‘தொல்காப்பியத்திற்கு எழுதப்பட்ட உரைகள்’ என்ற பட்டியலில் கலைஞர் எழுதிய தொல்காப்பியப் பூங்காவும் இடம்பெற்றுள்ளது. 11.1.2003இல் தொல்காப்பியப் பூங்காவின் முதல் பதிப்பை வெளியிட்டார். புலவர்கள், பண்டிதர்கள், பேராசிரியர்கள் மட்டுமே தொல்காப்பியத்தைப் படிக்க முடியும், அந்தப் பொருளைப் புரிந்துகொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. தொல்காப்பியத்திற்கு எழுதப்பட்ட உரைகள் படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் சிரமமானது. உரைகளுக்கே உரை எழுத வேண்டும் என்ற பேச்சு இருந்துவருகிறது. சாதாரண மனிதனும் தொல்காப்பியத்தைப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும், இலக்கணத் தொகை நூல் ஒன்றைக் காலம்காலமாக எட்டாத பொருளாக வைத்திருப்பது ஏற்புடையதல்ல என்ற நோக்கில்தான் கலைஞர் தனக்கேயுரிய கவிதை நடையிலும், எளிய நடையிலும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியுள்ளார். இந்த உரையைப் படிக்கிற எவரும் தொல்காப்பிய நூற்பாவின் பொருளை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
கலைஞர் எழுத்ததிகாரத்தில் 17 நூற்பாக்களுக்கும், சொல்லதிகாரத்தில் 8, அகத்திணையிலில் 26, புறத்திணையிலில் 12, களவியலில் 13, கற்பியலில் 15, பொருளியலில் 15, மெய்ப்பாட்டியலில் 16, உவமையலில் 6, மரபியலில் 17 என்று மொத்தம் 142 நூற்பாக்களை மட்டும் தேர்ந்தெடுத்து, ‘உயிரும் மெய்யும், உயிர் மெய், மருந்து மாத்திரை, இன ஒற்றுமை, இலக்கண துறப்பு, நிலமும் பொழுதும், மகளிர் மடல், களவும் கற்பும் என்பன போன்ற நூறு தலைப்புகளில் எழுதியுள்ளார். ஒவ்வொரு தலைப்பிற்கு முன்னும் ‘மலர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கலைஞர் செய்திருக்கிற புதுமை. எதையும் வித்தியாசமாகச் சிந்திப்பவர். புதிய சிந்தனைகளை நோக்கி நகர்ந்து செல்பவர். எத்தனை கனமான விஷயத்தையும் கூர்மையாகவும் நகைச்சுவை உணர்வுடனும் எழுதுவதில் சமர்த்தர் என்பதற்கு தொல்காப்பியப் பூங்கா நல்லதொரு எடுத்துக்காட்டு.
தொல்காப்பியத்திற்கு பழைய உரை, பிற்கால உரை, எளிய உரை, ஆய்வுரை, தொகுப்புரை, புதுமை உரை என எழுதப்பட்ட, மற்ற உரைகளிலிருந்து கலைஞருடைய உரை வேறுபடுகிறது. நிகழ்காலச் சம்பவங்களை ஒப்பிடுதல், மொழிநடை, சொல்லப்பட்ட எடுத்துக்காட்டுகள் போன்றவையே ‘தொல்காப்பியப் பூங்கா’ நூலின் அழகு. தொல்காப்பிய நூற்பாக்கள் அனைத்துமே கலைஞருக்கு ஏற்புடைவை என்று சொல்லிவிட முடியாது. அவர் ஏற்கின்ற நூற்பாக்களும் உண்டு, முரண்பட்ட நூற்பாக்களும் உண்டு. அவர் இணக்கப்பட்டதைவிட முரண்பட்டதே அதிகம்.
