தமிழ்நாடு

பேப்பர் படித்தால் மட்டும் போதாது.. முதல்வருக்கு பயம் ஏன்? : உதயநிதி ஸ்டாலினின் அனல் பேச்சு! (முழு உரை)

தி.மு.க ஏன் லாட்டரி நடத்தும் நிறுவனத்திடம் இருந்து நிதி வாங்கினார்கள் என்று கேட்கிறார். அதை கொடுத்தது, அவரின் மாமனார்தான். அவர் மாமனாரிடம் கேட்டு, அந்த விளக்கத்தை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும்

பேப்பர் படித்தால் மட்டும் போதாது.. முதல்வருக்கு பயம் ஏன்? : உதயநிதி ஸ்டாலினின் அனல் பேச்சு! (முழு உரை)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இன்று (07.08.2026) சட்டப்பேரவையில் காவிரி விவகாரம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில், கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

இன்றைக்கு தமிழ்நாடு விவசாயிகளின் வேதனைகளுக்கு, இந்த அரசு சரியான தீர்வைக் காணவேண்டும் என்று ஒத்திவைப்புத் தீர்மானத்தை இங்கு கொடுத்துள்ளோம். இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு, நான்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

4 முக்கிய காரணங்கள்

முதல் காரணம், மேகதாது அணை கட்டுகிற கர்நாடகா அரசைத் தடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று, இந்த அவைக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும்.

இரண்டாவது காரணம், முழு பயிர்கடன் தள்ளுபடி என்று நீங்கள் தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்துவிட்டு, இன்றைக்கு ஆட்சிக்கு வந்துவிட்டு, `அரைகுறை தள்ளுபடி’ மட்டும் செய்வது ஏன்?

மூன்றாவது காரணம், காவிரியில் தண்ணீர் வராத காரணத்தால், குறுவை சாகுபடி மொத்தமாக இல்லாமல் போய்விட்டது. இதற்குத் தகுந்த நிவாரணத் தொகையை, எப்போது இந்த அரசு விவசாயிகளுக்குக் கொடுக்க போகிறது.

நான்காவது காரணம், டெல்டா மாவட்டங்களை, வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து, அங்கு இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு, உரிய நிவாரணத்தை, இந்த அரசு கொடுக்க வேண்டும்.

முதலில் மேகதாது பிரச்சினையில் இருந்து, எனது உரையைத் தொடங்குகிறேன். த.வெ.க. அரசு அமைந்ததில் இருந்து, மேகதாது அணை கட்டுவதில், இதுவரை காட்டாத ஒரு வேகத்தையும் தீவிரத்தையும் இன்று கர்நாடகா அரசு காட்டி வருகிறது.

தீர்மானம் மட்டும் போதாது!

மேகதாது விஷயத்தில் ஒரு முறை மட்டும், பிரதமரிடம் நம் முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை வைத்தார். அடுத்த மேகதாதுப் பிரச்சினையில் இருந்து, இந்தப் பேரவையில் ஜூன் 19-ஆம் தேதி அன்று, இந்த அரசு ஒரு தீர்மானத்தையும் கொண்டு வந்தது. ஆனால், அந்தத் தீர்மானம் மட்டும் நிறைவேற்றினால் போதாது, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து டெல்லிக்குச் செல்ல வேண்டும் என்று எங்களின் கழகத் தலைவர் சொன்ன ஆலோசனையையும் இந்த அவையில் பதிய வைத்துள்ளேன். அப்போதுதான் இந்த விஷயத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதையும் நாம் அவர்களுக்குச் சொல்ல முடியும்.

பேப்பர் படித்தால் மட்டும் போதாது.. முதல்வருக்கு பயம் ஏன்? : உதயநிதி ஸ்டாலினின் அனல் பேச்சு! (முழு உரை)

இந்த இடைபட்ட காலத்தில் நாங்கள் சொன்னதையும், இந்த அரசு செய்யவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று, தொடர்ந்து வலியுறுத்தி கேட்டுக்கொண்டு வருகிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்துக் கட்சிகளும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஏன் கேட்டுக்கொள்கிறோம் என்றால், கர்நாடகா முதலமைச்சரும் அந்த அரசும் மேகதாது விஷயத்தில், மிகவும் வேகமாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

