
இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக தங்களது அணிகளுக்காக தனித்தனி ரசிகர் பட்டாளம் உருவெடுத்து மிகப்பெரிய உணர்வுப்பூர்வமான ஒன்றாக ஐபிஎல் தொடர் மாறியுள்ளது.
இதில் வீரர்கள் எந்தளவுக்கு முக்கியமாக உள்ளார்களோ அந்தளவுக்கு, ஒவ்வொரு அணியின் பயிற்சியாளர்களும் முக்கியமானவர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஏனென்றால் அணியின் தலைமைப் பயிற்சியாளரே அணியின் போக்கை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் 18 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் வெற்றிகரமான அணியாக வலம் வரும் சிஎஸ்கே அணி கடைசியாக 2023-ஆம் ஆண்டுதான் கோப்பையை வென்றது. தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வரும் சிஎஸ்கே அணியின் நிலமையைப் பார்த்து ரசிகர்களே ஏங்கிப் போனார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அணியில் எவ்வளவு மாற்றங்களைச் செய்தாலும், சூழல்களை மாற்றினாலும் ஏதோ தவறு நடப்பதாகவே அவர்களின் விளையாட்டின் யுக்தியும் இருந்தது. அணியின் முக்கியத் தூணாக இருந்து வரும் எம்.எஸ்.தோனியும் அணிக்கு பக்கபலமாக இருந்தாலும் களத்திற்குள் கேப்டனின் முடிவில் அவர் தலையிடுவதில்லை.
அணி நிர்வாக முடிவுகளில் தோனியின் கை மேலோங்கி இருந்தாலும், களத்திற்குள் முடிவுகளை எடுப்பது கேப்டன் ருதுராஜாகவே இருந்தார். எவ்வளவு முயன்றும் சிஎஸ்கே அணி பல்வேறு நிலைகளில் தோல்வியுற்ற அணியாகவே பார்க்கப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம் பயிற்சியாளர்தான் என ஸ்டீபன் ஃபிளெமிங் மீது பழிச்சொல் விழத் தொடங்கியது.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் ஃபிளெமிங் சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் பயணித்து வருகிறார். அவர் பயிற்சியின் கீழ்தான் சிஎஸ்கே அதிக கோப்பைகளை வென்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது. இருப்பினும் வீரர்கள் ஏலத்தில் பயிற்சியாளராக அவரது பழைய யுக்தியைப் பயன்படுத்துவது அணிக்கு கைகொடுக்கவில்லை.

இதன் தொடர்ச்சியாகவே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது சிஎஸ்கே அணியில் நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றமாகவே பார்க்கப்பட்டது. காரணம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் நீண்ட காலம் ஒரு அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றியவர் ஃபிளெமிங். ஆனால், அவரது மாற்றத்தை ரசிகர்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதற்கடுத்து அடுத்த தலைமைப் பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி தலைதூக்கியது. பல்வேறு யூகங்கள் உலாவந்தன, எம்.எஸ்.தோனியே பயிற்சியாளராக செயல்படுவார் என்றும், முன்னாள் வீரர் ரவிச்சந்திர அஸ்வின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார். ஹேமங் பதானி, பிரெண்டன் மெக்கலம் என பல்வேறு பெயர்கள் அடிபட்டு எதிர்பார்ப்பை எகிறச் செய்தன.
ஆனால், யாரும் எதிர்பாரா விதமாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம் இது யாரும் எதிர்பார்த்திராத ஒரு வீராராக இருந்ததே.
எந்த ஒரு ஊடகங்களோ அல்லது எந்தவகையிலுமே இந்தத் தகவல் வெளியே கசியவில்லை. இதற்கு மூளையாக செயல்பட்டது எம்.எஸ்.தோனிதான் என கூறப்படுகிறது. அவரது அறிவுறுத்தலின் பேரிலும், அணி நிர்வாகம், கேப்டன் ருதுராஜ் மற்றும் துணை கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோரின் ஒப்புதலோடுமே இந்த நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜாகீர் கான் 2011 ஒருநாள் உலகக் கோப்பையின் போது எம்.எஸ்.தோனி தலைமையிலான அணியில் முன்னணி பந்துவீச்சாளராக இருந்தவர். அதுமட்டுமில்லாமல் உலகக்கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இதனால் தோனிக்கும் அவருக்குமான நெருக்கம் அணிக்கு நல்லதாகவே அமையும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
இதற்கடுத்தபடியாக, தலைமைப் பயிற்சியாளர் என்ற முறையில், சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர், ஃபீல்டிங் மற்றும் இதர பயிற்சியாளர் நியமனங்களும் ஜாகீர் கானிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2027-ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பை வெல்வதை நோக்கமாக கொண்டே இந்த நியமனங்கள் மாற்றங்கள் நிகழ்வதாக கருதப்படுகிறது. இது ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.






