
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ‘வான் வழி’ போக்குவரத்து என்பது இன்றியமையாததாய் அமைந்திருக்கிறது. ‘வான் வழி’ போக்குவரத்தை அதிகரிப்பதன்மூலம்தான், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எளிமைப்படுத்த முடியும் என்பது உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட கூற்றாகவும் விளங்குகிறது.
அதன் அடிப்படையில், தி.மு.க ஆட்சிக்காலத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க 90 விழுக்காட்டிற்கும் மேல் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மக்களுக்கு அதற்கான உரிய இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக, தேர்தல் அறிக்கையில் தெரிவித்துவிட்டோம் என்ற ஒற்றைக் காரணத்திற்காக, நாடு மற்றும் நாட்டு மக்களின் வளர்ச்சியை புறந்தள்ளி பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் விஜய்.
100 விதியின் கீழ் முதலமைச்சர் பரந்தூர் விமான நிலையம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே, அது குறித்து பேச தி.மு.க சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் அளித்தும், பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால், தி.மு.க.வினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது,
“முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பரந்தூர் விமான நிலையம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டு, அதன் பிறகு அதில் பேச எதுவும் இல்லை என தெரிவித்து எதிர்க்கட்சிகளின் குரலை முடக்கியுள்ளார்கள்.
விமான நிலையம் என்பது மிகவும் முக்கியமானது. சென்னையில் அமையக்கூடிய விமான நிலையம் என்பது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது.
2008-ல் சென்னை விமானநிலையம் தேசிய அளவிலான பயணிகள் போக்குவரத்தில் 3-ஆவது இடத்தில் இருந்தது. ஆனால், இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. 5-ஆம் இடத்தில் இருந்த பெங்களூரு விமான நிலையம் 3-ஆவது இடத்திற்கும், நம் சென்னை விமான நிலையம் 5-ஆவது இடத்திற்கும் மாறியுள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கியமானது சரக்குகளை கையாளக்கூடிய வான் போக்குவரத்து. அதில் பெங்களூரு விமான நிலையம் 5.5 லட்சம் டன் சரக்குகளை கையாளக்கூடிய வகையில், மிகவும் முன்னேறி உள்ளது.

இப்படியான சூழலில், சென்னையில் கிரீன்ஃபீல்டு விமான நிலையம் வரவேண்டும். இந்த விமான நிலையம் வந்தால்தான், நம் பொருளாதாரமும் வளரும்.
அதனைக் கருத்தில்கொண்டும், மக்கள் பெரிதாக பாதிக்கப்படாத இடத்தைக் கண்டறிய வேண்டும் என்றும் பல இடங்களை ஆராய்ந்தோம். அதனையடுத்துதான் பரந்தூர் விமான நிலையம் முன்மொழியப்பட்டது.
ஆனால், தற்போது பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை கைவிட்டிருப்பதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அதனால், தமிழ்நாடு நோக்கி வர இருந்த தொழில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையத்தின் தேவையை உணர்த்தி, அப்பகுதி மக்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கி, நிலங்களை கையகப்படுத்தியுள்ளோம்.
நில கையகப்படுத்தும் சட்டத்தின்படி, என்ன காரணத்திற்காக நிலங்களை கையகப்படுத்துகிறோமோ, அதற்காக மட்டும்தான் அக்குறிப்பிட்ட நிலத்தை பயன்படுத்த வேண்டும். அப்படியென்றால், பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்திய நிலங்களை என்ன செய்யப்போகீறீர்கள்?

பரந்தூரை தவிர்த்து வேறு இடத்தில் விமான நிலையம் அமைக்கப்போவதாக சொல்கிறார்கள். அது எப்போது வரும்? அப்போது எத்தனை பேரை வெளியேற்றப்போகிறீர்கள்? அங்கு என்ன உள்கட்டமைப்பு வசதி இருக்கப்போகிறது?
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதுதான் சரியாக இருக்கும். ஆனால், அதனை அரசியல் காரணங்களுக்காக மாற்றியுள்ளது த.வெ.க அரசு. ஒரு திட்டம் நாட்டிற்காக வரும்போது அதில் அரசியல் செய்யக்கூடாது. இது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பெருமளவில் பாதிக்கும்.
பெங்களூரில் இரண்டாவது விமான நிலையத்திற்கு சென்றுவிட்டார்கள். ஆந்திராவில் புதிய விமான நிலையம் அமைய இருக்கிறது. ஆனால், நாம் ஏற்கனவே ஓசூர் விமான நிலையத்தை இழந்திருக்கிறோம்.
இப்போது பரந்தூர் விமான நிலையத்தையும் கைவிட்டால், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்னாவது? எப்படி த.வெ.க சொல்லும் 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை அடையப்போகிறார்கள்?” என கண்டனம் தெரிவித்துள்ளார்.






