
முதலமைச்சர் விஜயின் ஆணவப் பேச்சை கண்டித்து, சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா எம்.பி பேசும் போது, சட்டமன்றத்தில் கண்ணியமில்லாமல் பேசுவது என்பது இதுவரை இல்லாதது. சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதற்கு பதில் சொல்லாமல் மிசா குறித்து பேசுவதும் செய்கை செய்வதும் மோசமான நிலையை உருவாக்கி உள்ளது.

அவசர நிலை பிறப்பிக்கபட்ட போது இன்றைய முதலமைச்சருக்கு ஒரு வயது தான், இருந்தாலும் வரலாற்றை தெரிந்து கொண்டு பேச வேண்டும். வரலாற்று பிழையாக சந்தர்ப்ப சூழ்நிலையில் முதலமைச்சர் ஆகி இருக்கலாம். ஆனால், எதற்கும் நிதானம் வேண்டும். அவர்கள் சட்டமன்றத்தில் பேசுவதை சகித்து கொண்டே உள்ளமே தவிர, ஏற்றுக் கொண்டு அல்ல என்று எச்சரிக்கை விடுத்தார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று கூடி இருக்கிற கூட்டத்தை பார்த்தால் தேர்தலில் தோல்வி அடைந்த கட்சியா இது? என்று வெளி மாநிலங்களில் பார்ப்பவர்கள் கேட்கும் வகையில் எழுச்சி அடைந்து உள்ளது. நாக்கில் நிதானம் வேண்டும். தற்போது பட்டிருக்கும் காயம் என்பது ஏற்று கொள்ள முடியாது. பொறுப்பற்ற முறையில் பேசுபவர்களுக்கு வரும் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார்.






