முரசொலி தலையங்கம்

“நீட் தேர்வு ரத்துதான் நிரந்தரத் தீர்வு; அதைத்தான் நாடு எதிர்பார்க்கிறது!” : முரசொலி தலையங்கம்!

“நீட் தேர்வு ரத்து என்பது தான் நடந்து கொண்டிருக்கும் குற்றங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும்.”

“நீட் தேர்வு ரத்துதான் நிரந்தரத் தீர்வு; அதைத்தான் நாடு எதிர்பார்க்கிறது!” : முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

போராட்டம் நடத்துகிறவர்கள் தங்கள் இலக்கை மிகச் சரியாகத் தீர்மானிக்க வேண்டும் என்றும், அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது முக்கியமல்ல, நீட் தேர்வையே முற்றிலுமாக விலக்க வேண்டும் என்பதே இறுதித் தீர்வாக இருக்க வேண்டும் என்றும் நாம் முன்பு எழுதிய தலையங்கத்தில் சொல்லி இருந்தோம். நீட் தேர்வு ரத்து என்பது தான் நடந்து கொண்டிருக்கும் குற்றங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும்.

கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி முன்னெடுத்த போராட்டத்தின் வெப்பம் தாங்க முடியாமல் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இப்போது தனது அமைச்சர் பதவியை விட்டு விலகி இருக்கிறார்.

அவர் பதவி விலகலோடு இப்பிரச்சினை முடிந்து விடப் போவது இல்லை. தனது தவறை உணர்ந்தும் அவர் பதவி விலகவில்லை. டெல்லி தொடங்கி இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் இளைஞர்கள், மாணவர் போராட்டத்தை இந்தியாவின் தேசவிரோத சக்திகள் பயன்படுத்தி விட்டார்களாம்,

அதைத் தடுப்பதற்காக பதவி விலகுகிறாராம். போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது சட்டம் பாய்ந்து விடக் கூடாதாம். அதனால் அவர் பதவி விலகுகிறாராம். இது எதைக் காட்டுகிறது?

அமைச்சர் தர்மேந்திர பிரதான், இதுவரை நீட் தேர்வுகளில் நடந்த முறைகேடுகளை ஒப்புக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. தான் ஏதோ சரியாகத்தான் நடந்து கொள்வதைப் போலவும், மாணவர்கள்தான் உணராமல் போராட்டம் நடத்துவதாகவும், அந்தப் போராட்டத்தை தேச விரோத சக்திகள் பயன்படுத்தி வருவதாகவும் நல்லபிள்ளை வேஷம் போடுகிறார் தர்மேந்திர பிரதான்.

“நீட் தேர்வு ரத்துதான் நிரந்தரத் தீர்வு; அதைத்தான் நாடு எதிர்பார்க்கிறது!” : முரசொலி தலையங்கம்!

நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு உண்மையான, முழுமையான, நிரந்தரமான தீர்வைக் காட்ட முடியாத பிரதமர் மோடி, ஒப்புக்கு ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வைத்துள்ளார். அவருக்கு பதிலாக யார் ஒன்றிய அமைச்சராக வந்தாலும் அவர்களும் தர்மேந்திர பிரதான் போலவே நடந்து கொள்ளப் போகிறார்கள்.

நீட் தேர்வு நடக்கத்தான் போகிறது. முறைகேடுகள் நடக்கத்தான் போகிறது. கேள்வித் தாள்கள் முன்கூட்டியே வெளியாகும். பத்து நாட்கள் செய்தி வரும். அவ்வளவுதான். அடுத்த பிரச்சினைக்கு நாடும், நாட்டு மக்களும் போய்விடுவார்கள். இதுதான் பிரதமர் மோடியின் நினைப்பு ஆகும்.

2017 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடக்கிறது. அது முதல் தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. மூன்று முறை இதற்கு எதிராக சட்ட மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பி இருக்கிறது தமிழ்நாடு. அதை குப்பைக் கூடைக்குள் போட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஆனால் இப்போதுதான், தேர்வில் முறைகேடு நடப்பதாக பிரதமர் மோடிக்கு தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான முறைகேடுகள் இத்தேர்வில் நடக்கும். ஆள்மாறாட்டம் நடக்கும். கேள்வித் தாள் வெளியாகும். ஒரே சென்டரில் எழுதியவர்கள் வரிசையாக ரேங்க் பட்டியலில் வருவார்கள். திடீரென சிலருக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் போடுவார்கள். இப்படி தொடர்ந்து நடக்கும். அப்போதெல்லாம் ஏன் பிரதமர் அவர்கள் இதுபற்றி வாய் திறக்கவில்லை?

அரியலூர் அனிதா தொடங்கி தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை இளம் உயிர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். தமிழ்நாட்டைப் போலவே வட மாநிலங்களிலும் எத்தனை உயிர்கள் பறிபோனது? அப்போதெல்லாம் பிரதமர் அவர்கள் இதுபற்றி பேசினாரா? இல்லை.

சி.பி.ஐ. பலரையும் கைது செய்து அடைத்துள்ளது. அப்போதெல்லாம் பிரதமருக்கு இது தெரிவிக்கப் படவில்லையா?

“நீட் தேர்வு ரத்துதான் நிரந்தரத் தீர்வு; அதைத்தான் நாடு எதிர்பார்க்கிறது!” : முரசொலி தலையங்கம்!

'பல லட்சம் கோடி பிசினஸ் நடக்கும் தொழிலாக 'நீட்' தேர்வு இருக்கிறது. இதில் லட்சக்கணக்கில் ஒவ்வொரு மாணவரும் செலவு செய்ய வேண்டி உள்ளது' என்று காட்டுக் கத்தல் போட்ட போதெல்லாம், 'நீட் மூலமாகத்தான் தகுதி தீர்மானிக்கப்ப-டுகிறது, தமிழ்நாடுதான் எல்லாவற்றையும் எதிர்க்கிறது' என்று மழுப்பி வந்தார்கள். இப்போது தேர்வு முறைகேட்டை ஒப்புக் கொண்டு வீடியோ வெளியிடுகிறார் பிரதமர்.

வினாத்தாள் கசிவுகள் சாதாரணப் பிரச்சினை இல்லையாம். மாணவர்களை மன உளைச்சல் ஏற்படுத்தும் பிரச்சினையாம். அவ்வளவுதான் பிரதமர் கொடுத்துள்ள வாக்குறுதி. இனி எந்தத் தவறுமே நாட்டில் நடக்காது. அவர் கிளம்பி விடுவார்.

'நீட்' தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை, 10 கோடி அபராதம் என்று 3 ஆண்டுகள் கழித்து சட்டம் போடுவதற்கு வெட்கமாக இல்லையா?

நாடு முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை எப்படியாவது அமுக்க வேண்டும் என்பதற்காக தர்மேந்திர பிரதானை பதவி விலக வைத்துள்ளார்கள். மற்றபடி இத்தேர்வில் வழக்கமான முறைகேடுகள் தொடரத்தான் போகிறது.

கோச்சிங் செண்டர்கள் அடிக்கும் கொள்ளைகள் தொடரவே போகிறது. படிக்க முடியாமல், பணம் கட்ட முடியாமல் மாணவர்கள் படும் வேதனை தொடரவே போகிறது. வினாத்தாள் கசிவுகள் நடக்கவே போகிறது. ஒன்றிய அரசால் இது எதையும் தடுக்க முடியாது.

'நீட் தேர்வு ரத்து' என்பதே நிரந்தரத் தீர்வு. அதைத்தான் பிரதமர் மோடியிடம் நாடு எதிர்பார்க்கிறது.

banner

Related Stories

Related Stories