
திமுக சார்பில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆக.03) தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய த.வெ.க அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தோழமைக் கட்சியினர், திமுக தொண்டர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது கழக இளைஞர் அணிச் செயலாளரும் - சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு :-
’’விவசாயக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், மேகதாது அணை கட்டுவதைத் தடுத்தே ஆக வேண்டும், முக்கியமாக டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று, நம்முடைய கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மக்கள் விரோத த.வெ.க. அரசுக்கு எதிராக இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை, இன்றைக்கு தஞ்சையில் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

=> மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் :
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழகத்தினரும், தோழமைக் கட்சியினரும், விவசாயிகளும் மிகப்பெரிய அளவில் இந்த அரசுக்கு எதிராகத் திரண்டு வந்திருக்கிறீர்கள். இந்த ஆர்ப்பாட்டத்தை, ஒருங்கிணைத்த நம்முடைய முதன்மைச் செயலாளர் அண்ணன் நேரு அவர்களுக்கும், மாவட்டச் செயலாளர் அண்ணன் துரை சந்திரசேகர் அவர்களுக்கும், அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கும், கழக விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகள் அத்தனை பேருக்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைக்கு ஆடி 18. பொதுவாக, இந்த ஆடிப் பெருக்கில் ஆறு முழுவதும் தண்ணீர் நிறைந்து ஓடும். ஆனால், வருகின்ற வழியெல்லாம் பார்த்தேன். காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் அனைத்தும் வறண்டு, கிட்டத்தட்ட ஒரு பாலைவனம் போல காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. இதுவே நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம், நம்முடைய தலைவர் முதலமைச்சராக இருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? நம்முடைய தலைவர் இந்த நிலைமை ஏற்பட விட்டிருப்பாரா? இன்றைக்கு குறுவையைக் காப்பாற்ற முடியவில்லை. `சம்பா’ என்ன நிலைமை ஆகுமோ’ என்று விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
=> டம்மி முதலமைச்சர் :
இன்றைக்கு இருக்கக்கூடிய ஒரு நிர்வாகத் திறனற்ற, ஒரு டம்மி முதலமைச்சரால்தான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
2021-லிருந்து 2025 வரைக்கும் அன்றைய முதலமைச்சரான நம்முடைய கழகத் தலைவர் அவர்கள், ஒவ்வொரு வருடமும் சரியாக, ஜூன் 12 ஆம் தேதி அன்று மேட்டூர் அணையை, தானே சென்று திறந்து வைத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், சில ஆண்டுகளில் ஜூன் 12-க்கு முன்னாடியே மேட்டூரிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டிருக்கிறார் அப்போதைய நம்முடைய முதலமைச்சர், நம்முடைய கழகத் தலைவர் அவர்கள். ஆனால், இந்த வருடம் என்ன நிலைமை? ஜூன் மாதம் முடிந்துவிட்டது, ஜூலை மாதம் முடிந்துவிட்டது, இப்போது ஆகஸ்ட் மாதத்தில் இருக்கிறோம். இன்னும் தண்ணீர் வரவில்லை.
காவிரி மேலாண்மை வாரியத் தீர்ப்பின்படி, ஜூன் மாதத்தில் 9.9 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை மாதத்தில் 31 டி.எம்.சி. தண்ணீர் என்று மொத்தம் 42 டி.எம்.சி. தண்ணீர் நமக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை. ஆனால், இதைப் பற்றி இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் வாயைத் திறந்து பேசுகிறாரா? பேச மாட்டேன் என்கிறார். அவருக்கு இருக்கக்கூடிய ஒரே கவலை என்ன? தி.மு.க. மீது என்ன பொய் வழக்குப் போடலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்.

=> கேள்வி கேட்கவே பயம் :
இங்கே தமிழ்நாட்டில் ஆட்சி நடத்துவதற்கு, காங்கிரஸின் தயவு வேண்டும். அதனால், கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டு கேள்வி கேட்கத் தைரியமில்லை. எதிர்த்துக் கேள்வி கேட்கவே பயப்படுகிறார். அதேபோல ஆட்சி அமைத்து, மூன்று மாதங்கள் ஆகிவிட்டன, இதுவரைக்கும் அவருடைய வாயிலிருந்து பா.ஜ.க. என்று ஒரு வார்த்தை வந்ததே கிடையாது. அவ்வளவு பெரிய தைரியசாலி.