கர்நாடக முதலமைச்சர் வேகம்

ஜூன் 11-ஆம் தேதி, ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை, கர்நாடக முதலமைச்சர் நேரில் பார்த்து மேகதாது அணை கட்டுவதற்கு நிதியுதவி வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். ஜூன் 12-ஆம் தேதி ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு.சி.ஆர்.பாட்டீல் அவர்களை நேரில் பார்த்து, மேகதாது திட்டத்துக்கு நீங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

ஜூலை 27-ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில், ஒன்றிய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு, புதுச்சேரி மாதிரியான கீழ்படுகை மாநிலங்கள், அதாவது `லோயர் லிப்பேரியன் ஸ்டேட்ஸ்’ அதன் அனுமதி தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.

அதே நாள் ஜூலை 27-ஆம் தேதி, டெல்லியில் கர்நாடகாவைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.-க்கள் கூட்டத்தை, கர்நாடக முதலமைச்சர் அவர்கள் நடத்தியிருக்கிறார். கர்நாடகா அமைச்சர் ராமலிங்கா ரெட்டி, கர்நாடாக அரசின் டெல்லி பிரதிநிதி, கர்நாடகா அரசின் தலைமை வழக்கறிஞர், மூத்த அதிகாரிகள் எல்லோருடனும் சேர்த்து, மேகதாது சம்பந்தமாக அந்த மாநில முதலமைச்சர் ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தி இருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேல், ஆகஸ்ட் 2-ஆம் தேதி பெங்களூரில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவோம் என்று கர்நாடக முதலமைச்சர் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பும் விடுத்துள்ளார்.

சீதா ராமையா, பசவராஜ் பொம்மையா, எடியூரப்பா, குமாரசாமி, வீரப்ப மொய்லி என ஐந்து முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட அந்த முக்கியமான கூட்டத்தில், முக்கியமான தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளார்கள்.

பேப்பர் படித்தால் மட்டும் போதாது.. முதல்வருக்கு பயம் ஏன்? : உதயநிதி ஸ்டாலினின் அனல் பேச்சு! (முழு உரை)

ஒரு மாதத்தில் பல நடவடிக்கைகள்

கர்நாடக முதலமைச்சர் அந்தக் கூட்டத்தில் ஊடகங்களைச் சந்தித்து, தெளிவாக பேட்டியும் கொடுத்திருக்கிறார். இப்படி அவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப்பாக ஒரு மாதத்தில் பல நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். மாநில நலன் என்று வந்தால், அவர்கள் எப்படி அரசியல் வேறுபாடுகள் எல்லாம் பார்க்காமல், மாறுபாடுகளைக் கடந்து, மறந்து ஓரணியில் நிற்கிறார்களோ, அதேபோல நாமும் நம் ஒற்றுமையை கர்நாடக அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எங்கள் கோரிக்கையைத் தொடர்ந்து வைத்துள்ளோம்.

விவசாயிகள் மேல் அக்கறை உள்ள ஒரு அரசு, இவற்றையெல்லாம் கேட்காமல் தானாகவே செய்ய வேண்டும். ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மறுக்கிறீர்கள் என்பதுதான், சிம்பிளாக நான் கேட்கக்கூடிய கேள்வி. நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த பிறகு இப்போது ஜூலை 28-ஆம் தேதியன்று, பிரதமருக்கு இரண்டாவது கடிதத்தை நம் முதலமைச்சர் அவர்கள் எழுதியிருக்கிறார்.

எங்கள் தலைவர் முதலமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டின் பிரச்சினைகளுக்காக கடிதங்கள் எழுதுவதை விமர்சித்து, இப்போது இங்கு இருக்கின்ற முதலமைச்சர் அவர்கள் என்னென்ன பேசியிருக்கிறார் என்பதை இங்கு ரீவைண்ட் செய்து பார்க்க வேண்டும்.

இன்றைக்கு நம் அரசின் நிலை என்ன?