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னால் – அய்யர்
யாத்தனர் கரணம் என்ப”என்ற நூற்பாவிற்குத் தனது உரையில் தொல்காப்பிய நூற்பா சொல்வது நிஜமாயின் “பார்ப்பனர் ஓதிய மந்திரமும், கோள் பார்த்துக் குறித்த ஓரியுமே, பாதுகாத்திடவில்லை அவர்களையென்று பகரும் சான்று சிலப்பதிகாரமே” என்று எழுதியிருக்கிறார். அய்யர் சொன்னபடி, நாள், நட்சத்திரம், நேரம் எல்லாம் பார்த்துதான் கோவலன் கண்ணகி திருமணம் நடைபெற்றது. அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடிகள் எப்படிப்பட்டவை? பிராமணர்கள் ஓதுகின்ற மந்திரங்கள் பொய்யானவை என்று நிரூபிக்கிறார்கள். கலைஞருடைய அறிவியல் பார்வை எல்லா இடத்திலும் செயல்படும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
“புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மகிமை சாலா மருட்கை நான்கே”(மெய்ப்பாட்டியல் – நூற்பா – 7) என்ற நூற்பாவிற்கான உரையில் வர்ணாசிரம தர்மமோ, மனுதர்மமோ சொல்கிற விதிமுறைப்படி இன்றைய சமூகம் இயங்கவில்லை. இயங்கவும் முடியாது. இந்தியா அரசியலமைப்புக்கு அடிப்படையாக இருப்பது தொல்காப்பிய நூற்பாவோ, மனுதர்மமோ அல்ல, அம்பேத்கார் இயற்றிய சட்டமே என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
தொல்காப்பிய நூற்பா குறிப்பிடும் பொருளுக்கு மாற்றாகப் புதிய பொருள்தரும் வகையில் சிலப்பதிகாரத்தையும் அம்பேத்கார் இயற்றிய சட்டத்தையும் உதாரணங்களாகக் குறிப்பிடுகின்றன. கலைஞர் உரையின் மேன்மை காட்டியிருப்பது.
தொல்காப்பியம் பழந்தமிழரின் வாழ்வை அறிந்துகொள்ள உதவுகிறது, அதனால் அதைக் கொண்டாட வேண்டும், நூலைப் பரவலாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கலைஞர் ‘தொல்காப்பியத்திற்கு உரை எழுதியிருக்கிறார். “தொல்காப்பியம் துவங்குவது கடவுள் வாழ்த்துடன் அல்ல” என்று எழுதியுள்ளார்.
“கல்வி தருகண் இசைமை கொடை எனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே”பொருளதிகாரம்
மெய்ப்பாட்டியல் நூற்பா – 9, 4-க்கு கலைஞர் எழுதியுள்ள விளக்கத்தைப் படித்தால் தெரியும் அவருடைய உரை ஏன் மேலானது என்று.
கரும்பெடுத்து தமிழ்ப்பிழிந்து மலரில்
சுரும்பெடுத்து வருகின்ற தேன் கலந்து
அரும்பெடுத்து சிரிக்கின்ற மகளிர் கூட்டம்
ஏறம்பெடுத்துச் செல்கின்ற உணவுகூட
எம்மன்னன் குமண வள்ளல் தந்த தென்று
எழுச்சிநடை போடுகின்ற கொங்கு நாடு”
தொல்காப்பிய நூற்பாவுக்கு உரை எழுதிய கலைஞர் குமண வள்ளலின் பெருமையைச் சொல்கிறார். எப்போதுமே அவருடைய வார்த்தைகளுக்கும் வாக்கியங்களுக்கும் தனி அழகுண்டு. வார்த்தைகளை அடுக்கடுக்காகக் கோர்ப்பதில் வல்லவர். குமண வள்ளல் பற்றி அவர் எழுதி இருக்கிற வரிகளே நல்லதொரு சான்றதாரம்.
