1) இம்ரான் கானே பாகிஸ்தான் பிரதமராக நீடிப்பார்
இடைக்கால பிரதமர் நியமிக்கப்படும் வரையில் பிரதமர் பதவியில் இம்ரான்கான் நீடிப்பார் என அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்துள்ளார். இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அதன் மீதான வாக்கெடுப்பு துணை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.இதையடுத்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான்கான் அதிபருக்கு பரிந்துரைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தை கலைப்பதாக பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து 90 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
2) தென் கொரியாவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை
தென்கொரியாவில் உள்ள ஏவுகணை செலுத்தும் மையத்துக்கு அந்த நாட்டின் ராணுவ மந்திரி சூ ஊக் சென்றபோது வடகொரியாவின் ஏவுகணை சோதனையை காட்டமாக விமர்சித்தார். அப்போது அவர், “தென்கொரியா மீது வடகொரியா ஏவுகணைகளை ஏவுவதற்கு திட்டம் எதுவும் வைத்திருந்தால், அந்த நாட்டின் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்துவதற்கான திறனும், தயார் நிலையும் தென் கொரியாவுக்கு இருக்கிறது” என்று கூறினார். இதற்கு பதிலடியாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங் “அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு நாட்டைப்பார்த்து, அழுக்கு நுரை போன்ற ஒருவர் முன் எச்சரிக்கை விடுப்பது விவேகம் இல்லாதது ஆகும். தென்கொரியா அதன் ராணுவ மந்திரியின் பொறுப்பற்ற கருத்துக்களுக்கு எதிராக ஒரு தீவிர அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும். பேரழிவை தவிர்க்க வேண்டுமென்று விரும்பினால் தென் கொரியா தன்னை ஒழுங்குபடுத்த வேண்டும்” என்று அவர் எச்சரிக்கை அறிக்கை விடுத்துள்ளார்.
3) புச்சா படுகொலை - ஐ.நா.பொது செயலாளர் வலியுறுத்தல்
உக்ரைனின் புச்சா நகரில் உள்ள ஒரு வெகுஜன புதைகுழியில் சுமார் 300 பேர் புதைக்கப்பட்டதாகவும், அந்த நகரம் முழுவதும் சடலங்கள் சிதறிக் கிடப்பதாகவும் அந்நகர மேயர் தகவல் தெரிவித்துள்ளார். அங்கு தெருக்களில் வைத்துள்ள குப்பை கொட்டும் தொட்டிகளில் பொதுமக்களில் 20 பேரின் உடல்கள் போடப்பட்டிருப்பது படங்களுடன் வெளியானது.
அவர்கள் மோசமான நிலையில் கொல்லப்பட்டு கிடந்ததாகவும், சிலரது கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருந்ததாகவும் ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், புச்சா படுகொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா.சபை பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உத்தரவிட்டுள்ளார்.
4) இலங்கையில் புதிய அமைச்சர் : அதிபர் கோத்தபய ராஜபக்ச உத்தரவு
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இலங்கை அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நேற்று பதவி விலகினர். இதையடுத்து, இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார். அமைச்சர் பதவிகளை ஏற்று பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். இதில், நிதி அமைச்சராக அலி சப்ரியும், கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனயும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சராக ஜி.எல்.பீரிஸ், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5) 87 முறை தடுப்பூசி செலுத்தி மிரள வைத்த முதியவர் !
ஜெர்மனியில் 87 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டவரை போலீசார் கைதுசெய்துள்ளனர். ஜெர்மனியில் 60 வயதிற்கு மேற்பட்டவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்நாட்டில் 61 வயது முதியவர் ஒருவர் 87 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த முதியவரை கைது செய்து நடத்திய விசாரணையில், அவர் கூறும்போது, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பமில்லாதவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, அவர்கள் சார்பாக தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக தெரிவித்தார்.