
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ‘வான் வழி’ போக்குவரத்து என்பது இன்றியமையாததாய் அமைந்திருக்கிறது. ‘வான் வழி’ போக்குவரத்தை அதிகரிப்பதன்மூலம்தான், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எளிமைப்படுத்த முடியும் என்பது உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட கூற்றாகவும் விளங்குகிறது.
அதன் அடிப்படையில் தி.மு.க ஆட்சியில் பல்வேறு நிலப்பரப்பையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் சிந்தித்து முன்மொழியப்பட்ட திட்டம்தான் பரந்தூர் விமான நிலையம்.
தி.மு.க ஆட்சிக்காலத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க 90 விழுக்காட்டிற்கும் மேல் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மக்களுக்கு அதற்கான உரிய இழப்பீடும் வழங்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக, தேர்தல் அறிக்கையில் தெரிவித்துவிட்டோம் என்ற ஒற்றைக் காரணத்திற்காக, நாடு மற்றும் நாட்டு மக்களின் வளர்ச்சியை புறந்தள்ளி பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

இவ்விவகாரத்தில், நியாயமானக் கருத்தை வெளிப்படுத்த சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக விளங்கும் தி.மு.க முற்பட்டபோது 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்துவிட்டார் எனக் காரணம் கூறி, பேசுவதற்கு வாய்ப்பளிக்க மறுத்துவிட்டார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.
100 விதியின் கீழ் முதலமைச்சர் பரந்தூர் விமான நிலையம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே, அது குறித்து பேச தி.மு.க சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் அளித்தும், பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால், தி.மு.க.வினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
“பேசவிடு! பேசவிடு! உண்மையை பேசவிடு! மறைக்காதே... மறைக்காதே... நியாயத்தை மறைக்காதே... அராஜகம்... அராஜகம்... சட்டமன்றத்தில் அராஜகம்!” என்ற முழக்கங்களோடு வெளியேறி, பரந்தூர் விமான நிலையத்தின் தேவையை செய்தியாளர்களிடம் விளக்கிய பிறகு, மீண்டும் அவை நடவடிக்கைகளில் இணைந்தனர்.






