அரசியல்

”3 ஃபைலை திறந்து பாருங்கள்.. உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நலத்திட்டங்களை வழங்கி உரையாற்றினார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

”3 ஃபைலை திறந்து பாருங்கள்.. உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம் திமுக சார்பில், மாவட்ட செயலாளர் பி.கே. சேகர் பாபு தலைமையில் சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று (ஆக.24) நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவரும்,  கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு சுழல் நிதி உதவி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, தாயாளு அம்மாள் அறக்கட்டளையில் தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு தையல் இயந்திரம், விளையாட்டு வீரர்களுக்கு முழு விளையாட்டு உபகரணங்கள், திருநங்கைகளுக்கு புத்தாடைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை நலத்திட்டங்களை வழங்கினார். 

நிகழ்வில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்காகவும், இறுதி மூச்சுவரை வாழ்ந்தவர். இன்று அவரது வழியில், அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், என்றைக்கும் மக்களோடு மக்களாக இருக்கும் இயக்கம் திமுக.

இன்று ஆளும் கட்சியாக இருப்பவர்களைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. எல்லாவற்றையும் நீங்கள் லைவில் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். வெற்றியை எதிர்பார்த்தோம். தேர்தலில் யார் எதிரி என்று தெரியாமல் சண்டை போட்டுவிட்டோம். இன்று யார் எதிரி என்பது தெரிந்துவிட்டது.

நான்கு மாதங்களுக்குப் பிறகு சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு வருகிறேன். அண்ணன் சேகர்பாபு மீது நான் கோபமாக இருக்கிறேன் என்று அவர் நினைத்திருக்கலாம். அது கோபம் இல்லை, வருத்தம். அவர் மீதும், அவரது மாவட்டத்தின் மீதும் எனக்கு இருக்கும் உரிமை. தோல்விக்கு எத்தனையோ காரணங்களைச் சொல்லிக்கொள்ளலாம்.

சினிமா கவர்ச்சி, இளம் தலைமுறையினரிடம் சமூக வலைதளங்களின் தாக்கம் காரணமாக நமது திட்டங்கள் சென்று சேரவில்லை என எத்தனையோ காரணங்களைச் சொல்லி நாம் நம்மைச் சமாதானப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் கொளத்தூர் தோல்வியை நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? அதை நாம் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த தேர்தலில் அதை மிகப்பெரிய வெற்றியாக மாற்றிக் காட்ட வேண்டும்.

ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. ஆனால் இவர்கள் 108 இடங்களில்தான் வெற்றி பெற்றுள்ளனர். நமது தயவில்தான் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். நம் தலைவர் போட்ட பிச்சையில்தான் ஆட்சி நடக்கிறது. வெறும் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

சோஃபா போனது, சோஃபாவின் பின்னாலேயே முதல்வரும் சென்றார். அதிமுக மட்டுமல்ல, நமது கூட்டணியில் இருந்தவர்களுக்கும் சோஃபா போனது.

மாற்றம், மாற்றம் என்று சொல்லி, நமது தலைவர் கொண்டுவந்த திட்டங்களின் பெயர்களைத்தான் மாற்றியிருக்கிறார்கள், மாற்றம், மாற்றம் என்று சொல்லி ஏமாற்றத்தைச் செய்கிறார்கள். எங்கு பார்த்தாலும் ஊழல்.

”3 ஃபைலை திறந்து பாருங்கள்.. உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

இந்த ஆட்சியின் அவலங்களைப் பார்த்து, ஊராட்சி கம்யூனிஸ்ட் தோழர்கள் இன்றைக்கு குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆளும் கட்சியினரே கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.

ஆட்சி அமைந்து 105 நாட்கள் ஆகிவிட்டன. அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பது விவசாயிகள்தான். வாங்கிய பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வோம் என்றார்கள்.

25-வது நாள் ஒரு அறிவிப்பு, 50-வது நாள் ஒரு அறிவிப்பு என, சினிமா படத்தை ஓட்டுவது போல அறிவித்துக் கொண்டிருக்கிறார். கைது செய்து ரோடு ஷோ காட்டியதுதான் இந்த ஆட்சியின் சாதனை.

ஆட்சி அமைந்ததில் இருந்து முழுக்க முழுக்க மடைமாற்றம்தான் நடக்கிறது. நாங்கள் ஒரு கேள்வி கேட்டால் அதற்கான பதிலைச் சொல்லாமல் வேறு விஷயங்களைப் பேசுகிறார்கள். மக்கள் பிரச்சினைகளை சட்டப்பேரவையில் எழுப்புகிறோம். அதற்கு ஒன்றுக்குக்கூட முதல்வர் பதில் சொல்வதில்லை.

எந்த அமைச்சரிடம் கேள்வி கேட்டாலும் மூன்று அமைச்சர்கள்தான் பதில் சொல்கிறார்கள். யார் யார் அமைச்சர் என்று பதில் சொன்னால் தானே தெரியும். மடைமாற்றம்தான் நடக்கிறது. மின் கட்டணம் குறித்து சட்டப்பேரவையில் பேசினால், அதற்குப் பதில் சொல்லத் திராணியில்லாமல் அமைச்சர் வேறு சில விஷயங்களைப் பேசுகிறார். இந்த அரசு அமைந்ததில் இருந்து மடைமாற்றம்தான் நடக்கிறது.

