
செங்கல்பட்டு அருகே ரூ.900 கோடி செலவில் ஒன்றிய பொதுத்துறை நிறுவனமான ஹெ.எல்.எல். பயோடெக் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேக்சின் தடுப்பூசி மருந்து ஆலை இன்னும் செயல்படத் துவங்கவில்லை என்பது உண்மை தானா?
அப்படியென்றால் அதற்கான காரணங்கள் என்ன? ஆலையை இயக்கவும் தடுப்பூசி உற்பத்தியை மேற்கொள்ள ஏதேனும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதா? அப்படியானால் அந்த கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட முடிவு என்ன?
என செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே அமைந்துள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான நவீன தடுப்பூசி மருந்துகள் ஆலை கட்டிமுடிக்கப் பட்டு பல ஆண்டுகள் கழிந்தும் இயக்கத்துக்கு வராமல் பயனின்றிக் கிடக்கும் நிலை குறித்த கவலையைத் தெரிவிக்கும் முகத்தான் இந்த கேள்வியை திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும் மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு அவர்கள் எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் ஒன்றிய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலன் அமைச்சகத்தின் இணை அமைச்சரான பிரதாப் ராவ் ஜாதவ் அவர்கள் நேற்று(7.8.2026) மக்களவையில் எழுத்து பூர்வமான மிகமிக சுருக்கமான விவரங்கள் இல்லாத ஒரு பதிலை அளித்தார்.

அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தனது பதிலில் தெரிவித்த தகவல்கள் வருமாறு: "ஒன்றிய அரசின் ஹெ.பி.எல். எனப்படும் ஹெ.எல்.எல். பயோடெக் லிமிடெட்( HLL Biotech Ltd) நிறுவனம் செங்கல்பட்டு, தமிழ்நாடு அருகே ஒருங்கிணைந்த வேக்சின் (தடுப்பூசிகள்) வளாகம் ஒன்றை உருவாக்கிட அனுமதி அளித்திருந்தது.
அந்த தடுப்பூசிகள் தயாரிப்பு வளாகத்தை இயக்கிட ஒன்றிய அரசு பல் வேறு முனைப்புக்கள் மூலம் முயற்சிகள் மேற்கொண்டது. 2020-22 கால கட்டத்தில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசு- தனியார் பங்கேற்பு முறையில் ஆலையை இயக்கி உற்பத்தியை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தல், செயலாக்க முன்மொழிவு ஆகியவற்றை அரசுக்கு சமர்ப்பிக்கும் படி வேண்டுதல் விடுக்கப் பட்டது. துவக்கத்தில் ஒருசில தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காண்பித்தன. ஆனால், இறுதியாக எவரிடமிருந்தும் முன்மொழிவுடன் கூடிய கோரிக்கைகள் வரவில்லை." எனத் தெரிவித்துள்ளனர்.
அன்றைய முதல்வர் கோரிக்கையை ஏற்க மறுப்பு.
2021 ஆம் ஆண்டு மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே, கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி (Vaccine) உற்பத்தி வளாகத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினார்.

ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அந்த தடுப்பூசி ஆலை வளாகத்தை நேரில் பார்வையிட்ட அவர், ஆலையை இயக்கும் பொறுப்பை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஒன்றிய அரசிடம் முன்வைத்தார். இதுதொடர்பாக விரிவான கடிதமும் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, திமுக அரசும் அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், HLL Biotech Ltd. நிறுவனத்தின் தடுப்பூசி ஆலையை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்துவதற்காக பலகட்ட முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் மேற்கொண்டனர்.
எனினும், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்கவில்லை. இதன் விளைவாக, கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த அதிநவீன ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி வளாகம் இயக்கப்படாமல், பயன்பாடின்றி கிடப்பில் உள்ளது.






