இருக்க முடியுமா?

‘12 மணி வரைக்கும் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்' என்று சென்னை உயர்நீதிமன்றம் சொன்ன பிறகும், அதற்கு முன்னதாக சென்னையில் கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றது ஏன்? முதலமைச்சர் விஜய் இதன் மூலமாக என்ன சொல்ல விரும்புகிறார்? 'நீதிமன்றத்தை மீறியவன் நான்' என்று நினைக்கிறாரா? நீதிமன்றங்கள் என்றால் என்னவென்றாவது அவருக்குத் தெரியுமா?

முதலமைச்சர் விஜய்க்கு திராணி இருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தஞ்சாவூரில் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லட்டும்!

“எந்த மாதிரி அமைச்சர்கள் அமைந்திருக்கிறார்கள்? திருட்டு லாட்டரி விற்கிற ஒரு அமைச்சர், திருட்டு விசிடி விற்கிற ஒரு அமைச்சர், பிளாக்கில் டிக்கெட் விற்கிற ஒரு அமைச்சர், உருட்டுக் கட்டையுடனே சுத்திக் கொண்டிருக்கிற ஒரு அமைச்சர், எல்லாவற்றுக்கும் மேலாக போதைப் பவுடர் அமைச்சர். இப்படி மொத்த கேபினெட்டுமே ஒரு ஜோக்கர் கூட்டமாக இன்றைக்கு தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது” என்று குற்றம் சாட்டி இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி. இதற்குப் பதில் சொல்லத் திராணி இருக்கிறதா முதலமைச்சர் விஜய்க்கு?

சொந்தக் கட்சிக்காரரை, “அவனைத் தூக்கி வைத்து ஜட்டியோட வைத்து அடித்தே கொன்னுடுவேன்” என்று மிரட்டுகிறார் சமூகநலத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி. 'என்னோட வீடியோ இருக்குன்னு மிரட்டுகிறார்கள்' என்று அவரே பேட்டி தருகிறார். மிரட்டுவது யார்? அவரது கட்சிக்காரர்கள் தானே? இவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை உண்டா? விஜய் ரசிகையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றச்சாட்டில் சிக்கி இருக்கும் ஸ்ரீவைகுண்டம் சரவணன்மீது இன்றுவரை நடவடிக்கை இல்லை. அந்த ரசிகையை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்கள். அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பல லட்சம் லஞ்சம் என்று சொன்ன த.வெ.க. உறுப்பினர் ஞானசௌந்தரியைக் கட்சியை விட்டு நீக்கிவிட்டார்கள். இவர் யாரைக் குற்றம் சாட்டினாரோ அவர்கள்மீது நடவடிக்கை இல்லை. இத்தகைய துப்புக் கெட்ட ஆட்சிக்கு தூய ஆட்சி என்று பெயர்.

ஆனால் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய அடுத்த நாளே எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்கிறார்கள். அவர் ஆபாசமாகப் பேசிவிட்டார் என்ற அவதூறை அவர்களே கிளப்பி அசிங்கப்படுத்த நினைத்தார்கள். அதில் அவர்களே அசிங்கப்பட்டு நிற்கிறார்கள். தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டார்கள்.

ஆபாசமாகவும் அசிங்கமாகவும் கெட்ட வார்த்தைகளைச் சரளமாக பயன்படுத்துவதிலும் கை தேர்ந்தவர் முதலமைச்சர் விஜய் தான். அவர் மீது எத்தனை வழக்குகள் போடுவது?

முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா மணவிலக்கு கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். சங்கீதாவை அசிங்கப்படுத்தியது விஜய் ரசிகர்கள் தான். இவர்கள் மீது எத்தனை லட்சம் வழக்குகள் போடுவது? தனது மனைவிமீது கொச்சையான அவதூறு கிளப்பியவர் களைத் தடுக்க துப்பு இல்லை. உதயநிதி மீது வழக்கு போடத் துடிப்பதற்கு வெட்கமாக இல்லையா?

கட்டிய மனைவியை 'வொர்த் இல்லை' என்று சொன்னவருக்கு 'வொர்த்' யார் என்பதை ஊருக்குக் காட்டும் நாளாக ஆகஸ்ட் 4 அமைந்துவிட்டது.

Also Read: த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!