
திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிப் பெயர் மாற்றி, புதிய திட்டங்கள் போல் அறிவித்துப் பெருமை தேடி வருகிறது தவெக அரசு. அதில் ஒன்றுதான் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். இந்தத் திட்டத்தில் இருந்த 'முதலமைச்சர்' என்ற சொல் பொதுவானது என்பதைக் கூட அறியாத தற்குறி அரசு, 'முதலமைச்சர்' என்ற சொல்லை நீக்கிக் 'காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது.
தி.மு.க அரசு கொண்டுவந்தது என்ற ஒரே காரணத்திற்காகவே இந்தத் திட்டத்திற்குப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது தற்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது.ஏனென்றால், இன்று காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை நடுநிலைப் பள்ளிகளுக்கும் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்ட விழாவிற்காகப் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் ஓரிடத்தில் கூட, ஏன் சிறிய அளவில் கூடக் காமராஜர் படம் இடம்பெறவில்லை. ஆனால் முதலமைச்சர் விஜய்யின் பெயர் மட்டும் பெரிய அளவில் இடம்பெற்றிருந்தது.
இதிலிருந்தே தெரிகிறது, தவெகவுக்குக் காமராஜர் மீது துளியும் பற்று இல்லை என்பது.நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஏன் திட்டத்தின் பெயரை மாற்றினீர்கள் என்று கேட்டபோது, "காமராஜர் பெயரைவிட இந்தத் திட்டத்திற்கு வேறு யார் பெயர் பொருத்தமாக இருக்க முடியும்?" என வாய்கிழியப் பேசினார் அமைச்சர் ராஜ்மோகன்.
இப்போது காமராஜர் படம் கூட இடம்பெறவில்லையே? இதற்கு அமைச்சர் ராஜ்மோகன் என்ன சொல்லப்போகிறார்? தனது முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்வார் என்று தெரியவில்லை. ஆக மொத்தம், காலை உணவுத் திட்ட விரிவாக்கம் என்ற பெயரில் இன்று ஒரு சூட்டிங் நடத்தி முடித்துவிட்டார்கள், அவ்வளவுதான்!இவர்களுக்கு மாணவர்கள் மீது பற்றும் கிடையாது, காமராஜர் படம் இடம்பெறவில்லையே என்ற கவலையும் இருக்காது.