நேற்று, மேகதாதுப் பிரச்சினையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது என்று, தமிழ்நாட்டின் விவசாயிகள் டெல்லிக்குப் போராடப் போயிருக்கிறார்கள். மகாராஷ்டிர காவல்துறை நாக்பூரில் ரயிலை வழிமறித்து விவசாயிகளை இறக்கிவிட்டு, மீண்டும் தமிழ்நாட்டிற்குப் போகச் சொல்லிவிட்டார்கள். இதைக் கண்டித்து நம்முடைய தலைவர் அவர்கள் அறிக்கை விட்டார்கள். அனைத்து எதிர்க்கட்சிகளும் அறிக்கை விட்டோம். இதைப் பற்றியும் முதலமைச்சர் வாய் திறக்கவில்லை. ஏன்? மகாராஷ்டிராவில் நடப்பது பா.ஜ.க. ஆட்சி. அவர்களை எதிர்த்துப் பேசுவதற்கு இங்கே இருக்கக்கூடிய முதலமைச்சருக்குத் தைரியமில்லை, திராணியில்லை. அந்த அளவிற்கு விவசாயிகளின் உரிமையைவிட, முதலமைச்சருக்கு அவருடைய சுயநலம், ஆட்சியை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற அந்த சுயநலமே மிக மிக முக்கியம்.
=> மிகப்பெரிய சட்டப் போராட்டம் :
இப்போது ஒட்டுமொத்த விவசாயிகளும் இந்த அரசுக்கு எதிராகத் திரும்பியதும், இரண்டு நாட்களாக நாடகமாடினார். `கர்நாடகா போகப் போகிறேன்’ என்று பொய் சொன்னார். `தயவுசெய்து கர்நாடகாவிற்குப் போகாதீர்கள், மிகப்பெரிய சட்டப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.’ என்று திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் இல்லை, அனைத்து எதிர்க்கட்சியினரும் சொன்னோம். அவர்களுடைய கூட்டணிக் கட்சியே சொன்னது, கர்நாடகாவிற்குப் போகத் தேவையில்லை என்று. அதையெல்லாம் அவர் கேட்கவில்லை. ஆனால், கர்நாடக முதலமைச்சரே சொல்லிவிட்டார், `தயவுசெய்து இந்தப் பக்கம் வந்துவிடாதீர்கள், உங்களுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கொடுக்க முடியாது’ என்று கர்நாடக முதலமைச்சர் சொன்னதற்குப் பிறகுதான், அமைதியானார்.
இவர் கர்நாடக முதலமைச்சரைப் பார்ப்பது இருக்கட்டும். முதலில் நம்ம ஊர் விவசாயிகள், உங்களைப் பார்த்தாரா? உங்களுடைய கோரிக்கைகளைக் கேட்டாரா? முதலில் என்ன செய்திருக்கவேண்டும்? நம்முடைய விவசாயிகளையெல்லாம் வரச் சொல்லி, அவர்களுடைய கோரிக்கைகளுக்குச் செவிமடுத்திருக்க வேண்டும். அதை இந்த முதலமைச்சர் செய்யவில்லை. அரசுதான் எங்களைக் கூப்பிடவில்லை, கேட்கவில்லை. நாங்களே முதலமைச்சரைப் பார்த்துப் பேசுகிறோம் என்று விவசாயிகள் கோட்டையை நோக்கிப் சென்றார்கள். ஆனால், அந்த விவசாயிகளையும் குண்டுக்கட்டாகக் கைது செய்த அரசுதான் இந்த குதிரை பேர அரசு. அந்த அளவிற்கு விவசாயிகள் மீது இந்த முதலமைச்சருக்கு ஒரு வன்மம்.

