
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தொழில்நுட்ப அணி செயலாளர், முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,
திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து இரு ஆண்டுகள் இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. அதே வளர்ச்சியில் தமிழ்நாடு செல்லவேண்டும் என்பதில் திமுக முனைப்பாக உள்ளது.
தமிழ்நாடு இதுவரை காணாத, இந்தியாவில் எந்த மாநிலமும் காணாத தொழில்வளர்ச்சியை கடந்த 5 ஆண்டு காலத்தில் திராவிட மாடல் ஆட்சி கொடுத்தது. நம்பர் 1 வளர்ச்சியை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுத்தார். மிகச்சரியான நேரத்தில் தொழில் வளர்ச்சிக்கான முடிவெடுக்கப்பட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு தொடர்ந்து முன்னேற உட்கட்டமைப்பு வசதிகள் அவசியம். ஆனால், “தமிழ்நாட்டிற்கு இன்று (ஆகஸ்ட் 24) ஒரு கறுப்பு நாளாக அமைந்துள்ளது.” தொழில்வளர்ச்சியில் உட்கட்டமைப்பில் பின்னடைவை சந்தித்த நாளாக இன்றைய நாளை வரலாறு சொல்லும். மிகச்சரியான முறையில் பொருளாதார, தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆலோசனையுடன் தேர்வு செய்யப்பட்ட பரந்தூர் விமானநிலைய திட்டத்தை தவெக அரசு கைவிட்டுள்ளது.
குறைந்தபட்சம் அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு சிந்தனையுடன் கொண்டுவரப்பட்டது பரந்தூர் விமான நிலையத்திட்டம். பரந்தூர் விமான நிலையம் அமைந்திருந்தால் அது முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பயன்பட்டிருக்கும். பரந்தூர் திட்டத்திற்காக திட்டமிட்டு மிகவும் சிரமப்பட்டு உழைத்தோம். ஆனால், இன்று அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 35 மில்லியன் பயணிகள் பயணிக்கிறார்கள். சென்னை விமானநிலையம் 3-ம் இடத்தில் இருந்தது. ஆனால் இப்போது சமீபகாலமாக 5-ம் இடத்திலுள்ளது.

சென்னை விமான நிலையம் ஏன் இப்படி சென்று விட்டது என ஆந்திர மாநில முதல்வர் சொல்கிறார். அவருக்கும் இருக்கும் அக்கறை கூட தற்போது உள்ள அரசுக்கு இல்லை.
சென்னையை சுற்றியுள்ள 5,000 ஏக்கர் நிலம் நீர் நிலைகள் இல்லாமல் எடுத்துவிட முடியுமா?
விமான நிலையத்திற்கு தவெக அரசு புதிய இடத்தை தேர்வு செய்வோம் எனக் கூறுகிறதென்றால், அங்கு சுற்றுச்சூழல் பாதிக்கப்படாதா?
இதுபோன்ற சூழ்நிலைகளை ஆய்வு செய்யாமலா கடந்த திமுக ஆட்சியில் திட்டத்தை முன்னெடுத்திருப்போம்?
பரந்தூர் விமான நிலையத்திட்டம் இப்போதுள்ள வேகத்தில் செயல்படுத்தினாலும், 2030-ஆம் ஆண்டு தான் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும். ஆனால், அடுத்த 20 வருடத்தில் மீண்டும் ஒரு விமான தேவை தமிழ்நாட்டிற்கு உள்ளது.
தொழில்துறையை அரசியலாக்கி பல லட்சம் இளைஞர்களுக்கு, மக்களுக்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சியை தடுக்காதீர்கள். தவெக-வின் அரசியலால் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை நிறுத்தி, மிகப்பெரிய கேட்டை தமிழ்நாட்டிற்கு செய்துள்ளது.
விமான நிலையத்திற்கான நிலத்தை கையகப்படுத்தி நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட தொகையை, அவர்கள் ஏதாவது அத்தியாவசிய செலவு செய்திருக்கலாம் எப்படி திரும்பக்கொடுக்க இயலும்.
நிலம் கையகப்படுத்துதல் சட்டப்படி, ஒரு திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலத்தை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த முடியாது. வேறு திட்டங்கள் இருக்கிறதென்றால் அது என்ன திட்டம்? அதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாதா?
பரந்தூர் விமானநிலையத்தில் ஒவ்வொரு பயணியும் பயணிக்கும் போதும் தமிழ்நாட்டிற்கு வருவாய் கிடைக்கும். மிகவும் கடினமாக திட்டமிடப்பட்டு உழைத்து கொண்டு வரப்பட்ட திட்டம். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் குடிமனாக சொல்கிறேன் வெளி மாநிலங்களை எல்லாம் பார்த்து ஆதங்கத்தோடு சொல்கிறேன்.
பரந்தூர் விமான நிலையம் போன்ற ஒரு மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தும் முடிவை முதலமைச்சர் எடுக்கிறாறென்றால், அதற்கான காரணம் என்ன? வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றால், அது என்ன முடிவு என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

“பரந்தூர் விமான நிலையம் பார்த்துப் பார்த்து செய்த திட்டம். அவ்வளவு கடினமாக உழைத்துள்ளோம். செயல்பாட்டுக்கு வந்திருந்தால் உலகில் ஒரு முதன்மையான விமான நிலையமாக பரந்தூர் இருந்திருக்கும்.”
தமிழ்நாட்டு இளைஞர்கள் சிலிக்கான் வேலி செல்ல வேண்டாமா? நாம் ஏன் பெங்களூரு, ஐதராபாத் சென்று விமானம் மாறிச் செல்லவேண்டும். பரந்தூரில் இருக்கும் இளைஞர்கள், வளர்ச்சியைப் பற்றி சிந்திக்கக்கூடிய இளைஞர்களிடம் கேட்டுப்பாருங்கள் இந்தத்திட்டம் நிறுத்தப்பட்டது சரியா என? இந்தக் கேள்வியை தவெக கொடி பிடித்துச் செல்லும் இளைஞர்களிடமே கேளுங்கள்.
பரந்தூர் விமான நிலையம் போன்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டது, தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியில் மிகப்பெரிய பின்னடைவு என அண்டை மாநிலத்தில் ஸ்வீட் எடுத்து கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்.
“முதலமைச்சருக்கு கூறுவது ஒன்றே ஒன்று தான், அனைத்து அதிகாரிகளையும் தனித்தனியாக அழைத்து, திட்டம் குறித்து விரிவாக கேளுங்கள். அப்போது உங்களுக்கு உண்மை தெரியும்.”
புதிய இடத்தில் விமான நிலையத்திட்டம் இன்று ஆரம்பித்தால் கூட இன்னும் 3 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு பல்வேறு படிநிலைகளில் அனுமதி வாங்க மேலும் 3 ஆண்டுகள் ஆகும். அப்படி வேறு இடம் தவெக அரசு பார்த்துவிட்டால் உடனடியாக திட்டத்தை தொடங்குங்கள். அந்த புதிய இடம் எது என்று சொல்லுங்கள். அங்கு இருக்கும் மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்களா? இதெல்லாம் கடந்து வேறு இடத்தில் இத்திட்டம் தொடங்கினால், கடலில்தான் தொடங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.






