
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ‘திருவள்ளுவர் திருவிழா’ நிகழ்வில், திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசப்பட்ட ஆளுநர் அர்லேகரின் நடவடிக்கைக்கு ஆசிரியர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமக்கு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் தருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில், ஆளுநர் மாளிகையாகிய ‘மக்கள் பவன்’ என்ற அந்த மாளிகையில் ‘திருவள்ளுவர் திருவிழா’ என்ற ஒன்றைக் கொண்டாடுவதாகவும், அதில் திட்டமிட்டே திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் அடித்திருப்பதாகவும் இன்றைக்குச் செய்திகள் வந்திருப்பது நமக்கு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் தருகிறது.
திட்டமிட்டே தொடர்ந்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகள் திருவள்ளுவரை, காவி மயமாக்கிக் கொண்டிருப்பதைக் கண்டித்து, இதுவரையில் பலமுறை கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டு, அந்தக் காவி நிறம் எல்லாம் திருவள்ளுவர் சிலையில் இடம்பெற முடியாத அளவிற்குத் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார்கள்.

திருவள்ளுவருக்குக் காவிச் சாயமா? தமிழ்நாடு முழுவதும் கிளர்ச்சி வெடிக்கும்!
இந்தப் போக்கு, அதற்கு முன்னால் அந்த மாளிகையில் இருந்த ஆர்.எஸ்.எஸ்.காரரான ஆர்.என்.இரவி அவர்கள் தொடங்கியது. இப்போது அதைவிட ஒருபடி அதிகமாக, இப்போது பொறுப்பு ஆளுநராக இருக்கக்கூடிய அர்லேகர் என்பவர், அரசு நிகழ்வில் ‘வந்தே மாதரம்’ பாடலை முதலில் பாட வைப்பது – தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம்; இப்போது திருவள்ளுவர் திருவிழாவைக் கொண்டாடுகிறோம் என்கிற பெயரால், தமிழ்நாட்டின் உணர்வுகளுக்குச் சவால் விடுவதைப்போல, திருவள்ளுவருக்குக் காவியடித்திருக்கிறார்கள். அதனை எதிர்த்து மிகப்பெரிய ஒரு கிளர்ச்சி அனைவராலும் நடத்தப்படவேண்டிய அவசியம் உருவாக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டாமா?
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசு, ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள அரசு இதையெல்லாம் பார்த்துக் கொண்டு மவுனமாக இருக்கப் போகிறதா? தன்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டாமா? ஆகவே, உடனடியாக இதற்கு நடவடிக்கைகள் தேவை. தமிழ்நாடு முழுவதும் இதைக் கண்டித்து அறப்போராட்டங்கள் வெடிக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.