=> கேபினெட் - ஒரு ஜோக்கர் கூட்டம் :
முதலமைச்சர்தான் இப்படி என்றால், நீர்வளத்துறைக்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். இப்படி ஒரு அமைச்சரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. பத்திரிகையாளர்களைப் பார்த்தாலே திருடனைப் போல ஓடுகிறார், தலைதெறிக்க ஓடுகிறார். எந்தக் கேள்விக்கும் பதில் கிடையாது. வேளாண்துறை அமைச்சர் என்று ஒருவர் இருக்கிறார். என்ன செய்து கொண்டிருக்கிறார்? இன்றைக்கு வேளாண்துறை அமைச்சர், வேளாண் பட்ஜெட்டை எடுத்துக்கொண்டு திருப்பதிக்குச் சென்று பூஜை போட்டுக்கொண்டு வந்துகொண்டிருக்கிறார். இதுதான் இன்றைக்கு இந்த அரசின் லட்சணம், இங்கு இருக்கக்கூடிய அமைச்சர்களின் லட்சணம்.
எந்த மாதிரி அமைச்சர்கள் அமைந்திருக்கிறார்கள்? திருட்டு லாட்டரி விற்கிற ஒரு அமைச்சர், திருட்டு வி.சி.டி. விற்கிற ஒரு அமைச்சர், பிளாக்கில் டிக்கெட் விற்கிற ஒரு அமைச்சர், உருட்டுக் கட்டையுடனே சுத்திக் கொண்டிருக்கிற ஒரு அமைச்சர், எல்லாவற்றிற்கும் மேலாக போதைப் பவுடர் அமைச்சர். இப்படி மொத்த கேபினட்டுமே ஒரு ஜோக்கர் கூட்டமாக இன்றைக்குத் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.
இந்த ஆட்சியில் முதலமைச்சர் ரீல்ஸ் போடுகிறார், அமைச்சர்கள் ரீல்ஸ் போடுகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் பள்ளி, மருத்துவமனை ஏன் கழிப்பறையைக் கூட விட்டுவைப்பது இல்லை, உள்ளே சென்று ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாட்களாக நீங்கள் பார்த்திருப்பீர்கள், இரண்டு அமைச்சர்கள் அவர்களுடைய மாவட்டத்தில் இருக்கக்கூடிய பள்ளிகளுக்குச் சென்று, அங்கு இருக்கக்கூடிய குழந்தைகளையெல்லாம் வெளியே வரச் சொல்லி, அவர்களுடைய கட்சியின் பெயரை கோஷம் போடச் சொல்லி, அதை ரீல்ஸ் எடுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு கேடுகெட்ட ஆட்சியைத் தமிழ்நாடு இதுவரை பார்த்ததே கிடையாது.

=> இந்தியாவே பார்த்தது இல்லை! :
சென்ற மாதம் தொலைக்காட்சிச் செய்தியில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். தென்காசி பக்கத்தில் ஒரு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளெல்லாம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றன. அங்கு சென்ற த.வெ.க. ஆளுங்கட்சியின் ஒரு மாவட்டச் செயலாளர் என்ன செய்தார் தெரியுமா? நான்கு கேமராக்களை எடுத்துக்கொண்டு போய் படம்பிடித்து, பின்னணி இசை சேர்த்து, அதை எடுத்து ரீல்ஸ் போடுகிறார். இப்படி ரீல்ஸ் போடுகிற ஒரு அரசைத் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே இதுவரை பார்த்தது கிடையாது. அமைச்சர்கள் மட்டும் இல்லை, அமைச்சருடைய சொந்தக்காரர்கள், அண்ணன், தம்பியெல்லாம் ஆய்வுக்குப் போகிறார்கள். அரசு அதிகாரிகளுக்குத் தெரியவில்லை; யார் அமைச்சர், யார் சட்டமன்ற உறுப்பினர் என்று யாருக்குமே தெரியவில்லை. முதலமைச்சருக்கும் தெரியவில்லை. அந்த அளவிற்கு `ரீல்ஸ் வெறி’ இந்த அரசுக்கு முற்றிப்போயிருக்கிறது.
இன்றைக்கு விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? சினிமா திரையரங்கிற்குச் சென்று படம் பார்த்துவிட்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்குத் தினசரி 3,500 கன அடி தண்ணீர், அதாவது சுமார் 4 டி.எம்.சி. தண்ணீரைத் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு பிறப்பிக்கிறது. அதன்படி பார்த்தீர்கள் என்றால், நமக்குக் கடந்த இரண்டு மாதத்தில் 42 டி.எம்.சி தண்ணீர் வந்திருக்க வேண்டும். ஆனால், 4 டி.எம்.சி. தான் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார்கள். அதையும் திறக்க முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் அவர்கள் உத்தரவு போட்டார். இதைப் பற்றியெல்லாம் இந்த ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது.