பொருளதிகாரம் மரபியல் நூற்பா: 27-க்கு (மலர் 93) ‘அன்றே வளர்ந்திருந்த அறிவியல்’ என்ற தலைப்பில் கலைஞர் எழுதியுள்ள உரையும் விளக்கமும் வியப்பிலாழ்த்துகிறது. மலர் 26 – பொருளதிகார அகத்திணையில் – நூற்பா – 34க்கு கலைஞர் எழுதியுள்ள உரை இது:
“உன்னைப் பிரிந்து அவள் வாழ்வாள் என்பது நீரை விட்டுப் பிரிந்து மீன் வாழும் என்ற கதைதான் என்று நினைத்துப்பார்த்து அவளை அழைத்துப்போவாயாக... தனிமைத் தனலில் பசலைக் கொடி போல் வதங்கிடவே – நான்.”
கலைஞர் எழுதிய நூல்களிலேயே அதிக சர்ச்சையையும் கண்டனத்தையும் வரவேற்பையும் பெற்ற நூல் ஒன்று உண்டு என்றால் அது தொல்காப்பியப் பூங்காதான்.
“செறிவும் நிறைவும் செம்மையும் செய்யும்
அறிவும் அருமையும் பொன்பாலன” – (பொருளியல் நூற்பா – 15)
“பெருமையும் ஊரனும் ஆடுஉ மேலான” களவியல் நூற்பா (95),
“உயர்ந்தோர்க்குரியன ஒத்தினான்” (அகத்திணை – 39)
“ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேலேன”,
“வழக்கெனப்படுவது உயர்ந்தோர் கூற்றே –
நிகழ்ச்சி அவர் சுட்டு ஆதலும் (மரபியல் – 94)போன்ற நூற்பாக்கள் வர்ணாசிரம தர்மத்தை, மனுநீதியின் தர்மத்தை முதன்மைப்படுத்திப் பேசுகிறது. பெண்ணியத்திற்கெதிராகப் பேசுகிறது. இப்படியான ஒரு நூலுக்கு கலைஞர் எப்படி உரை எழுதலாம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
“புலவர் உலகின் தனிச் சொத்தைத் தமிழ் மக்களின் பொதுச் சொத்தாக்கும் அசாதாரணமானது முயற்சியில் பெரு வெற்றி கண்டிருக்கிறார்” என்று வா.செ.குழந்தை சாமியும், “அஃறிணை விரவும் பெயர் – இயல்பு மருளவே” என்ற தொல்காப்பிய எழுத்ததிகாரம். வரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ள உரை மிகவும் சிறப்பானது” என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் எழுதியுள்ளார். “தமிழின் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தின் மேல் இத்தனை வெளிச்சம் விழுந்ததற்கு கலைஞர்தான் காரணம். வேண்டும். எளிய முறையில் அதன் சூத்திரங்களை விளக்கி, தொல்காப்பியம் அப்படி ஒன்றும் கடினமான விஷயமல்ல, இதைப் பார்த்து பயப்பட வேண்டாம் என்பதற்காக ‘பூங்கா’ நிரூபிக்கிறது” என்று சுஜாதா தொல்காப்பியப் பூங்கா நூல் குறித்து எழுதியுள்ளார். சிறந்த நூலுக்கான இலக்கணமே எதிர்ப்பும் ஆதரவும் இருப்பதுதானே. அது தொல்காப்பியப் பூங்காவிற்கு நிகழ்ந்திருக்கிறது.
கலைஞருடைய இலக்கியம், இலக்கண, மொழியின் செழுமையை அறிந்துகொள்ள விரும்புவோர் ‘தொல்காப்பியப் பூங்கா’வைப் படிக்க வேண்டும். ஒரு கவிதை, சிறுகதை, நாவல் வாசகரின் மனதில் நிற்பதுபோல கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா உரையில் பயன் படுத்தியிருக்கும் உதாரணங்களும் வாசகர் மனதில் நிற்கும். படிப்பு என்பது அறியாததை அறிந்துகொள்வது. தொல்காப்பியப் பூங்கா வாசகர்கள் அறியாத பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது.
