
SIR மூலமாக நடந்துள்ள தேர்தல் முறைகேட்டைக் கண்டித்தும், இதற்குப் காரணமாக இருந்த தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரியும் இன்று டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) போராட்டம் அறிவித்திருந்தது.
இந்த போராட்டத்தைக் கண்டு அஞ்சிய ஒன்றிய அரசு 25,000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் இராணுவத்தைக் குவித்துள்ளது. மேலும் நாடாளுமன்றம் நோக்கி வரும் இளைஞர்களை வலுக்கட்டாயமாகத் கைது செய்து வருகிறது.
இந்நிலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாகச் சென்னையில் போராட்டம் நடத்திய இளைஞர்களை த.வெ.க அரசு குண்டுகட்டாகக் கைது செய்துள்ளது. டெல்லியில் பா.ஜ.க எப்படி இளைஞர்களைப் போராடவிடாமல் கைது செய்து வருகிறதோ, அதேபோல் த.வெ.க அரசும் போராடும் இளைஞர்களைக் கைது செய்துள்ளது.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது சமூகவலைதள பதிவில் ”தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று பெசன்ட் நகரில் அமைதியாக போராடிய இளைஞர்கள் மீது காவல் அராஜகத்தை ஏவி கைது செய்துள்ள இந்த Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஒட்டுமொத்த நாடும் - இவர்கள் கூட்டணி வைத்திருப்பதாக சொல்லிக்கொள்ளும் சில கட்சிகளும் கூட இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் போது, இந்த Dummy முதலமைச்சர், யாருக்கு பயந்து நடுங்கி இந்தப் போராட்டத்தை நசுக்குகிறார்.
சுயமரியாதையும் - நாட்டின் மீதும் அக்கறையும் கொண்ட அறிவார்ந்த இளைஞர்களை கைது செய்வதன் மூலம், டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை இந்த முதலமைச்சர் நிரூபித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை உடனே விடுக்க வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்றத் துடிக்கும் இளைஞர் படையின் குரலை ஒடுக்குவதை ஏற்கமுடியாது" என தெரிவித்துள்ளார்.