ஆட்சியாளர்களுக்குக் கவலை இல்லை, ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தால் சும்மா இருக்க முடியுமா? அதனால்தான் இன்றைக்கு விவசாயிகளுக்காக மக்கள் மன்றத்தில் இந்தப் போராட்டத்தை நடத்துவது போல, உச்சநீதிமன்றத்திலும் நம்முடைய தலைவர் சட்டப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்.
ஒரு அமைச்சர் நேற்று சொல்கிறார், ’திராவிட முன்னேற்றக் கழகம் இப்போது வழக்கு தொடுத்திருக்கிறதே, கடந்த 5 வருடமாக ஏன் வழக்கு தொடரவில்லை?’ என்று. இப்படி ஓர் `அறிவாளி’ அமைச்சரை எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா? எதற்கு வழக்குத் தொடர வேண்டும்? 5 வருடமாகத் தண்ணீர் ஒழுங்காக வந்து கொண்டிருந்தது, வழக்குத் தொடரவில்லை. இப்போது தண்ணீர் வரவில்லை, வழக்குத் தொடர்வதற்கான திராணியும் உங்களுக்கு இல்லை. அதைத்தான் நாங்கள், திராவிட முன்னேற்றக் கழகம் செய்து கொண்டிருக்கிறோம்.

எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய நாங்கள், நம்முடைய தலைவர், விவசாயிகளுக்காக இவ்வளவு செய்து கொண்டிருக்கிறோம். ஒரு பிரச்சினை என்று வந்தால், அதற்குத் தீர்வு காண்பதுதான் ஒரு நல்ல அரசின் அழகு. அதை இந்த அரசு செய்து கொண்டிருக்கிறதா? அதற்கு மாறாக என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? ஏதாவது ஒரு பிரச்சினை என்று வந்தால், அதிலிருந்து மக்களை எப்படி திசைதிருப்புவது என்றுதான் தினமும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். தினமும் 4 மணிக்கு ஏதாவது ஒரு காணொலி. தினமும் திசைதிருப்பும் வேலையை முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தக் காவிரிப் பிரச்சினையை எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள், ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் என்ன செய்கிறார்? நம் தலைவர் ஆட்சியில், நாம் கட்டிய `101 அடி மெட்ரோ ரயில் பாலத்தை’ இவர் சென்று ஆய்வு செய்கிறார். நம் தலைவர் கொண்டுவந்த சென்னை மெட்ரோ இரயிலில் சென்று, இவர் பயணம் செய்து ரீல்ஸ் போடுகிறார்.
நம் ஆர்ப்பாட்டம் இன்றைக்கு இருக்கிறது என்று தெரிந்த உடனே, இதை திசைதிருப்புவதற்காகக் காஞ்சிபுரத்தில் சிப்காட் ஆய்வுக்குச் செல்கிறார். அதுவும் பார்த்தீர்கள் என்றால் நம் தலைவர் ஆட்சியில் நாம் கொண்டுவந்த செயின்ட் கோபைன் நிறுவனத்தில், ஆய்வு செய்கிறார். ஆய்வு செய்கிறவர் சொந்தமாக ஒரு திட்டத்தைக் கொண்டுவந்து, அதைச் செயல்படுத்தி, அதை ஆய்வு செய்தார் என்றால், அது நல்லது. ஆனால், தொடர்ந்து நம்முடைய தலைவர் முதலமைச்சராக இருந்தபோது என்னென்னவெல்லாம் தொடங்கி வைத்தார்களோ, அந்தத் திட்டங்களையெல்லாம் தொடர்ந்து ஆய்வுசெய்து கொண்டிருக்கிறார்.