பயண நூல்
தமிழர்கள் பயணம் செல்வதில்லை. மீறி பயணம் சென்றால் அது திருத்தல யாத்திரைதான். அதனால் பயணம் பற்றிய நூல்கள் நம்மிடம் அரிதாகவே உள்ளன. ‘இனியவை இருபது’ என்பதுதான் கலைஞருடைய பயண நூல். இந்த நூலிலும் அவர் தனக்கான தனித்த அடையாளத்தைக் காட்டத் தவறவில்லை. பொதுவாக, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வோர், தன்னுடைய பயண அனுபவத்தை நூலாக எழுதுவது மரபு. பெரும்பாலான பயண நூல்கள் ‘நான்’ இந்த நாடுகளுக்குச் சென்றேன். இந்த இடங்களையெல்லாம் பார்த்தேன், ரசித்தேன் என்று எழுதுவார்கள். அதாவது தாங்கள் பார்த்த நாடுகளின் பெருமையை, பார்த்த இடங்களின் சிறப்பைப் பற்றி எழுதியிருப்பார்கள். தங்களை முன்னிலைப்படுத்தி இருப்பார்கள். ஆனால், கலைஞர் தான் பயணம் செய்த நாடுகளின் சமூகப் பொருளாதார, அரசியல், வரலாறு எவ்வாறு உள்ளது; சமூகக் கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்பது பற்றி எழுதியிருப்பார். எந்த விஷயமாக இருந்தாலும் அதை அரசியல் நிகழ்வோடு பொருத்திப்பார்ப்பார். இதுதான் மற்ற பயண நூல் எழுதிய எழுத்தாளர்களிடமிருந்து கலைஞரை வேறுபடுத்திக் காட்டுவது ‘இனியவை இருபது’ தலைப்புக்கேற்றபடிதான் இருக்கிறது. ‘இனியவை இருபது’ அதிகம் பேசப்பட்ட மாதிரி தெரியவில்லை.கலைஞருடைய படைப்புகள், அவருடைய நிலைப்பாட்டிற்காகவே புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. தெரிகிறது. தனிப்பட்ட நபரின் அரசியல் ஈடுபாடுகளுக்காக அவருடைய படைப்புகளைப் புறக்கணிப்பது, மௌனம் காப்பது என்பது இலக்கிய மோசடியாகும்.
பதிப்புகள்
பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு நூல்களை கலைஞன் எழுதியுள்ளார். பழைய காலத்தில் பதிப்பிக்கப்பட்ட பல நூல்கள், கவிதை, கட்டுரையா, நாடகம் என்ற தலைப்புகூட கொடுக்கப்படவில்லை. ‘இந்த நூலை வாசகர்கள் வரவேற்பார்கள்’ என்று நம்புகிறோம் என்று மட்டுமே முன்னுரையில் எழுதப்பட்டிருக்கும். பழைய காலத்தில் அச்சிடப்பட்ட நூல்களில்தான் இந்தக் குறை இருக்கிறது, அண்மைக் காலத்தில் வெளியிடப்பட்ட நூல்களில் அந்தக் குறை இல்லை சொல்வதற்கில்லை.
கலைஞருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு ‘கண்ணடக்கம்’ 1942இல் வெளிவந்துள்ளது. அடுத்தடுத்து அவருடைய சிறுகதைத் தொகுப்புகள் பல தலைப்புகளில் வந்துள்ளன. அண்மைக் காலத்தில் தொகுக்கப்பட்ட ‘கலைஞரின் சிறுகதைப் பூங்கா’ நூலில் பழைய தொகுப்புகள் குறித்த தகவல்களோ, கதைகள் வெளிவந்த ஆண்டுகள் குறித்த தகவல்களோ இல்லை. 1938இல் கலைஞர் தனது முதல் கவிதையை எழுதியுள்ளார். அதன் பிறகு பல தலைப்புகளில் அவருடைய கவிதை நூல்கள் வந்துள்ளன. 2004ஆம் ஆண்டு சீதைப் பதிப்பகம் தொகுத்த ‘கலைஞரின் கவிதை மழை’ என்ற நூலில் பழைய கவிதைத் தொகுப்புகளின் தலைப்புகளோ, அதை வெளியிட்டவர்கள் பற்றிய குறிப்புகளோ இடம்பெறவில்லை. எந்தெந்த ஆண்டுகளில் எந்தெந்த கவிதையை எழுதினார் என்ற தகவல்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
கருணாநிதி பதிப்பகம், காணா மூணா பதிப்பகம், தமிழ்க்கனி, முத்துவேல், அஞ்சுகம் பதிப்பகம் என்று பல பெயர்களில் கலைஞருடைய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பதிப்பகங்களின் மூலம் வெளியிடப்பட்ட நூல்களிலும் சரியான தகவல்கள் இல்லை.
கலைஞருடைய வெளிவந்த எழுத்துகளை மறுபதிப்பு வெளியிட்ட பதிப்பகங்கள், முதல் அச்சு ஆண்டு, எத்தனை முறை மறுஅச்சு கண்டிருக்கின்றன, எந்த நிறுவனம் வெளியிட்டது என்ற தகவல்களைத் தரவில்லை. கலைஞருடைய எழுத்துக்களை ஆய்வு செய்த எம்.ஃபில்., பி.எச்டி ஆய்வறிஞர்களும் அவர் எழுதிய கவிதைகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு, சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள், நாடகங்கள், திரைக்கதை, வசனப் படங்களின் எண்ணிக்கை, பிற நூல்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவல்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தந்திருக்கிறார்கள். தமிழ் விக்கிப்பீடியா கொடுத்திருக்கிற தகவல்களும் முழுமையானவை அல்ல.
கலைஞருடைய படைப்புகளில் எம்.ஃபில், பி.எச்.டி. ஆய்வு செய்த ஆய்வறிஞர்களும், பிறரும் நூல்களை வெளியிட்டுள்ளனர்.
இப்படி வெளியிடப்பட்ட பல நூல்கள், அவருடைய படைப்பாளுமையை முழுமையாகப் புரிந்துகொண்டு, அறிந்துகொண்டு எழுதப்பட்டவை என்று சொல்ல முடியாது. தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவும், அவருடைய அன்பைப் பெறுவதற்காகவே பல நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. கலைஞருடைய எழுத்தின் பலம், பலவீனம் குறித்து செறிவாகவும், விமர்சன ரீதியாகவும் அணுகி எழுதப்பட்ட நூல்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று சொல்ல முடியாது.
கலைஞரின் எழுத்துகளைப் படிப்பதற்கென்றே பெரிய வாசகப் பரப்பு இருந்தது. அதே நேரத்தில் கலைஞருடைய படைப்புகள் ‘பிரச்சாரம்’, ‘வார்த்தை ஜோடனை’ ‘வார்த்தை அலங்காரம்’ இலக்கியத் தகுதியற்றவை என்று புறக்கணித்த சிறிய வாசகப் பரப்பும் இருக்கவே செய்தது. இவ்விரு வாதங்களும் இன்னும் தொடரவே செய்கின்றன. தி.மு.க. அதிகாரத்திற்கு வந்ததும் “மேல்தட்டு வர்க்கத்தினரிடமிருந்த அதிகாரம் லும்பன்களிடம் சென்றுவிட்டது” என்று ஒரு சிலர் அப்போது பேசவும் எழுதவும் செய்தனர். அதிகாரம் எப்போதும் மேல்தட்டு வர்க்கத்திடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் யார்? அவர்களுடைய மனோபாவம் என்ன? இதே கேள்விகளைத்தான் கலைஞருடைய படைப்புகளை ‘பிரச்சாரம்’, ‘வார்த்தை ஜோடனை’, ‘வார்த்தை அலங்காரம்’, ‘இலக்கியத் தரமற்றது’ என்று எழுதியவர்களிடம், பேசியவர்களிடம் கேட்கத் தோன்றுகிறது.
