அமெரிக்காவின் மிசூரி (Missouri) அடுத்துள்ள ஹொவல் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த பல்வேறு மாணவர்களும் படித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த செப்.14, 2024 அன்று, W.G. என்ற 13 வயது மாணவன் ஒருவர் ஆர்ட் கிராஃப்ட் செய்வதில் முனைப்புக் காட்டியுள்ளார்.
அதன்படி Dr.Pepper என்ற பெயர் கொண்ட குளிர்பான கேன்களை பயன்படுத்தி துப்பாக்கி போன்ற வடிவிலான ஒரு கலையை உருவாக்கியுள்ளார். மேலும் அதனை தனது சமூக வலைதளமான Snap Chat-ல் பதிவேற்றியுள்ளார். அந்த பதிவேற்றத்தில் 'AK-47' என்று குறிப்பிட்டு, ஒரு பாடல் ஒன்றையும் வைத்து பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த சூழலில் திடீரென அந்த மாணவனின் தாயாருக்கு பள்ளி முதல்வர் அழைத்து இதுகுறித்து தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் மகனுடன் மறுநாள் பள்ளியில் வந்து தன்னை சந்திக்கும்படியும் கூறியுள்ளார். இதையடுத்து மறுநாள் W.G. மாணவனும், அவரது தாயும் பள்ளிக்கு சென்றபோது, மாணவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் பள்ளி முதல்வர் உள்பட ஆசிரியர்களை சந்தித்துள்ள கேட்டுள்ளனர். அப்போது W.G. மாணவன், Snap Chat-ல், 'AK-47' என்ற பெயரில் அந்த குளிர்பான கேன்களை பதிவேற்றம் செய்துள்ளது குற்றச்செயல் என்றும், இதுகுறித்து சக மாணவர் ஒருவர் பயந்ததால், அவரது பெற்றோர் புகார் அளித்ததாகவும் அந்த பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்காக W.G. மாணவனை 3 நாட்கள் இடைக்கால நீக்கம் (சஸ்பெண்ட்) செய்வதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்ததால் அதிர்ச்சிடைந்த தாயார், இதுகுறித்து பேசியுள்ளார். இருப்பினும் பள்ளி நிர்வாகம் கேட்கவில்லை என்பதால் வேறு வழியின்றி பள்ளி நிர்வாகம் மீதும், ஆசிரியர்கள் மீது பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
அதில், இந்த விவகாரத்தில் தனது மகனின் கல்வி பாதிக்கப்படும் என்றும், இந்த சஸ்பெண்ட் என்பது அவனது நிரந்தர கல்வி பதிவில் இடம்பெறுவதால், எதிர்கால உயர்கல்வி வாய்ப்புகளில் இடையூறு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாணவர் மீது இதற்கு முன்பு இதுபோல் எந்த ஒரு பிளாக் மார்க்கும் இல்லை என்றும், அவர் எதற்கும் அபாயம் இல்லாதவர் என்பதும், எவரையும் மிரட்டும் நோக்கத்தோடு அவர் செய்தியொன்றும் வெளியிடவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதோடு பள்ளியின் வெளியே மாணவர்கள் என்ன செய்யக்கூடாது என்பதற்கான தெளிவான விதிகள் இல்லாததால், 14-வது திருத்தச்சட்டத்தின் கீழான ‘vagueness’ விதியை பள்ளி மீறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், தண்டனை நீக்கப்பட்டு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மாணவரின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்த வழக்கு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்துக்கு பள்ளி நிர்வாகம் மீது பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.