நான் கூட ஒரு மீம் பார்த்தேன். இவர் மெட்ரோ இரயிலில் ஆய்வு செய்திருக்கிறார். 101 அடி மேலே அந்த மெட்ரோ இரயிலில் ஆய்வு செய்யும்போது பார்க்கிறார், சென்னை முழுவதும் அத்தனை திட்டங்களும் தெரிகின்றன. அவருடைய `மைண்ட் வாய்ஸ்’, `ஏன்பா எனக்கு ஓட்டு போட்டீர்கள்? தமிழ்நாட்டிற்கு, சென்னைக்கு இவ்வளவு செய்திருக்கிறார்கள், தி.மு.கவுக்குத்தானே வாக்களித்திருக்க வேண்டும்’ என்று ஒரு மீம் பார்த்தேன். இன்னும் முதலமைச்சருக்குப் புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால், ஊரான் வீட்டு நெய்யில் அவர் வீட்டுக்கு இன்றைக்கு ஸ்வீட் செய்து கொண்டிருக்கிறார். அவர் மொழியில் சொன்னால்தான் அவருக்குப் புரியும். அவர் மொழி என்னவென்று உங்களுக்குப் புரியும். இன்றைக்கு இந்தியா முழுவதும் பேசுகிறது, `இப்படி ஒரு முதலமைச்சரை நாங்கள் பார்த்ததே இல்லைப்பா. வாயில் நன்றாக வந்துவிடும். எதற்கு எடுத்தாலும் கொத்து பரோட்டா போடுவேன்’ என்று பேசிக்கொண்டிருக்கிறார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது என்ன சொன்னார்? அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் விவசாயியாகப் பிறக்க வேண்டும் என்று சொன்னாரா, இல்லையா? சரி, நான் கேட்கிறேன், இதற்கு எதற்கு அடுத்த ஜென்மம் வரை காத்திருக்க வேண்டும்? வாருங்கள், இந்த ஜென்மத்திலேயே விவசாயம் செய்யலாமே. யார், எப்போது வேண்டுமானாலும் விவசாயம் செய்யலாம்.

=> விவசாயப் பெருங்குடி மக்கள்தான் :
நான் சொல்கிறேன் மே 10-ஆம் தேதியிலிருந்து இந்தத் தரங்கெட்ட ஆட்சி அமைந்ததிலிருந்து அதிக ஏமாற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருப்பது நம்முடைய விவசாயப் பெருங்குடி மக்கள்தான். தேர்தல் வாக்குறுதியில் இன்னும் வேறு என்னென்ன சொன்னார்? என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தார்? 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கிற எல்லா விவசாயிகளுக்கும் முழுமையாகப் பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொன்னாரா, இல்லையா? ஆனால் ஆட்சிக்கு வந்தவுடனே என்ன சொன்னார்? 50,000 ரூபாய்க்குள் கடன் வாங்கி இருந்தால் மட்டும்தான் பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொன்னார்.
உடனே நம்முடைய தலைவர் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார். அனைத்து விவசாயச் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. உடனே 50,000 என்பதை 75,000 ரூபாய் என்று மாற்றினார்கள். ஆனால், இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது தெரியுமா? வெறும் 35,000 ரூபாய்க்கு மேல் யாருக்கும் கடன் தள்ளுபடி இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.
=> வாயில வடை சுடுகிற ஆட்சி :
வாக்குறுதியில் சொன்னது ஒன்று, அறிவிப்பில் சொன்னது வேறு ஒன்று, ஆனால், செயல்படுத்துவது இன்னொன்று. இப்படி வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்ற முடியாமல் `வாயில் வடை சுடுகிற ஆட்சி’தான் இன்றைக்கு அமைந்திருக்கக்கூடிய இந்த த.வெ.க. அரசு.
இதுவே 2006-இல் கழக ஆட்சி அமைந்தபோது நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தான் சொன்னபடி 7,000 கோடி ரூபாய் அளவிற்கு விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தார். அதை எப்படி செய்தார்? அவர் முதலமைச்சராகப் பதவியேற்கிற அந்த மேடையிலேயே கோப்புகளைக் கொண்டுவந்து அங்கேயே கையெழுத்துப் போட்டார். சென்ற ஆட்சியில், நம் தலைவர் 12,000 கோடி ரூபாய் அளவிற்குப் பயிர் கடன் தள்ளுபடியை நம்முடைய தலைவர் செய்தார்.