தன்னுடைய இலக்கியப் படைப்புகள் குறித்து யார் என்ன விமர்சனம் வைக்கிறார்கள் என்று கவலைப்படாமல் எழுதியவர். ‘அது சரியில்லை, இது சரியில்லை’ என்று சொல்கிறவர்களுக்கு ‘கற்பனை உணர்ச்சிப் பூர்வமாக கவிதை சொற்களாகப் பாய்ந்திடும்போது இலக்கணக் கட்டுப்பாடு. என்னும் கடிவாளத்தை என்னால் பயன்படுத்த முடியவில்லை” என்று ஒரு தெளிவான விளக்கத்தை அவர் கொடுத்திருக்கிறார் என்றால் நிச்சயமாக ‘இலக்கணம் முக்கியமில்லை’ என்றுதான் சொல்லியிருப்பார். தொடர்ந்து கலைஞரின் படைப்புகள்மீது விமர்சனம் வைத்தவர்களுக்கு ‘இலக்கணம் என்னும் தாய்ப்பால் அருந்தாமல் பசி எழுந்தபோதெல்லாம் புதுக்கவிதைப் புட்டிப்பால் குடித்துவிடும் குழந்தை நான்’ என்றும் விளக்கம் தந்துள்ளார். ஏற்கனவே ‘இதுதான் இலக்கணம்’ என்று வகுத்து வைத்திருந்த இலக்கண, இலக்கிய மொழி நெறிகளுக்கு எதிராக எழுந்ததுதான் திராவிட இயக்க இலக்கியம் என்ற கலைஞரின் படைப்புகள் நிரூபிக்கின்றன.
கலைஞர் தான் நினைப்பதை, பேசுவதை, செய்வதை எல்லாம் எழுத்தில் பதிவு செய்ய வேண்டும் என்கிற வேட்கை கொண்டவர். எழுதுவதிலும் படிப்பிலும் அவருக்கு இருந்தது பேராசை. எழுதுவதிலும் படிப்பதிலும் அவருக்கு ஒரு நாளும் சலிப்பு வந்ததே இல்லை. அவருக்கு இருந்த குடும்ப நெருக்கடிகள், அரசியல் நெருக்கடிகள், பதவியில் இருக்கும்போது, நிர்வாகம் சார்ந்த நெருக்கடிகளுக்கிடையேதான் கிட்டத்தட்ட 2 இலட்சம் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. காந்திக்கு அடுத்ததாக அதிகமாக எழுதிய ஒரே இந்திய எழுத்தாளர். அந்த விதத்தில் அவர் அதிசயம்தான். “கவிதை எழுத நேரம் இல்லை எனினும் கலை உள்ளம் என்னை விடுவதாக இல்லை” என்று எழுதியிருக்கிறார்.படிப்பையும் எழுதுவதையும் தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர்.
