
தமிழ்நாடு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு அதிகபட்ச விலையாக வெளி சந்தையில் இருந்து யூனிட்டிற்கு ரு.35 முதல் ரூ.37 வரை மின்கொள்முதல் செய்ய த.வெ.க அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதனைக் கண்டித்து தி.மு.க முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது,
“தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி அமைந்தது முதல் மின்வெட்டு பற்றி பேசாத நாட்கள், செய்திகள் வெளிவராத நாட்கள் என ஒருநாள் கூட இல்லை. அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், பட்டமளிப்பு விழா, உச்சபட்சமாக தலைமைச் செயலகம் என அனைத்து இடங்களிலும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையிலும் ஏற்படக்கூடிய நிர்வாகத் தோல்வியால் மக்கள் அவதியடைவது குறித்து இன்றைய டம்மி முதலமைச்சருக்கு கவலையில்லை. இவர், வெறும் ரீல்ஸை மட்டுமே முன்வைத்து, மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகிறார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர்தான் பொறுப்பற்று இருக்கிறார் என்றால், அமைச்சர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். குறிப்பாக, மின்சாரத்துறை அமைச்சர், தனது துறையைத் தவிர பிற துறைகளுக்கு விளக்கம் அளிக்கிறார். ஆனால், தன்னுடைய மின்சாரத்துறை குறித்து கேள்வி கேட்டால், அதற்கு பதிலளிக்காமல் தொடர்பில்லாமல் பேசுகிறார்.

தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சிப்பொறுப்பேற்று 5 மாதங்களாகியும், மின்வெட்டு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலில் ஃபியூஸ் கேரியர் காணவில்லை என்றார்கள், பிறகு கருப்பு ஆடுகள் என்றார்கள், தற்போது பஞ்சாப்பில் 15 மணிநேரம் மின்வெட்டு இருக்கிறது என்கிறார்கள். இதுபோன்ற மோசமான நிலையில்தான் த.வெ.க செயல்படுகிறது.
மக்களின் முதலமைச்சராக விளங்கும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் ஆண்டுதோறும் மின்தேவை அதிகரித்து வந்தது. 5 ஆண்டுகளில் 4,349 மெகாவாட் மின்சாரத் தேவை அதிகரித்தது. இந்த தேவை அதிகரித்தாலும், சீராக மின்விநியோகம் செய்த அரசு தி.மு.க அரசு.
2021ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் அதிகபட்சமாக யூனிட்டிற்கு ரூ.20-க்கு மின்கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டபோது, மின்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என இன்றைய அமைச்சர் நிர்மல் குமார் பதிவிட்டார். ஆனால், இன்றைக்கு அவர் யூனிட்டிற்கு ரூ.37-க்கு மின்கொள்முதல் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளார்.
தி.மு.க ஆட்சியில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் உச்சபட்ச மின்தேவை ஏற்படும் என்பதற்காக முன்கூட்டியே கணக்கெடுத்து, பொங்கலுக்கு முன்பாகவே ஒப்பந்தங்களை மேற்கொள்வோம். நம் சொந்த மின் உற்பத்தி ஆலையில் கோளாறு ஏற்பட்டால் மட்டும், அவசரத் தேவைக்காக பரிமாற்றம் முறையில் மின்சாரம் வாங்குவோம். ஆனால், இன்றைய த.வெ.க அரசு முழுக்க முழுக்க வெளி சந்தையில் மின் கொள்முதல் செய்கிறது.
அ.தி.மு.க ஆட்சியில் 22 ஆயிரம் மில்லியன் யூனிட், தமிழ்நாடு அரசின் TANGEDCO-வின் சொந்த உற்பத்தியாக இருந்தது. அதனை திராவிட மாடல் ஆட்சியில் 29 ஆயிரம் மில்லியன் யூனிட்டாக உயர்த்தினோம். அதற்கு காரணம், மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கை.

தி.மு.க ஆட்சியில் 70% முதல் 75% வரை இருந்த தமிழ்நாடு அரசின் சொந்த மின் உற்பத்தியை 30% - 35%-ஆக குறைத்துள்ளது த.வெ.க அரசு. இதற்கு காரணம், TANGEDCO-ன் சொந்த உற்பத்தியை குறைத்து, வெளி சந்தையில் மின் கொள்முதல் செய்யும் நடைமுறையை அமைச்சர் நிர்மல் குமார் மேற்கொள்வதுதான். வேறு மாநிலங்களில் இருந்து யூனிட்டிற்கு ரூ.37 அளித்து மின்கொள்முதல் செய்கிறார்கள்.
தமிழ்நாடு அரசின் சொந்த மின் உற்பத்தியைக் குறைத்து, வெளி சந்தையில் ரூ.35-க்கு மின் கொள்முதல் செய்வது, இன்றையை மின்துறையின் நிதிநிலையை சீரழித்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை தடைசெய்யும்.
இந்த ரீல்ஸ் ஆட்சியில் மின் கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளதற்கு மக்கள் கட்டும் மின் கட்டணமே சான்று!”






