இஸ்ரேல் மீதான ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் நேரடி தாக்குதலை நடத்தியது. காசா மீது வான்வெளி தாக்குதல் மட்டுமின்றி தரைவழியாகவும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தற்போதுவரை 50 ஆயிரத்துக்கு அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை நடத்தி வந்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஆண்டு ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், அதன் பின்னர் இந்த இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து யார் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் நிலவி வந்தது.
இதனிடையே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவத் தளவாடங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் கடந்த வரம் கடுமையான தாக்குதலை மேற்கொண்டது. ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏராளமானோர் ஈரானிய தளபதிகள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேலிய நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர் இரு நாடுகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனிடையே ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். எனினும் ஈரான் - இஸ்ரேல் நாடுகள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வருகிறது.