India

ஹெலிகாப்டர் விபத்து.. உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு நன்றி மறக்காமல் உதவி செய்த தொழிலதிபர்!

தன்னிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பெண்ணின் ரூ. 5 லட்சம் கடனை உடனடியாக அடைத்த யூசுப் அலியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் யூசுப் அலி. இவர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற லூலூ சூப்பர் மார்க்கெட் குழுமத்தின் தலைவர் ஆவார். 2018-ல் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட பட்டியலின்படி அரபு நாடுகளில் தொழில் செய்யும் 100 இந்திய தொழிலதிபர்களில் முதல் இடத்தில் யூசுப் அலி இருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு யூசுப் அலி, அவரது மனைவி மற்றும் உதவியாளர்கள் உட்பட ஏழு பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மோசமான காலநிலை காரணமாக கொச்சி அருகே சதுப்பு நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

ஹெலிகாப்டரில் பயணம் செய்து விபத்துக்குள்ளானது யாரென்றே தெரியாத உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர் அருகே உள்ள வீட்டில் குடியிருக்கும் ராஜேஷ் மற்றும் பிஜி தம்பதியர்.


ராஜேஷ் தனது வீட்டிலிருந்து நாற்காலிகள் கொண்டு வந்து புதைந்து நின்ற ஹெலிகாப்டர் கதவுகளை திறந்து விபத்தில் சிக்கிய யூசுப் அலியையும் மற்றவர்களையும் வெளியேற்றி, காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லி, மீட்புப்பணிக்கு உதவினார்.

தனக்கு ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தின்போது முதலுதவி செய்து காப்பாற்றிய ராஜேஷ்-பிஜி குடும்பத்தினரை சமீபத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து பரிசுகளை வழங்கினார் யூசுப் அலி.

அவ்வாறு நன்றி தெரிவித்துவிட்டு வரும்போது அங்கு வந்த ஒரு பெண் தாங்கள் வாங்கிய 5 லட்ச ரூபாய் வங்கிக் கடனுக்காக தனது வீட்டை வங்கி நிர்வாகம் ஜப்தி செய்ய உள்ளதாக கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்ட அவர் உடனே தனது உதவியாளரிடம் வங்கிக்கு சென்று 5 லட்ச ரூபாயை செலுத்தி வீட்டின் ஆவணங்களை அந்தப் பெண்ணிடம் வாங்கிக் கொடுக்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து உடனடியாக அவர் செலுத்தவேண்டிய ரூ.5 லட்சம் செலுத்தப்பட்டது.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. தொழிலதிபர் யூசுப் அலியின் உதவியை பலரும் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

Also Read: நடுவானில் உயிரிழந்த முக்கிய பிரபலங்கள்... நாட்டை உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்துகள் என்னென்ன?