கலைஞருடைய படைப்புகள் ‘எனக்குப் பிடிக்கும்’, ‘பிடிக்காது’ என்ற நிலையிலிருந்து விலகி ‘தூய இலக்கியம்’, ‘பிரசார இலக்கியம்’ என்ற கண்ணோட்டத்திலிருந்து விலகி ‘தரமான படைப்பு’, ‘தரமற்ற படைப்பு’ என்ற மனப்போக்கிலிருந்து விலகி நின்று ஒரு விமர்சகனாக, சமூக அக்கறையுள்ள வாசகனாக கலைஞருடைய படைப்புகளை அணுகுங்கள் வேண்டிய அவசியம். சமூக நோக்கில், அரசியல், பொருளாதார, படைப்பிலக்கிய நோக்கில் ஆராயும்போதுதான் அவருடைய படைப்புகளின் வலிமையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இலக்கிய விமர்சனத்திற்கு, பகுப்பாய்விற்கு, அரசியலோ, அதிகாரமோ தடை அல்ல. மனத் தடையில்லாமல் விமர்சிப்பதுதான் விமர்சனத்தின் மேன்மை. கலைஞருடைய படைப்புகளைப் படிக்க வேண்டும், விமர்சிக்க வேண்டும். கலைஞருடைய படைப்புகளை விமர்சிப்பது என்பது அவரை இகழ்வது ஆகாது. அவருடைய படைப்புகளை மேலும் புரிந்துகொள்ள உதவும். கலைஞரைப் போற்றுவது என்பது அவருடைய படைப்புகளைப் போற்றுவதுதான்.
தற்காலத் தமிழ் நவீன எழுத்தாளர்கள், விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் கலைஞருடைய படைப்புகள் குறித்துப் பேச மறுக்கின்றனர். மௌனம் காக்கின்றனர். ஞாபக மறதி போன்று நடிக்கின்றனர். இப்படி நடந்துகொள்வதா அறிவுலக, இலக்கிய உலகச் செயல்பாடு? ஒரு படைப்பாளியின் படைப்புகள் குறித்து ஏற்றோ, நிராகரித்தோ பேசலாம். பேசாமல் இருப்பது, மௌனம் காப்பது, ஞாபக மறதி போன்று நடிப்பது என்பது இலக்கிய மோசடி. இதனால் சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கு இழப்பு என்பதைத் தாண்டி, மொழிக்கு, இலக்கியத்துக்கு எவ்வளவு இழப்பு என்று யோசிக்கத் தவறுவது தமிழ் இலக்கிய உலகம் நேர்மையின்மையே காட்டுகிறது.
தன்னுடைய படைப்புகளுக்கான வடிவத்தை, உள்ளடக்கத்தை, மொழியைத் தேர்ந்தெடுத்ததில், எழுதிக் காட்டியதில் கலைஞர் தமிழ் நவீனப் படைப்பாளி. தமிழ் மொழியில் நவீன இலக்கியம் உருவாவதற்கு வழி அமைத்தவர்களில் கலைஞர் முதன்மையானவர். மரபிலக்கியத்தையும், நவீன இலக்கியத்தையும் சமமாகப் போற்றியவர். இரண்டுக்கும் இணைப்புப் பாலமாக இருந்தவர். என்னுடைய படைப்புகள் வாசகர்களை மௌனத்தை நோக்கி, நிசப்தத்தை நோக்கி நகர்த்தும் என்று சொன்னவரில்லை. கலைஞருடைய எழுத்துக்கள் பூடமாகப் பேசுபவை அல்ல. உரக்கப் பேசுபவை. நேர்க்கோட்டுத் தன்மையில் எழுதப்பட்டவை. இதனால் அவருடைய படைப்புகள் எந்தப் புள்ளியில் இலக்கியமாகிறது, எந்தப் புள்ளியில் அரசியல் செய்கிறது என்பது கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நுணுக்கமாக. எழுதியவர். சமூகத்தைக் கேளிக்கைப்படுத்துவதற்காக ஒரு வரியைக்கூட எழுதியவரில்லை. சமூகம் ஏன் மகிழ்ச்சியாக இல்லை என்ற கேள்விகளை எழுப்புவதற்காகவே எழுதியவர். தன்னுடைய குரலைச் சமூகத்தின் குரலாக இலக்கியத்தின் மூலம் பதிவுசெய்தவர்.
இரண்டாயிரமாண்டுகால தமிழ் இலக்கியப் பரப்பில் தன்னுடைய எழுத்தின், மொழியின் வன்மையால் என்றும் தனித்து ஒளிரும் நட்சத்திரமாக இருப்பார்.
- எழுத்தாளர் இமையம்.