India

“2025 வரை இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைய வாய்ப்பே இல்லை” : IMF தலைமைப் பொருளாதார வல்லுநர் கருத்து !

இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலைக்காரணம் இந்தியா வளர்ச்சிப்பாதையில் இருந்து பின்னோக்கிச் செல்கிறது. இந்த சூழலில், இந்தியப் பொருளாதாரம் 2020-இல் மைனஸ் 9.6 சதவிகிதம் வரை வீழ்ச்சியடைந்த நிலையில், நடப்பு 2021-ம் ஆண்டில் அது 7.3 சதவிகிதம் என்ற வளர்ச்சியை எட்டும் என ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத்துறை அண்மையில் அறிக்கை வெளியிட்டது.

இதனையடுத்து சர்வதேச நாணய நிதியமும் கூட, 2021-இல் இந்தியாவின் ஜிடிபி 11.5 சதவிகிதம் என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை அடையும் என்று கணிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் வெள்ளிக்கிழமையன்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியப் பொருளாதாரம் 2020-21 நிதியாண்டில் மைனஸ்7.7 சதவிகிதம் என்ற வீழ்ச்சியையே சந்திக்கும் என்றாலும், 2021-22 நிதியாண்டில் சுமார் 11 சதவிகித பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்தியப் பொருளாதாரம், 2025-ம் ஆண்டுக்கு முன்னதாக ,கொரோனா பொதுமுடக்க காலத்திற்கு முந்தைய அதன் பழைய நிலையை அடைய வாய்ப்பு இல்லை என்று ஐ.எம்.எப் (IMF) எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் கூறியுள்ளார்.

இந்தியப் பொருளாதாரம் மற்றும் அதன் வளர்ச்சி அளவீடுகள் குறித்து ‘எக்னாமிக் டைம்ஸ்’ ஏட்டிற்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில், 2019-ம் ஆண்டில், அதாவதுகொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் இந்திய பொருளாதாரம் 6 முதல் 7 சதவிகிதவளர்ச்சியில் இருந்தது.

இந்த அளவீட்டை மீண்டும் எப்போது இந்தியா அடையும் என்றால், நிச்சயமாக 2025-க்கு முன்னதாக, இந்திய பொருளாதாரம் தனது பழைய நிலையை அடையக் கண்டிப்பாக வாய்ப்பு இல்லை. இந்தியா மட்டுமல்ல உலகில் பல நாடுகள் இந்த நிலையில்தான் உள்ளன என்று கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

2021-22 நிதியாண்டிற்கான இந்திய அரசின் பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள நிலையில், இவ்வாறு கூறியிருக்கும் கீதா கோபிநாத், பொருளாதார மீட்சி வேகமானது, பட்ஜெட் வரவு செலவுத் திட்டத்தில் இந்திய ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் சீர்திருத்தங்களைப் பொறுத்து அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பா.ஜ.க பிரமுகர் போக்ஸோ சட்டத்தில் கைது!