தமிழ்நாடு

மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!

சிவகங்கை மாவட்டம், வஞ்சினிபட்டி கிராமத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் இணைந்து மொகரம் பண்டிகையைக் கொண்டாடினர்.

மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வஞ்சினிபட்டி கிராமத்தில், இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினர் இணைந்து மொகரம் பண்டிகையைக் கொண்டாடினர். இந்துக்கள் 'அல்லாசாமி பூக்குழித் திருவிழா' என்ற பெயரில் இஸ்லாமியர்களுடன் இணைந்து கொண்டாடி வரும் இந்த விநோத திருவிழா, இன்று அதிகாலை மிக விமரிசையாக நடைபெற்றது.

இத்திருவிழா, 17-ஆம் நூற்றாண்டிலிருந்து சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் நடைபெற்று வருகிறது.இவ்விழாவை முன்னிட்டு, இக்கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள் தங்களது விருந்தினர்களுக்குக் கறி விருந்து அளித்தும், இஸ்லாமியர்கள் சைவ உணவு உண்டு விரதமிருந்தும் கொண்டாடினர். மொகரம் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்களால் பாத்தியா ஓதப்பட்டது.

உள்ளூர் மட்டுமன்றி, சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான இந்துக்களும் மல்லிகைப் பூ மற்றும் சர்க்கரை வைத்து, இரு கைகளைக் குவித்து அல்லாவை வணங்கினர்.பின்பு கூடாரத்தில் தொழுகை நடத்தப்பட்டு, அதிகாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, கூடாரத்தின் வாசலில் பிரம்மாண்டமாக வளர்க்கப்பட்டிருந்த பூக்குழியைப் பக்தர்கள் மூன்று முறை சுற்றி வலம் வந்தனர்.

அதன்பிறகு, பக்தர்கள் சட்டை அணியாமல் பூக்குழிக்குள் இறங்கி, நெருப்பை இரு கைகளால் அள்ளி வாரி இறைத்தனர். அப்போது சுற்றியிருந்த ஆண்கள், பக்தர்கள் இறங்கிய பூக்குழியிலிருந்து மண்வெட்டியால் நெருப்பை அள்ளிப் பெண்களுக்கு வழங்கினர். அதனைத் தங்களது முந்தானையில் வாங்கி நெஞ்சில் ஒற்றிக்கொண்டு பின்பு கீழே கொட்டும் வினோத வழிபாடு நடைபெற்றது.குழந்தை வரம் மற்றும் திருமணப் பேறு வேண்டிய பெண்கள், தங்களது நேர்த்திக்கடனாக இம்முறை வழிபாட்டைச் செலுத்தினர்.

அப்போது கூடியிருந்த பெண்கள் குலவையிட்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து, பூக்குழியில் உள்ள சாம்பலைப் பிரசாதமாக அள்ளி, இந்துக்களுக்கு இஸ்லாமியச் சகோதரர்கள் பூசிவிடும் நெகிழ்ச்சியான நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி, இந்து மற்றும் இஸ்லாமியர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் ஒரு முக்கிய விழாவாகப் பல தலைமுறைகளைக் கடந்து இன்றும் இப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்றும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து பல்வேறு திருவிழாக்களை நடத்தி வருவதும், அவர்கள் சாதி, மதங்களைக் கடந்து அன்புடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வருவதற்கும் இதுபோன்ற விழாக்களே சிறந்த எடுத்துக்காட்டாகும்.

banner

Related Stories

Related Stories