
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மாலையீடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக தெற்கு மாவட்ட பூத் லெவல் ஏஜென்ட் மற்றும் பூத் டிஜிட்டல் ஏஜென்ட் ஆகியவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் KN நேரு, எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் KN நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை ஆரம்பித்தால் என்ன? ஏற்கனவே அவர் இதுபோன்றுதான் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அதை மீறிதான் திமுக வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக முக ஸ்டாலின் வந்தார்.

அதிமுக தொண்டர்களுக்கு பாஜகவோடு கூட்டணி வைத்தது பிடிக்கவில்லை. அதனால் பாஜகவை நன்மை பயக்கும் கட்சி என்று பழனிசாமி மாற்றுகிறார். நாங்கள் என்ன நன்மை செய்யாமலா இருக்கின்றோம்? முன்பு பாஜகவோடு கூட்டணி இல்லை என்று கூறினார். தற்போது கூட்டணி வைத்து நன்மை பயக்கும் கட்சி என்று கூறுகிறார். அதனை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
எடப்பாடி பழனிசாமிக்கு கூடும் கூட்டத்தை விட பல மடங்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. நாளை தமிழ்நாடு முதலமைச்சர் திருவாரூர் வருகிறார் .திருவாரூருக்கு வந்து பாருங்கள் முதலமைச்சருக்கு எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்று. 15ம் தேதி மயிலாடுதுறை தமிழ்நாடு முதலமைச்சர் வருகிறார். அப்போது பாருங்கள் யாருக்கு கூடிய கூட்டம் அதிகம் என்று.