வெளியே பார்க்கும் மக்களுக்கு யார் ஆளும் கட்சி, யார் எதிர்க்கட்சி என்றே தெரியவில்லை. ஆளுங்கட்சியினரே எங்களைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார்கள். வழக்கமாக எதிர்க்கட்சிதான் கேள்வி கேட்கும்.

கேள்வி கேட்டால் கூட பரவாயில்லை, பாடல் பாடுகிறார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது.

வரலாற்றிலேயே முதல்முறையாக, எதிர்க்கட்சியைவிட ஆளும் கட்சியினர் பேசுவதை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறார். பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து பேசிவிட்டு, அவர்களே அதை நீக்கிவிடுங்கள் என்று சபாநாயகரிடம் சொல்கிறார்கள்.

முதன்முறையாக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் வழங்கியவர் நமது ஆட்சியில் இருந்த நமது தலைவர். நேரலையை நிறுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அமைச்சர்களையும், அவர்களின் பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டும். நாம் ஏதாவது கேட்டால், உங்கள் ஆட்சியில் நடக்கவில்லையா’ என்கிறார்கள். எங்கள் ஆட்சியில் இருந்த குறைகளுக்காகத்தானே உங்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள் அப்போது பதில் சொல்லாமல் ஏன் மடைமாற்றம் செய்கிறார்கள்.

மூன்று ஃபைல்கள் இருக்கின்றன. ஓபன் பண்ண வைத்துவிடாதீர்கள் என்று முதல்வர் சொல்கிறார். ஓபன் பண்ணுங்கள். யார் உங்களை வேண்டாம் என்று சொன்னது, எம்.எல்.ஏ.க்களை மிரட்ட முயற்சிக்கிறார்களாம். தைரியம் இருந்தால் ஓபன் பண்ணுங்கள். சோசியர் சொன்னால்தான் ஓபன் பண்ணுவீர்களா என்று கேட்டேன். அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்.

நான் அந்த ஃபைல் பற்றி பேசி 72 மணி நேரம் ஆகிறது. ஆனால் இந்த முதல்வருக்கு கொஞ்சமாவது சூடு, சொரணை இருக்கிறதா, பேசி 72 மணி நேரம் ஆகிவிட்டது. முதல்வர் அந்த ஃபைல் பற்றி பேசுவார் என்று பார்த்தால், பேசவில்லை. ஒரு நாளும் அந்த ஃபைலை ஓபன் செய்யமாட்டேன் என்கிறார்கள். பூச்சாண்டி காட்டுகிறார்கள்.

மூன்று அமைச்சர்களைத் தவிர மற்ற அமைச்சர்களை யாருக்கும் தெரியவில்லை. அமைச்சர்களின் பெயர்களைப் பட்டப்பெயருடன் சொன்னால்தான் தெரிகிறது. முதல்வருக்கே அவர்களின் பெயர்கள் கூடத் தெரியவில்லை.

அமைச்சர்களின் பெயர்கள் பலருக்குத் தெரியாது. பட்டப்பெயர் சொன்னால்தான் தெரியும். சங்கி அமைச்சர், லாட்டரி அமைச்சர், முறுக்கு அமைச்சர், திருட்டு சிடி அமைச்சர், பாத்ரூம் அமைச்சர், பவுடர் அமைச்சர்’ என்று சொன்னால்தான் மக்களுக்குத் தெரிகிறது. முதலமைச்சருக்கு ஓரிரு அமைச்சர்களின் பெயர்கள் மட்டும்தான் தெரியும்.

திமுக கஜானாவை காலி செய்துவிட்டதாக இந்த புதிய அரசு சொன்னது. ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதாகக் கூறியது. திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வேண்டாம் என்று கூறினோம். அதற்கும் அமைச்சர் குறை கூறுகிறார். எங்களுக்கு வழங்கும் கார்தானே வேண்டாம் என்று கூறினோம்.

யார் எந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. முதல்வருக்கும் தெரியாது. பக்கத்து தொகுதியில் சென்று நன்றி சொன்னவர்கள் தானே. முதல்வருக்கு எம்.எல்.ஏ.க்களின் பெயர்கூட தெரியாது. அந்த லட்சணத்தில் கார் வாங்கிக் கொடுக்கிறார்களாம்.

தொகுதி மறுவரையறை பற்றி நமக்குப் பாடம் எடுக்கிறார்கள். முதன்முதலில் அதற்காகக் குரல் கொடுத்ததே நாம்தான். அந்த மசோதாவைத் தெருவில் இறங்கி கொளுத்திப் போட்டவர் நமது தலைவர்.

இந்த அரசுக்கு சரியான பாடத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டிய நேரத்தில், நீங்கள் அதைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். நமது தலைவர் தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக ஆக்கினார். ஆனால் இன்று தமிழகத்தின் வளர்ச்சி பாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories