சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகானில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், அந்நாட்டை ஆட்டி படைத்து வருகிறது. கோவிட்-19 என பெயரிடப்பட்ட இந்த வைரசினால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்துக் கொண்டே வந்தது.
இந்நிலையில் சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,465 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பரில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தற்போதுதான் குறைய தொடங்கியுள்ளது. இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான பணியில் உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் குழுவுடன் சீன மருத்துவ நிபுணர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது, கொரோனாவின் வீரியம் குறையத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.