முதலமைச்சர் பேசியதை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அதை நீங்கள் அவை குறிப்பில் இருந்து நீக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

`ஸ்டாலின் அவர்கள், அப்போ அப்போ எழுந்து கடிதம் எழுதிவிட்டு, தூங்க போய்விடுவார். அவ்வளவுதான். அது அப்படியே கிடக்கும். மானே, தேனே, பொன் மானே இப்படிக் கடிதம் எழுதுவது எல்லாம் இனிமேல் வேலைக்கு ஆகாது என்று சொன்னார். இன்றைக்கு…

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே அந்தப் பிரச்சினை தீவிரமான பிரச்சினை என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள், நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, கர்நாடக அரசு தொடர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அங்கு இருக்கின்ற அனைவரின் கருத்துகளையும் கேட்கிறார்கள். ஏன், தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதைத் தவிர்க்கின்றது என்பதுதான் எங்களின் கேள்வி.

பேரவைத் தலைவர் வாயிலாக இன்னொன்றை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். இந்த அரசு ஒரு `புது டெக்னிக்கை’ தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். எதையாவது ஒன்றை செய்வதற்கு முன்பு, அந்தச் செய்தியை இவர்களே அதை கசிய (லீக்) செய்து விடுகிறார்கள். அதற்கு எதிர்ப்பு பலமாக இருந்தால், யூ டர்ன் போட்டுவிடுகிறார்கள்.

பேப்பர் படித்தால் மட்டும் போதாது.. முதல்வருக்கு பயம் ஏன்? : உதயநிதி ஸ்டாலினின் அனல் பேச்சு! (முழு உரை)

எந்த முடிவும் எடுக்கவில்லை

முதலமைச்சர் அவர்கள் கர்நாடாக செல்கிறார் என்று வேளாண் துறை அமைச்சர் ஒரு பேட்டி கொடுக்கிறார். பிறகு, அவரே அதை மறுத்து பேசுகிறார். இன்னும் இரண்டு அமைச்சர்கள் அதிகாரபூர்வமாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். 13 பேர் கொண்ட ஒரு குழு செல்கிறது என்று திருப்பியும் செய்திகளில் பார்த்தோம். கடைசியில் என்னாயிற்று என்றால், கர்நாடகா முதலமைச்சர் சொல்லிவிட்டார். ``தமிழ்நாடு முதலமைச்சர் இங்கு வரவேண்டாம். நாங்கள் தண்ணீர் கொடுப்பதற்கு தயாராக இல்லை’’ என்று கர்நாடக முதலமைச்சர் தெரிவிக்கிறார்.

அனைத்துக் கட்சிக்கூட்டம்

தவறாக எதுவும் பேசவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டப் போகிறீர்களா இல்லையா? எப்பொழுது கூட்டப்போகிறீ ர்கள்?

இவற்றையெல்லாம் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். முதலில், தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா செல்வதாக இருந்தாரா? அப்படி இருந்தால், ஏன் செல்லவில்லை? இப்பொழுது உங்கள் நிலை என்ன என்பதுதான், எங்களின் கேள்வி.

இரண்டாவது பிரச்சினை பயிர்கடன் பற்றி சொல்ல விரும்புகிறேன். தேர்தல் வாக்குறுதியில் நீங்கள் கொடுத்த வாக்குறுதி. பயிர்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்வோம் என்று சொன்னீர்கள். ஆனால், கொடுக்கவில்லை. இதற்கும் சேர்த்துதான் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தள்ளுபடி செய்ய கால அவகாசம் வேண்டுமென்றால், எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதைச் சொல்ல வேண்டும். டெல்டாவில் உள்ள அனைத்துத் தரப்பு விவசாயச் சங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசும்படி, முதலமைச்சர் அவர்கள் ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

குறுவையில் நஷ்டத்தைச் சந்தித்து இருக்கின்ற விவசாயிகளுக்கு இந்த அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எங்கள் ஆட்சியில் 6.5 லட்சம் ஹெக்டர் அளவுக்கு, குறுவை நெல் சாகுபடி நடந்தது. ஆனால், இந்த ஆட்சியில் இந்த வருடம் வெறும் 1.5 லட்சம் ஹெக்டர் அளவுக்குத்தான் குறுவை சாகுபடி நடந்துள்ளது.

