
தமிழ்நாட்டில் தேவையானவற்றிற்கு நிதியில்லை என்று மழுப்புவதும், தேவையற்றவைக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குவதும் த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகி வருகிறது.
தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரிக்கை வைத்து போராடுகிறார்களா...
கோடிக்கணக்கில் சொத்து வைத்திருந்தாலும் தாழ்வில்லை, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மகிழுந்து வழங்க உத்தரவிடலாம்.
உழவர்கள் நீர் ஆதாரமின்றி தவித்து வருகிறார்களா...
அதுகுறித்து கவலையில்லை, ரூ.1,200 கோடியில் மீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடி, பிரம்மாண்டமாக கடலுக்கு அருகில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அரசாணை வெளியிடலாம்.
என்பதான நிலைதான் தமிழ்நாட்டில் தொடர்ந்து வருகிறது.
10-ஆவது மாடியில் முதலமைச்சர் அலுவலகம் அமைக்கப் பணம் இருக்கிறது, ரூ.5 கோடி செலவு செய்து தனி விமானத்தில் சென்று மேட்டூர் அணையை திறக்கப் பணம் இருக்கிறது, கார் பந்தயத்தை லண்டன் சென்று பார்ப்பதற்கு அரசு செலவில் சுற்றுலா செல்ல பணம் இருக்கிறது;

ஏன்... ரூ.755.83 கோடி நிதியில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் ஆடம்பரத் திட்டத்தை தொடங்கக் கூட பணம் இருக்கிறது!
ஆனால், அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளை மூச்சுத் திணறலில் இருந்து காக்கும் சர்ஃபாக்டன்ட் (Surfactant) மருந்து இருப்பை உறுதி செய்ய பணமில்லையா? அல்லது வக்கில்லையா?
இதனைக் கேட்டாலும் சரி, தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டு சிக்கலை கேட்டாலும் சரி, கொலை - கொள்ளைகள் அதிகரித்து சீர்கெட்டுள்ள சட்டம் - ஒழுங்கு குறித்து கேட்டாலும் சரி, முதலமைச்சர் கள்ள மவுனமே பதிலாக இருக்கிறது.
மூச்சிற்கு முந்நூறு முறை தி.மு.க பெயரை உச்சரிக்கும் த.வெ.க.வினர், தங்களது தவறை உணர்ந்தார்களா இல்லையா? என்றால் பதில் இல்லை. மருந்து முக்கியமா? தங்க மோதிரம் முக்கியமா? என்றாலும் பதில் இல்லை.
ஆனால், சினிமா புகழ் பாடுவதும், ரீல்ஸ் காட்சிகளும் மட்டும் ஓயவில்லை. இப்படியான சூழலில், தமிழ்நாடு முழுவதும் எளிய மக்கள் ஒவ்வொருவரும் தங்களது உரிமைகளை மீட்க வெயில் - மழை பாராது போராட வேண்டியிருக்கிறது.
விஜய் அரசின் வஞ்சகங்களை சகித்துக்கொள்ள முடியாமல், கண்டனம் தெரிவிக்கும் இணையவாசிகள் மீது வழக்குகள் போடப்படுகிறது. ஏன், த.வெ.க அரசை விமர்சித்தார்கள் என்பதற்காக செய்தி ஊடங்களை முடக்கிய அதிகார அத்துமீறல் நடவடிக்கையும், த.வெ.க ஆட்சியில் நடந்தது என்பதை யாரும் மறந்திருக்க இயலாது.
குழந்தைகள் உடல் நலத்துடன் வாழ தங்க மோதிரம் தேவையா? இல்லையா? என்பதை விவாதிப்பதற்கு முன்பு, உறுதியாக உரிய மருத்துவமும், மருந்தும் தேவை என்பதை ஆட்சியாளர்கள் உணரும் நேரம் வந்துள்ளது.
இதனையும் எப்படி தட்டிக் கழிக்கலாம் என சிந்திக்காமல், ஆட்சியை தன்வசம் வைத்திருக்கும் த.வெ.க.வினர், தட்டுப்பாடுகளுக்கு தக்க தீர்வுகளை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்து வருகிறார்கள்.






