தமிழ்நாடு

சீனா - ரஷ்யா - அமெரிக்கா நட்புறவு ; உலகிற்கு உணர்த்தும் செய்தி என்ன? : முரசொலி!

உலகமே எதை எதிர்பார்க்கிறதோ அதைத் தான் அவர்கள் மூவரும் செய்துள்ளார்கள்.

சீனா - ரஷ்யா - அமெரிக்கா நட்புறவு ; உலகிற்கு உணர்த்தும் செய்தி என்ன? : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (23-11-2026)

மூன்று உலக நாடுகளின் முடிவு!

சீனாவும், ரஷ்யாவும், அமெரிக்காவும் உலகின் முக்கியமான மூன்று நாடுகள். உலகில் மிகப்பெரிய அளவில் அணு ஆயுதக் கையிருப்புக் கொண்ட நாடுகள் இவை. உலகில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ காரணமாக இருக்கும் நாடுகள். உலகப் பிரச்சினைகளை மனம் வைத்தால் தீர்க்கும் வல்லமை கொண்ட நாடுகள் இவை. அச்சுறுத்தும் நாடுகள் இவை. ஆபத்துக்கு உதவும் நாடுகளும் இவை. ஆக்கவும், அழிக்கவும் வல்லமை கொண்ட நாடுகள் இவை. ஒன்றுக்கொன்று எப்போதும் முறைத்துக் கொண்டிருக்கும் நாடுகள் இவை.

அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது போர் தொடுக்கும் சூழலில், உக்ரைன் போரை ரஷ்யா நடத்தும் சூழலில் இந்த பேச்சுவார்த்தை நடந்திருப்பது வரவேற்கத்தக்கது.

இந்த மூன்று நாட்டு ஜனாதிபதிகளும் ஒரே இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள் என்பது உலகம் மகிழும் செய்தியாக அமைந்துள்ளது.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகிய மூவரும் கடந்த (நவம்பர்) 19 ஆம் தேதியன்று சீனாவில் ஷென்சென் நகரில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். இது ஏதோ மரியாதை நிமித்தமான சந்திப்பு அல்ல. அப்படி இருந்திருந்தால் அதனைக் கண்டு கொள்ளத் தேவையும் இல்லை. ஆனால், இந்தச் சந்திப்பில் உலகம் கவனிக்க வேண்டிய ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் முடிவில் மூன்று நாடுகளும் சேர்ந்து, 'அமைதியை நோக்கிய பிரகடனம்' ஒன்றை வெளியிட்டுள்ளன. உலகமே எதை எதிர்பார்க்கிறதோ அதைத் தான் அவர்கள் மூவரும் செய்துள்ளார்கள்.

மூன்று நாட்டு ஜனாதிபதிகளும் ஒரே மேசையில் அமர்ந்து உரையாடிய காட்சி ஊடகங்களின் முன்னால்தான் நடந்தது. அப்போது தாங்கள் மூவரும் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டுள்ளோம் என்பதை மூவருமே வெளிப்படையாக ஒப்புக் கொண்டு உரையாற்றி இருக்கிறார்கள்.

"பெரும் வல்லரசுகள் மோதிக் கொண்டால் உலகம் கொந்தளிப்பில் வீழும். கடுமையாகப் போராடிப் பெற்ற அமைதியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். உலகின் ஒவ்வொரு நாட்டின் நியாயமான பாதுகாப்புக் கவலைகளையும் பெரிய நாடுகள் தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். வேறுபாடுகளைத் தீர்க்க பேச்சுவார்த்தையே சரியான வழி. பேச்சுவார்த்தை நிற்காத வரையிலும், கதவு மூடப்படாத வரையிலும் அமைதிக்கான நம்பிக்கை இருக்கிறது”என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

"பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் உலகின் பொதுவான நலன்கள் அடங்கி உள்ளன” என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் சொல்லி இருக்கிறார்.

“நாம் உண்மையிலேயே வரலாறு படைக்கிறோம். மூன்று நாடுகளுக்கும் சிறப்புப் பொறுப்பு இருக்கிறது”என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஒன்றுபட்ட சிந்தனையோடு உரையாடிய மூன்று நாட்டின் ஜனாதிபதிகளும் பேச்சுவார்தை நடத்தியதன் முடிவில் நான்கு மிகமுக்கிய மான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானது அணு ஆயுதம் குறித்த கொள்கை ஆகும்.