நீங்கள் `ஸ்பெஷல் பேக்கேஜ்’ என்று சொல்லி ரூ.134 கோடி அறிவித்திருக்கிறீர்கள். அதை எத்தனை பேருக்குக் கொடுத்திருக்கிறீர்கள் என்பதை இந்த அவையில் தெரிவிக்க வேண்டும். ஏதாவது, கணக்கெடுப்பு எடுத்திருக்கிறீர்களா?

`ஸ்பெஷல் பேக்கேஜில்’ நீங்கள் கொடுத்தது ரூ.134 கோடி. அது அனைத்து அரசிலும் கொடுக்கின்ற ஸ்பெஷல் பேக்கேஜ்தான். இப்போது அவர்கள், `வறட்சி நிவாரண நிதி’ கேட்கிறார்கள். இவை இரண்டுக்கும் வித்தியாசம் தெரிந்துகொள்ள வேண்டும். தினமும் காலையில் பேப்பர் படித்தால் மட்டும் பத்தாது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்து விவசாயிகளையும் அழைத்துக் கலந்து பேசி, அவர்களின் கோரிக்கைகள் என்ன என்று தயவுசெய்து நீங்கள் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.

என்ன பயம், என்ன தயக்கம்?

நான் மீண்டும் திரும்ப திரும்ப கேட்பதுதான். கர்நாடகாவில் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அவர்களின் கோரிக்கைகளை எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இந்த த.வெ.க. அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு என்ன பயம், என்ன தயக்கம் என்பதைக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

திசை திருப்பப் பார்க்கிறார்

குறுவையை பாதித்த நிலையில் இன்றைக்கு சம்பாவும் பாதிக்கப்படும் நிலையில் விவசாயிகளின் தொடர் கோரிக்கை வாயிலாக, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கவும், அதற்கான நிவாரணங்களை பெறவும் அவர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதையும் இந்த அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது நாம் என்ன விஷயமாக பேசிக்கொண்டு இருக்கிறோம். பேரவைத் தலைவர் அவர்களே, நீங்கள் சொன்னதால், உங்களின் வார்த்தையை மதித்து, ஒத்திவைப்புத் தீர்மானம் எதற்கு கொடுத்தோமோ அதைப்பற்றி மட்டும் பேசினேன். ஏன் தண்ணீர் வரவில்லை. எப்போது தண்ணீர் வரவேண்டும் என்று கேட்கிறேன். பயிர்கடன் தள்ளுபடி எப்போது செய்வீர்கள் என்று கேட்கிறேன். அதற்கு சம்பந்தமே இல்லாமல் நம் அமைச்சர் அவர்கள் திசை திருப்பப் பார்க்கிறார்.

தொகுதி மறுவரையறையைப் பற்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்மாதிரியாக அதை பற்றி முதன்முறையாக பேசியது, எங்கள் திராவிட முன்னேற்றக் கழகம், எங்கள் கழகத் தலைவர் அவர்கள்தான். சென்ற ஆண்டு தென் மாநிலங்களில் இருந்து 5 முதலமைச்சர்களை, சென்னைக்கு வரவழைத்து ஒரு மிகப்பெரிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, இந்தத் தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதன்முறையாக இந்தியாவிலேயே குரல் கொடுத்த தலைவர் எங்களின் தலைவர்.

பேப்பர் படித்தால் மட்டும் போதாது.. முதல்வருக்கு பயம் ஏன்? : உதயநிதி ஸ்டாலினின் அனல் பேச்சு! (முழு உரை)

நாளை நீங்கள், இந்த அரசு, முதலமைச்சர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்திருக்கிறீர்கள். இதற்கான சரியான முடிவை எங்களின் தலைவர், ஆலோசனை செய்து அந்த முடிவை அவர் எடுப்பார். இப்போது நாம் பேசிக்கொண்டு இருப்பது நிதிநிலைமை, வேளாண்மை பட்ஜெட்டை பற்றி, அதற்கு எங்கள் உறுப்பினர்கள் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு முடிந்தால் நீங்கள் பதில் சொல்லுங்கள்.

நம் அமைச்சர் அவர்கள் தி.மு.க ஏன் லாட்டரி நடத்தும் நிறுவனத்திடம் இருந்து நிதி வாங்கினார்கள் என்று கேட்கிறார். அதை கொடுத்தது, அவரின் மாமனார்தான். அவர் மாமனாரிடம் கேட்டு, அந்த விளக்கத்தை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories