
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தவெக மேற்குப் பகுதித் துணைச் செயலாளராகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மே மாதம் 3ஆம் தேதி, அந்த இளம்பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கட்சியின் மற்றொரு நிர்வாகியான ஜெயபால் ஆகிய இருவரும், அந்த பெண்ணை காரில் அழைத்துச் சென்றுள்ளனர்
அப்போது, காரில் செல்லும்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, இந்த இளம்பெண்ணை ஏர்வாடி அருகே உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்துப் பாதிக்கப்பட்ட இளம்பெண் அண்மையில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த தவெக நிர்வாகிகள் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட பெண், கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய தினம், தன்னை பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்றனர். அப்போது காரில் செல்லும்போது தனக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அதிக அளவில் கொடுத்து, ஏர்வாடி அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து பாலமுருகனும் அவரது நண்பர் ஜெயபாலும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக வெளியில் கூறினால் முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தான் கெட்ட பெயர் ஏற்படும்; எனவே, இது குறித்துப் புகார் அளிக்கக் கூடாது என மிரட்டினார்.
இச்சம்பவம் தொடர்பாகத் தான் த.வெ.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜயைச் சந்தித்துப் புகார் தெரிவிக்கச் சென்றபோது, தன்னைச் சந்திக்க விடாமல் காவல்துறையினர் தடுத்துவிட்டதாகவும், மேலும் இப்பாதிப்பு குறித்துத் ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கவலையுடன் தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவம் குறித்துத் தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் குறித்தும் விவரித்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டார். ஆனால், ‘அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர்; அவர் மீது எல்லாம் நீங்கள் புகார் அளிக்கக் கூடாது’ எனக்கூறித் தன்னைத் காவல்துறையினர் மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டினார்.

இக்கொடூரச் சம்பவத்தின்போது தன்னுடன் வந்த மற்றொரு பெண்ணுக்கும் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோர் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து, இதேபோன்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலையும் அவர் வெளியிட்டார்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தன்னுடைய குடும்பச் சூழ்நிலை காரணமாக இச்சம்பவம் குறித்துப் புகார் அளிக்காமல் இருந்து வருவதாகவும், காவல்துறை இதுகுறித்தும் முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து கண்ணீர் மல்கப் பேசிய அவர், 'மாற்றம் வேண்டும் என்றுதான் தமிழக மக்கள் வாக்களித்தார்கள்; ஆனால், அந்த மாற்றத்தைத்தான் நீங்கள் தற்போது பார்த்து வருகிறீர்கள். தமிழக வெற்றிக் கழகத்திற்கு உண்மையாக உழைத்ததற்காக எனக்குக் கிடைத்த கூலிதான் இந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை. நான் கொடுத்த புகார் மனு மீதும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பிலும் என்னை அழைத்து இதுவரை யாரும் இதுகுறித்து விசாரிக்கவில்லை. அதற்காகத் தமிழக முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்; இப்படியொரு தலைவனைத் தேர்ந்தெடுத்ததற்குத் தலைவணங்குகிறேன்’ என்று ஆவேசத்துடன் கூறினார்.
மேலும், 'எம்.எல்.ஏ.-வின் பெயரைச் சொல்லி ஒருவர் என்னைக் கூட்டிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதற்கு இந்த அரசும் காவல்துறையும் துணை போகின்றன. இக்கொடூரத்தால் பாதிக்கப்பட்ட நான், அசிங்கப்பட்டு, கேவலப்பட்டு, எதில் தூக்குப்போட்டுத் தொங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்ததற்காக எனக்குக் கிடைத்த கூலி' என்று அழுதுகொண்டே அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க அளித்த இந்தப் பேட்டி தற்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






