
மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே முந்தைய தி.மு.க அரசு மீது பழிவாங்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைக் கைது செய்து அராஜகமாக நடந்து கொண்டது. பின்னர் எ.வ.வேலு வீட்டில் ரெய்டு நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது த.வெ.க அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டியதால் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு நடத்தி மிரட்டப் பார்த்தது விஜய் அரசு.
தற்போது முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை இன்று கைது செய்துள்ளது. இந்தச் செய்தி மற்றும் கைது நடவடிக்கைக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்!
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.
அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது" என தெரிவித்துள்ளார்.






