
திராவிட இயக்கத்தின் அறிவுப் பெட்டகம் முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் கண்ணசைவுக்கேற்பத் தலைநகர் டெல்லியில் கழகத்தின் அரசியல் நகர்வுகளைத் திறம்பட மேற்கொண்டு அவரது மனசாட்சி என்று பெயரெடுத்தவர் என புகழஞ்சலி சூட்டியுள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "தலைவர் கலைஞரால் ஆளாக்கப்பட்டு, அவரது அன்பையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் பெற்றவர் முரசொலி மாறன் அவர்கள்.
கலைஞரின் கண்ணசைவுக்கேற்பத் தலைநகர் டெல்லியில் கழகத்தின் அரசியல் நகர்வுகளைத் திறம்பட மேற்கொண்டு அவரது மனசாட்சி என்று பெயரெடுத்தவர். ஒன்றிய அமைச்சராக இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்த அறிவுக்கூர்மைக்குச் சொந்தக்காரர்.
அத்தானாக என் மேல் அன்பு காட்டி, என் மிசா சிறைவாசத்தின்போதும் உடனிருந்து, அரசியல் பயணத்திலும் ஆலோசனைகளைக் கூறி நெறிப்படுத்தியவர் மாறன் அவர்கள்.
மாநில உரிமைகளை மீட்டெடுக்க நாம் அமைத்த உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டு இருக்கும் இன்றைய அரசியல் சூழலில், மாறன் அவர்கள் பேருழைப்பைச் செலுத்தி எழுதிய மாநில சுயாட்சி எனும் நூலை நாம் அனைவரும் மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும்.
தாம் ஆற்றிய உரைகளாலும், இயற்றிய நூல்களாலும், தீட்டிய வரலாறுகளாலும், இறுதி வரை இறுகப் பற்றிக் கொண்ட கொள்கைகளாலும் நம் இயக்கத்தின் அறிவுப் பெட்டகமாகத் திகழ்ந்த முரசொலி மாறன் அவர்களின் பங்களிப்புகளை நன்றியோடு இந்நாளில் நினைவு கூர்கிறேன்" தெரிவித்துள்ளார்.






