
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்று தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் கடந்த ஜூன் 27 அன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்ட நிலையில், பி.டி.அரசகுமார் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் நேற்றைய முன்தினம் (செப்.27) ரத்து செய்து உத்தரவிட்டது. பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பேசுபொருளான நிலையில், பல்வேறு பத்திரிகைகள் பல்வேறு செய்திகளை வெளியிட்டது.

அந்த வகையில் கடந்த செப்.23 அன்று வெளியான ஜூனியர் விகடன் இதழில் "ரூ.1,000 கோடி முறைகேடு?", "சிக்கிய அன்பில்..." என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது. பி.டி.அரசகுமார் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதோடு, இது தொடர்பான வழக்கில் அன்பில் மகேஸின் பெயர் எதிலும் இல்லை. அப்படி இருக்கையில் அன்பில் மகேஸின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஜூனியர் விகடன் கட்டுரை வெளியிட்டுள்ளது.
இதனால் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பற்றி ஆதாரமற்ற, அவதூறு செய்தி வெளியிட்டதாக ‘ஜூனியர் விகடன்’ ஆசிரியர், வெளியீட்டாளர் உட்பட 12 பேருக்கு வழக்கறிஞர் மூலம் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில் :-
" 23.09.2026 நாளிட்ட ஜூனியர் விகடன் இதழில் "ரூ.1,000 கோடி முறைகேடு?", "சிக்கிய அன்பில்..." என அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டு, அவதூறான சித்திரங்களுடன் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ளனர்.
பி.டி.அரசகுமார் மீதான வழக்கில் அன்பில் மகேஸுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை; மத்திய குற்றப்பிரிவு (CCB) எஃப்.ஐ.ஆரிலும் இவரது பெயர் இல்லை. மேலும், அடிப்படை விளக்கம் எதுவும் கேட்காமல் உள்நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
48 மணி நேரத்திற்குள் இணையதளத்திலுள்ள அவதூறுக் கட்டுரையை நீக்கி, பத்திரிகை விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும். முக்கிய நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும். 48 மணி நேரத்திற்குள் இதற்கு உடன்படாவிடில் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகள் தொடரப்படும்" என சட்டப்பூர்வ நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