"அணு ஆயுதப் போரில் யாரும் வெல்ல முடியாது. அது ஒரு போதும் நடத்தப்படக் கூடாது. அணு ஆயுத அபாயங்களைக் குறைக்கவும், அணு ஆயுதப் பரவலைத் தடுக்கவும் பேச்சுவார்த்தை நடத்துவோம்”என்ற தீர்மானம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உலகத்தை மகிழ்ச்சி அடைய வைக்கும் தீர்மானமாக அமைந்துள்ளது.

உலகளாவிய சவால்களை ஐக்கியநாடுகள் அவை திறம்படக் கையாள வேண்டும்என்றும், எரிசக்தியை தடையின்றி சீராகப் பயன்படுத்துவோம்என்றும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தனது அதிகார வரம்பைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாதுஎன்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் விட முக்கியமானது அணு ஆயுதம் பற்றியது மட்டுமே.

சீனா - ரஷ்யா - அமெரிக்கா நட்புறவு ; உலகிற்கு உணர்த்தும் செய்தி என்ன? : முரசொலி!

நாட்டில் இப்போது நடைபெற்று வரும் போர்கள் பற்றி இந்த ஒப்பந்தங்களில் நேரடியாக எதையும் சொல்லவில்லை என்றாலும், இந்த தீர்மானங்கள் முறையாகப் பின்பற்றப்படுமானால் அந்தப் போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றே எதிர்பார்க்கலாம்.

அணு ஆயுதங்களே உலகை அச்சுறுத்தி வருகிறது. எனவே, அணு ஆயுதக் குறைப்பு குறித்து ஒரு பேச்சுவார்த்தை தொடங்குவதே வரவேற்கத்தக்கது ஆகும். இது உலக அமைதிக்கான மிகப்பெரிய முன்னேற்றம் ஆகும்.

அணு ஆயுதங்கள் பற்றியும், அதன் கையிருப்பு பற்றியும் எந்த நாடு சொல்வதும் உண்மையான தகவல்கள் அல்ல. அணு ஆயுதம் வைத்திருப்பதாகச் சொல்வதும் இல்லை. எவ்வளவு வைத்துள்ளோம் என்பதைச் சொல்வதும் இல்லை. ஆனால் இன்னொரு நாடு எவ்வளவு வைத்துள்ளது என்று மற்ற நாடுகள் பீதியைக் கிளப்பும். அந்த அச்சத்துக்கு இம்மூவரும் முற்றுப்புள்ளி வைத்தாலே போதும். பெரிய வெற்றிதான்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றுள்ளார். அவர் ஜனாதிபதி ஆனபிறகு விமான நிலையத்துக்குச் சென்று ஒரு நாட்டின் அதிபரை வரவேற்றது இதுதான் முதல் தடவை என்று சொல்லப்படுகிறது. அணு ஆயுதப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக வர்த்தகம், போதைப் பொருள் தடுப்பு, இணைய வழி மோசடிகள், செயற்கை நுண்ணறிவு குறித்த பேச்சுவார்தையும் சீனா அமெரிக்கா இடையே நடந்துள்ளது.

அதேபோல் சீனா - ரஷ்யா இடையிலான நட்பும் தனிப்பட்ட முறையில் பலம் ஆகி வருகிறது. கடந்த மே மாதம் இந்த இரண்டு நாடுகளும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போட்டுள்ளன. சீனா - ரஷ்யா - அமெரிக்கா நட்புறவு என்பது ஒரு செய்தியை உலகுக்குச் சொல்கிறது.

உலகத்துக்கு யார் தலைமை வகிப்பது என்ற மோதல்தான் பல்லாண்டுகளாக நாம் பார்த்து வருவது. அந்த ஒற்றை இடத்துக்குத்தான் இத்தனை போர்களும். அது மாறி வரும் காட்சியைத்தான் நாம் பார்க்கிறோம். மாறி வரும் சூழலில் ஒற்றை நாடு தலைமை வகிக்க முடியாது. கூட்டுத் தலைமை ஒற்றுமைதான் நடைமுறைக்கு உகந்தது என்பதை சீனாவும், ரஷ்யாவும், அமெரிக்காவும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ள காட்சியைத்தான் இப்போது பார்க்கிறோம்.

‘கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்' என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். கவி வாக்கு வெல்லும் என்பதை இக்காட்சிகள் சொல்லும்.

banner

Related Stories

Related Stories