India

தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உ.பி.யில்தான் அதிகம் : பாலியல் குற்றங்களின் தலைமையகமாக மாறிய உ.பி!

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் நாடுமுழுவதும் வெகுவாக அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

உத்தர பிரதேசத்தில் 19 வயதான தலித் பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதே மாநிலத்தில் பல்ராம்பூர் மாவட்டத்தில் 22 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளனர்.

இதேப்போன்று ஜியான்பூர் பகுதியில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபரால் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்திருப்பதாகவும் போலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 201ம் ஆண்டைக் காட்டிலும் 201ம் ஆண்டில் 7.3 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau)அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2018ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 3,78,236 வழக்குகள் பதிவாகி இருந்தது. இதுவே, 2019ம் ஆண்டில் 4 லட்சமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எடுத்துக் கொண்டால், 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019-இல் 7.3 சதவிகிதமும், பழங்குடியினர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 26 சதவிகிதம் வரையும் அதிகரித்துள்ளது.

மேலும், தலித் பெண்களுக்கு எதிராக பதிவாகி இருக்கும் மொத்த வழக்குகளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 11,829 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கடுத்ததாக ராஜஸ்தானில் 6794 வழக்குகளும், பீகாரில் 6,544 வழக்குகளும் பதிவாகி உள்ளன என்று ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெண்களை குறி வைத்து ஆதிக்கச் சாதியினர் தொடர்ந்து இது போன்ற கொடூரங்களை நிகழ்த்தி வருவதற்கு மக்கள் மத்தியிலும் அரசியல் தலைவர் மத்தியிலும் பெரும் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்து வருகிறது.

ராம ராஜ்ஜியம் எனக் கூறிக்கொண்டு அப்பாவி பெண்களை வல்லுறவுக்கு இரையாக்கி வருகின்றனர் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

Also Read: ஹத்ராஸ் சம்பவம் தணிவதற்குள் உ.பியில் மேலும் ஒரு தலித் பெண் பாலியல் வல்லுறவால் பலி இதுதான் ராம ராஜ்ஜியமா?