இந்தச் சூழ்நிலையில்தான் இன்றைக்கு முழு பயிர்க்கடனையும் ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தை அறிவித்தீர்கள். ஆனால், சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் என்ன தெரியுமா சொன்னார்? தி.மு.க.-வின் தூண்டுதலால் இன்றைக்கு விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள் என்று உங்களுடைய போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர் இன்றைய முதலமைச்சர் அவர்கள். கழக ஆட்சி நடந்தபோது மேகதாது அணையைக்கட்ட விடாமல் நாம் கர்நாடகாவைத் தடுத்தோம். ஆனால், இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஒரு மிக பலவீனமான ஆட்சி அமைந்திருக்கிறது. இந்த வாய்ப்பை எப்படியாவது பயன்படுத்தி மேகதாதுவில் அணை கட்டிவிடலாம் என்று கர்நாடக அரசு முழு முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
இந்த அரசு, மேகதாது அணை கூடாது என்று சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் அறிவித்தது. அப்போது அதை ஆதரித்து நான் பேசினேன். மேகதாது பிரச்சினை மிக மிக முக்கியமான ஒரு பிரச்சினை. இது கட்சிகள் கடந்து அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டிய பிரச்சினை. இந்த அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசுக்கு நாம் நம்முடைய அழுத்தத்தைக் கொடுப்போம் என்று சொன்னேன். ஒன்றிய அரசுக்கு அழுத்தத்தைக் கொடுப்போம் என்றுதான் சொன்னேன், உடனே ஆட்சியாளர்கள் பயந்துவிட்டார்கள்.
நேற்று கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்டி, காவிரி பிரச்சினையில் அவர்களுடைய ஒற்றுமையை இன்றைக்கு அவர்கள் காட்டியிருக்கிறார்கள். ஆனால், இங்கு இருக்கக்கூடிய இந்த முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவதையே மிகவும் ஒரு அவமானமாக நினைக்கிறார்.

=> ஏக்கருக்கு 25,000 ரூபாய் :
குறுவையைப் பொறுத்தவரைக்கும் கடந்த வருடம் 6.5 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடந்தது. ஆனால், இந்த வருடம் வெறும் 1.5 லட்சம் ஏக்கரில்தான் சாகுபடி ஆகியிருக்கிறது. கிட்டத்தட்ட 14 லட்சம் விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் 2,500 கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளுக்கு இன்றைக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆகவேதான் ஏக்கருக்கு 25,000 ரூபாய் நிவாரணம் கொடுங்கள், பயிர்க்காப்பீட்டிற்கான பிரீமியத்தை அரசே செலுத்த வேண்டும், சம்பா சாகுபடிக்கு விதை, உரம், பூச்சிக்கொல்லி இவற்றையெல்லாம் மானியமாக அரசு கொடுக்க வேண்டும் என்று நம்முடைய தலைவர் அவர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.
ஆனால் இந்தக் கோரிக்கையையும் ஏற்க இந்த அரசு தயாராக இல்லை. அதனால்தான் இன்றைக்கு வீதிக்கு வந்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். நாம் இவர்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும், மேகதாது அணை கட்டுவது, தடுத்து நிறுத்தப்பட வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையைச் செலுத்த வேண்டும், அதற்கு மிக மிக முக்கியமாக இந்த டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்தாக வேண்டும் என்று நம்முடைய கோரிக்கையை மீண்டும் இந்த அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
விவசாயிகள் தொடர்பான இந்த பிரச்சினைகளையெல்லாம் வருகிற சட்டமன்றக் கூட்டத்தொடரில் விவாதித்து தீர்க்கப்படவேண்டும். இரண்டு நாளில் சட்டமன்றம் கூடுகிறது. ஐந்தாம் தேதி ஆரம்பிக்கிறது, சும்மா விடமாட்டோம். வருகிற சட்டமன்றக் கூட்டத்தொடரில், திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக இந்தப் பிரச்சினையை எழுப்புவோம்.
சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்து இடங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக, உங்களுடைய குரலாக திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் ஒலிக்கும். டெல்டா விவசாயிகளுக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்குமே பக்கபலமாக இருக்கும்.
=> தமிழ்நாட்டின் உரிமை :
காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமையை என்றைக்கும் நிலைநாட்டுவோம் என்று சொல்லி, இந்தச் சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நம்முடைய முதன்மைச் செயலாளருக்கும், கழகத் தலைவர் அவர்களுக்கும், மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கும், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து விவசாயப் பெருங்குடி மக்களுக்கும், உங்கள் அத்தனை பேருக்கும் என் நன்றியைத் தெரிவித்து, வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.






