
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த கடந்த 5 மாதங்களில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கின் நிலை அதலபாதாளத்தில் சென்றுள்ளது. குறிப்பாக தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், குழந்தைகள் கடத்தல் என மக்களை அச்சுறுத்தும் சம்பவங்களே நடந்து வருகின்றன.
எங்கள் தலைவர் பேசும் போது பேசுவார் என செய்தியாளர்களிடம் முண்டிக்கொண்டு பதிலளிக்கும் தவெக அமைச்சர்கள், இந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும் தங்களது தலைவரான முதலமைச்சர் விஜய் பதிலளிப்பாரா என்பதை கேட்டுச் சொல்ல வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கு சீர்கேடு பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் வரும் அக்.31-ஆம் தேதி அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை ஆகியவை அதிகரித்து சட்டம் ஒழுங்கு பெரியளவில் சீர்கேட்டு இருப்பதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைகள் கடத்தல் ஆகியவை மிகப்பெரிய அளவில் அதிகரித்து தமிழ்நாட்டை பாதுகாப்பற்ற மாநிலமாக இந்த ஆட்சி கொண்டு வந்திருக்கிறது.
இதுபோன்ற குற்றச் செயல்களில் ஆளும் த.வெ.க.வினரே பெரிய அளவில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்த அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ஒரு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளி உள்ள த.வெ.க. அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் வரும் அக்.31-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.






