
நீண்டகாலப் பணி அனுபவம் மற்றும் பணிப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு TET-ஐ கட்டாயப்படத்தக்கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு முன்மொழிந்த அரசினர் தனித்தீர்மானம் தி.மு.க ஆதரவுடன் நிறைவேறியது.
இந்த தீர்மானத்தின் மீது தி.மு.க கொறடா எ.வ.வேலு பேசுகையில், ”நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வில் (TET) இருந்து விலக்கு அளிப்பதுடன், அவர்களின் பணி பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வை உறுதி செய்ய ஒன்றிய அரசு புதிய சட்டங்களை இயற்ற வேண்டும். அவ்வாறு சட்டம் இயற்றப்படும் போது, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு உறுதுணையாக இருப்பார்கள்.
20 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணியில் இருப்பவர்கள், தற்போதைய புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தகுதித் தேர்வை எழுதித் தேர்ச்சி பெறுவது நடைமுறையில் கடினமானது ஆகும்.ஆசிரியர்களின் நலன் கருதி திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில், ஆசிரியர்கள் கட்டாயம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதனால், தற்போதைய சட்டச் சூழலில் ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வில் ஏற்படும் தடைகளை நீக்க, ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்ற வேண்டும். மேலும், ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான உரிமைகள், சலுகைகளைப் பெற்றுத் தரும் வகையில் ஒன்றிய அரசு புதிய சட்டங்களை இயற்றும் பட்சத்தில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்குவார்கள்" என தெரிவித்துள்ளார்.






