
த.வெ.க. அமைச்சர்களாலும், கூட்டணிக் கட்சியினராலும் மூடி மறைக்கப்பட்ட உண்மையை அம்பலப்படுத்தியிருக்கிறார் கள்ளக்குறிச்சிப் பெண் மாவட்ட ஆட்சியர். த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் தகாத போக்கிற்குத் துணைபோன த.வெ.க.வினரின் செயலுக்குக் குட்டு வைப்பதுபோல் இந்தச் செயல் அமைந்துள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டி, தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்ததாவது,
“போலியாக உருவாக்கப்பட்ட த.வெ.க அரசின் சிங்கப்பெண் படை, யாருக்கும் எந்த விதப் பாதுகாப்பையும் தர முடியாத நிலையில், ஒரு மாவட்டத்தின் பெண் ஆட்சியர் உண்மையான சிங்கப் பெண்ணாக நிமிர்ந்து நிற்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அந்தத் தொகுதியின் கேடுகெட்ட த.வெ.க. எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி, பாலியல் தொந்தரவுகள் செய்த விவகாரத்தில் ஒட்டுமொத்த த.வெ.க அரசு நிர்வாகமும் உண்மையைக் குழி தோண்டிப் புதைப்பதற்கே முயன்றது!
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று பதவி வெறியில் அமைச்சர்கள் வாய்கூசாமல் பொய் சொன்னார்கள். ஆட்சி நிர்வாகத்திற்குத் தலைமை ஏற்றிருக்கும் முதலமைச்சர் விஜய் வழக்கம்போல வாயை திறக்கவில்லை.

அமைச்சர் பதவிக்காக மானம் - ஈனம் இல்லாத கூட்டணித் தலைவரோ “கொடுத்த காசுக்கு மேலே கூவுறான்டா” என்கிற அளவிற்கு, “எம்.எல்.ஏ பாவம்’‘ என்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக நீதிமன்றத்திலேயே அரசின் வழக்கறிஞர், “பெண் ஆட்சியரிடமிருந்து அப்படி எந்தப் புகாரும் வரவில்லை” என்று விவகாரத்தை மூடி மறைக்கத் துணிந்தார்.
ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் கூட்டுச் சதி செய்வது போல செயல்பட்ட நிலையில், பெண் ஆட்சியரின் மன நிலை என்ன பாடுபட்டிருக்கும்? இன்னொரு மாவட்டத்தில் ஆட்சியராக உள்ள அவரது கணவரின் மனநிலை எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும்?
உயர் பொறுப்பில் இருக்கும் ஐ.ஏ.எஸ். தம்பதியினருக்கே இந்த த.வெ.க அரசில் நியாயம் இல்லை. நீதி இல்லை. அப்படிப்பட்ட நிலையிலும், துணிந்து முடிவெடுத்து மாவட்ட எஸ்.பி.யிடம், பெண் ஆட்சியர் புகார் அளித்துள்ள செய்தியை இன்று தி இந்து நாளிதழ் துணிச்சலாக வெளியிட்டுள்ளது.
உயர்பொறுப்பில் உள்ளவர்கள் தொடங்கி, எந்த ஒரு பெண்ணுக்கும் பாதுகாப்பில்லாத த.வெ.க ஆட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டர் புகார் அளித்திருப்பது அவரது பெரும் தைரியமிக்க போராட்ட உணர்வைக் காட்டுகிறது.
தொடக்கத்திலிருந்தே தி.மு.க மட்டுமே இந்த விவகாரத்திற்காகப் பொதுவெளியில் போராட்டம் நடத்தி குரல் கொடுத்தது. நியாயத்திற்குத் துணை நின்றது.
அண்ணன், தாய்மாமன் என்று சொன்னவர்கள் எல்லாம் குற்றவாளியைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்த நிலையில், ‘அப்பா’ மு.க.ஸ்டாலின் தான் தமிழ்நாட்டில் வாழும் பெண்களின் கண்ணியத்திற்கும் பாதுகாப்புக்கும் அரணாக நிற்கிறார்.
இனி இந்த அரசிடமிருந்து அந்த மாவட்ட ஆட்சியர் அவர்களை பாதுகாப்பது தமிழ்நாடு மக்களின் பொறுப்பு. இவ்வளவு பெரும் அரசியல் அழுத்தத்திற்கு பிறகும் தனி ஒரு ஆளாக தைரியமாக உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ள, பாரதியின் உண்மையானப் புதுமைப் பெண்ணான இவரைத் தமிழ்நாடு என்றென்றும் கொண்டாடும்!






